சொந்தக் கட்சியினரால் அவமானப்பட்டார் அண்ணாமலை – விவரம்

தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய கல்வி நிதியை ஒன்றிய அரசு தர மறுக்கிறது.இந்தச் சிக்கல் குறித்து நேற்று மக்களவையில் திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பினார்.

அவர் பேசும்போது, பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ரூ.2,000 கோடி வழங்க ஒன்றிய அரசு உறுதி அளித்தது. நாங்கள் தேசியக் கல்விக் கொள்கையை பின்பற்றாததால் தமிழ்நாட்டுக்கு நிதி மறுக்கப்படுகிறது. ஒன்றிய அரசின் இந்தச் செயல், தமிழ்நாடு பள்ளி மாணவர்களின் கல்வியைப் பாதிக்கிறது என்று கூறினார்.

இதற்குப் பதில் அளித்து ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது….

பிஎம் ஸ்ரீ திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசுடன் ஆலோசனை நடத்தினோம். பிஎம் ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழ்நாடு முதலமைச்சர் தயாராக இருந்தார். ஆனால், சூப்பர் முதலமைச்சரின் பேச்சைக் கேட்டு, தேசியக் கல்விக் கொள்கையில் கையெழுத்திடாமல் தமிழ்நாடு அரசு திடீரென ‘யு-டர்ன்’ அடித்தது. உண்மையில், தமிழ்நாடு மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை மாநில அரசுதான் பாழடிக்கிறது. தமிழ்நாடு மாணவர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. அவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது.

தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. பிஎம்ஸ்ரீ பள்ளிகளில் தமிழில் மட்டுமே கல்வி கற்பிக்கப்படும். இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு ஏன் எதிர்க்கிறது என்பது புரியவில்லை. 8 ஆம் வகுப்பு வரை தாய்மொழியில் மட்டுமே பாடங்களைக் கற்பிக்க வேண்டும் என்று தேசியக் கல்விக் கொள்கை உறுதிபட கூறுகிறது. யார் மீதும் எந்த மொழியையும் திணிக்கவில்லை. இந்த விவகாரத்தில் திமுக வேண்டுமென்றே அரசியல் செய்கிறது.

வடமாநில மாணவர்கள் 3 மொழிகளைக் கற்கின்றனர். என் மகள் படிக்கும்போது 3 ஆவது மொழியாக மராத்தி கற்றார். தமிழ்நாட்டில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படுகிறது. அரசியல் காரணமாக மும்மொழிக் கொள்கையை எதிர்க்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தர்மேந்திர பிரதான் பேசும்போது, ‘ஜனநாயகத்துக்கு விரோதமானவர்கள், அநாகரிகமானவர்கள்’ ஆகிய வார்த்தைகளை பயன்படுத்தினார். இதற்கு திமுக பாம உக்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். திமுக உறுப்பினர் கனிமொழி பேசும்போது, ‘‘எங்கள் கவுரவத்தை அமைச்சர் இழிவுபடுத்தி உள்ளார். நாங்கள் அநாகரிகமானவர்கள் என்று விமர்சித்துள்ளார். இதை ஒருபோதும் ஏற்கமுடியாது’’ என்றார். இந்தச் சிக்கல் தொடர்பாக அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீது கனிமொழி உரிமை மீறல் நோட்டீசும் வழங்கினார்.

இதையடுத்து, அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசும்போது, ‘‘தமிழ்நாடு அரசை, தமிழ்நாடு எம்.பி.க்களை, தமிழ்நாட்டு மக்களை அநாகரிகமானவர்கள் என்று நான் கூறியதாகக் கனிமொழி குற்றம்சாட்டுகிறார். நான் அவ்வாறு கூறவில்லை. எனினும், அந்த வார்த்தைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்’’ என்றார். இதைத் தொடர்ந்து, அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்ட வார்த்தைகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.

அதற்கு முன்னதாக,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றிய கல்வி அமைச்சர் பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும். தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா? தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள்.

பிரதமர் நரேந்திர மோடி இதனை ஏற்கிறாரா? NEP, மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு அனுப்பிய பிஎம் ஸ்ரீ, MoU முற்றிலுமாக நிராகரித்து விட்டது என எனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே?

பிரதான் அவர்களே, நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம். உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல. நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது.

தமிழ்நாடு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா? முடியாதா? என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள் என்று பதிவிட்டிருந்தார்.

முதலமைச்சரின் இந்தப் பதிவுக்கு எதிர்வினையாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவில்,

பதட்டத்தில் பிதற்றும் தமிழ்நாடு முதலமைச்சக்கு மூன்று கேள்விகள். முதல் கேள்வி: திமுகவினர் நேர்மையற்ற, நாகரிகமற்றவர்கள் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொன்னதில் என்ன குறை கண்டீர்கள்? உண்மையைத் தானே சொல்லியிருக்கிறார்.

இரண்டாவது கேள்வி: மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்து செயல்படுகிறோம் என்கிறீர்களே, யார் அந்த மக்கள்? உங்கள் மகன், மகள், மருமகன், தனியார் சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நடத்தும் உங்கள் கட்சியினரும் அவர்கள் உறவினருமா?

மூன்றாவது கேள்வி: யார் அந்த சூப்பர் முதல்வர்? ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். உங்கள் சாயம் வெளுத்துவிட்டது. இனியும் தமிழக மக்களை நீங்கள் ஏமாற்ற முடியாது என்று தெரிவித்திருந்தார்.

பாராளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திரபிரதான் பேசியதை நம்பி அண்ணாமலை ஆவேசமாகக் கேள்வி எழுப்பிய அதேநேரம்,பாராளுமன்றத்திலேயே தான் பேசியதைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன் என்று தர்மேந்திரபிரதான் கூறினார்.அதைத் தொடர்ந்து அச் சொற்கள் அவைக்குறிப்பிலிருந்தும் நீக்கப்பட்டன.

பேசிய அமைச்சரே வருத்தம் தெரிவித்து வார்த்தைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டார் அவைக் குறிப்பிலிருந்து அரசாங்கமும் நீக்கிவிட்டது அமைச்சரின் பேச்சை அதை நம்பி கேள்வி எழுப்பிய அண்ணாமலை அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்,அவருக்கு அவரது கட்சியினராலேயே மூக்குடைப்பு நடைபெற்றிருக்கிறது என்கிற கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கின்றன.

Leave a Response