இந்திய மாநிலங்கள் எல்லாவற்றிலும் நவோதயா பள்ளிகள் உள்ளபோது தமிழகத்தில் மட்டும் ஏன் விலக்கு? அரசுப் பள்ளிகள் மூலம் தரமான கல்வி தமிழக மாணவர்களுக்கு மட்டும் மறுக்கப்படுவது ஏன்? என்பன போன்ற யாரையும் அசத்தும் கேள்விகளை முன்வைத்து தமிழகத்திலும் நவோதயா பள்ளிகள் திறக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றக் கிளை தமிழக அரசைக் கேட்டுள்ளது.
ஆக தமிழகம் இன்னொரு பிரச்சினையைச் சந்திக்கிறது.
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் வராமற்போன பின்னணியைக் கொஞ்சம் பார்ப்போம்.
1947 தொடங்கி 1986 வரை கல்வியைப் பொருத்தமட்டில் பொதுப்பள்ளி முறை, அருகாமைப் பள்ளிகள் முதலான கருத்துகளே இங்கு முன்மொழியப்பட்டன. முதலில் டாக்டர் இராதாகிருஷ்ணன், பிறகு கோத்தாரி (1966) ஆகியோர் தலைமையிலான கல்விக் கொள்கைகள் குறித்த ஆணையங்கள் எல்லோருக்கும் ஒரே சீரான கல்வி, அதிகச் செலவில்லாத இலவசக் கல்வி, அரசுக் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலம் மட்டுமே போதிக்கப்படும் கல்வி என்கிற கருத்தக்கங்களே முன்னின்றன.
அந்நிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றுள்ளோம் என்கிற உணர்வுடன் எல்லோருக்குமான ஒரு நாடு என்கிற சிந்தனையுடன் இத்தகைய கொள்கைகள் முன் வைக்கப்பட்டன.
கல்வி என்பது மாநிலங்களின் கட்டுப்பாட்டில் அமைவது என்கிற கருத்தாக்கமும் ஏற்றுக் கொள்ளப்பட்டு கல்வி மாநிலப் பட்டியலில் இருந்தது.
முதல் முதலில் இந்த அணுகல் முறைகளில் ஏற்பட்ட ஒரு முக்கிய மாற்றம் இந்திரா காந்தி நெருக்கடி நிலை (1975) அறிவித்தபோது தொடங்கியது. கல்வி மாநிலப் பட்டியலுக்குரியது என்பது மாற்றப்பட்டு பொதுப் பட்டியலுக்குக் கொண்டு வரப்பட்டது. மாநில அரசே கல்விக் கொள்கைகளைத் தீர்மானிப்பது என்கிற நிலை ஒழிந்தது.
எனினும் இன்னும் கூட அரசுப் பள்ளிகள் மற்றும் அரசுக் கல்லூரிகள், அரசுப் பல்கலைக் கழகங்கள், எல்லோருக்குமான பொதுப்பள்ளிகள், அருகாமைப் பள்ளிகள் என்கிற கருத்தாக்கங்கள்தான் மேலோங்கி இருந்தன.
1986 ல் ராஜீவ் காந்திகாலத்தில் முன் மொழியப்பட்ட “புதிய கல்விக் கொள்கை” யில்தான் முதன் முதலாக இரண்டு தனித்தனிப் பாதைகள் (parallel steams) என்கிற கருத்து முன்மொழியப்பட்டது. பொதுப்பள்ளிகள் என்கிற கருத்தாக்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டது.
உலகமயம் தலை எடுக்கத் தொடங்கிய காலம் அது என்பது குறிப்பிடத்தக்கது.
அதை ஒட்டிப் படு வேகமாகக் கல்வித் துறையில் மாற்றங்கள் ஏற்பட்டன. அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் முதலியன இனி இல்லை என்றாகியது. சுய நிதிக் கல்லூரிகள், Deemed Universities, தனியார் பல்கலைக் கழகங்கள், Capitation fee முதலியன உருவாயின. தனியார் கல்வி நிறுவனங்கள் காளான்களாக முளைத்தன. அரசுக் கல்வி நிறுவனங்களிலும் சுய நிதித் துறைகள் புகுத்தப்பட்டன. ஆசிரியர்களிலும் அதிக ஊதியமும் வேலை உத்தரவாதமும் உள்ள நிரந்தர ஆசிரியர்கள், அதே வேலைக்குக் குறைந்த ஊதியம் பெறும் தற்காலிக ஆசிரியர்கள் முதலான அறக்கேடுகளின் உறைவிடமாகக் கல்வித்துறை ஆகியது.
இன்று மூன்றாவது கால கட்டத்தில் நுழைகிறோம்.
மாணவர்களையே இரண்டு தரங்களில் வகைப்படுத்துவது, உயர்கல்விக்கான படிப்பு, skilled labor க்கான படிப்பு என வகுப்பறை தேர்வு முறை ஆகியவற்றை இரண்டாகப் பிரிப்பது எனக் கல்வி இரண்டாகப் பிளந்து கொண்டே போவது உச்ச கட்டத்திற்குச் சென்று கொண்டே உள்ளது. தவிரவும் கல்வியை வணிகச் சேவையாக மாற்றவும் வெளிநாட்டுக் கல்வி வியாபாரிகள் குறைந்த பட்சம் நான்கு வழிகளில் உள்ளே நுழையவும் இன்று வழி வகுக்கப்பட்டுள்ளது.
சரி. இப்போது நவோதயா பள்ளிக்கு வருவோம். ராஜீவ் காலத்தி்ல் 1986 ல் உருவாக்கப்பட்ட ‘புதிய கல்விக் கொள்கை’யில்தான் முதன் முதலாக parallel streams என்கிற கருத்தாக்கம் முன்மொழியப்பட்டு பொதுப்பள்ளிகள் என்கிற கருதாக்கம் ஊத்தி மூடப்பட்டது என்றேன்.
அந்த அறிக்கையில் முன்மொழியப்பட்டதுதான் நவோதயா பள்ளிகள் என்பது. அதாவது மாவட்டங்கள் தோறும் சிறப்புப் பள்ளிகளை அமைத்து அதில் நன்றாகப் படிக்கும் திறமைசாலி மாணவர்களுக்குத் தனிப் பயிற்சி அளிப்பது என்பது திட்டம்.
1986 கல்விக் கொள்கையை, அப்போது மிக வலுவாக இருந்த ஆசிரியர் இயக்கங்கள் கடுமையாக எதிர்த்தன. நாங்கள் எல்லாம் அதில் முன்னணியில் இருந்தோம். அப்போது நான் கல்விக் கொள்கையை எதிர்த்து எழுதிய நூல் மிகப் பெரிய அளவில் ஆசிரியர், மாணவர் மத்தியில் தாக்கத்தை விளைவித்தது.
JACSATO, JACTEA முதலான அரசு ஊழியர்- ஆசிரியர் இயக்கங்கள் மிகப் பெரிய வேலை நிறுத்தங்களை நடத்திக் கொண்டிருந்த கால கட்டம் அது. ஆசிரியராக இருந்து அன்று கல்வி அமைச்சராக ஆகியிருந்த அரங்கநாயகம் ஆசிரிய இயக்கங்களை மதிக்கும் பண்புடையவராகவும் இருந்தார்.
நவோதயா பள்ளிகளை நாங்கள் கடுமையாக எதிர்த்தோம். மாணவர்களைத் தரம் பிரிக்கக் கூடாது என்பது அன்று எழுந்த கோரிக்கையின் அடித்தளம்.
தமிழக அரசிடமும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆசிரியச் சமூகம் ஒன்றிணைந்து அந்தக் கோரிக்கையை வைத்தது. பெரிய விவாதங்கள் ஏதுமின்றி தமிழக அரசு அதை ஏற்றுக் கொண்டது. பெற்றோர்கள் தரப்பிலும் எதிர்ப்பில்லை.
தமிழகத்தில் மட்டும் நவோதயா பள்ளிகள் இல்லாமல் போனதன் பின்னணி இதுதான்.
இப்போது எல்லா அம்சங்களிலும் நிலைமை மாறிவிட்டது. அரசு மட்டும் அல்ல. மக்கள் மத்தியிலும் கருத்துக்களில் மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. உலகமய மதிப்பீடுகளுக்கு அவர்கள் பழக்கப்பட்டு விட்டனர்.
மாணவர்களை தர அடிப்படையில் பிரித்து பயிற்சி அளித்து “உயர் தர” மனப்பாங்குடன் ஒரு வர்க்கத்தை உருவாக்குவதெல்லாம் நீதியில்லை என்கிற கருத்தாக்கம். 1980 களில் பொதுக் கருத்தாக ஏற்றுக் கொள்ளப்பட்டது போல இப்போது ஏற்றுக் கொள்ளப்படுமா?
எல்லாவற்றிலும் அற மதிப்பீடுகளை ஒழிப்பது்ம் வல்லான்களுக்கே இவ்வுலகம் என்பதும்தான் உலகமயத்தின் அடிப்படை.
இதற்கு நாம் பழக்கப்படு விட்டோம்.
நீட் அல்லது ஜல்லிக்கட்டு பொன்றவற்றிற்கு ஏற்பட்ட ஒற்றுமை நவோதயா பள்ளிகள் வேண்டாம் எனச் சொல்வதற்கு ஏற்படுமா?
அச்சமாக இருக்கிறது.
– அ.மார்க்ஸ்