அரசுப்பள்ளியில் மகனைச் சேர்த்த திருக்குவளை வட்டாட்சியர் – குவியும் பாராட்டுகள்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர், நாகை மாவட்டத்தில் உள்ள திருக்குவளையில் வட்டாட்சியராகப் (தாசில்தார்) பணியாற்றி வருகிறார்.

இவர், தனது தொடக்கக் கல்வியை வேதாரண்யம் வடமழை ரஸ்தா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படித்தார், பின்னர் வேதாரண்யத்தில் உள்ள தாயுமானவர் வித்யாலயம் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு வரை படித்தார்.

தொடர்ந்து 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை வேதாரண்யம் சி.த.சுப்பையா அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த இவர், கல்லூரிப் படிப்பை திருவாரூரில் உள்ள திரு.வி.க. அரசுக் கல்லூரியில் தொடங்கினார். அங்கு பி.ஏ. பட்டப்படிப்பு முடித்து விட்டு குரூப்-2 தேர்வு எழுதி வருவாய் ஆய்வாளராகப் பணியில் சேர்ந்த இவர் பின்னர் துணை வட்டாட்சியராகப் பதவி உயர்வு பெற்றார். தற்போது திருக்குவளை வட்டாட்சியராகப் பணியாற்றி வருகிறார்.

வட்டாட்சியராகப் பணியாற்றி வரும் இவர், தான் படித்த வேதாரண்யம் வடமழைரஸ்தா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலேயே தனது 5 வயது மகன் நன்நெறியாளனைச் சேர்த்துள்ளார்.

அந்தஸ்து, வசதி வாய்ப்பு ஆகியவை உயர்ந்தாலும் தனது மகனை அரசுப் பள்ளியில், அதுவும் தான் படித்த பள்ளியிலேயே சேர்த்து படிக்க வைக்கும் தாசில்தார் ரமேசுக்கு பள்ளிக் கல்வித்துறை அதிகாரி தாமோதரன் மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள் ஆகியோர் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.

Leave a Response