அதிமுக ஒருங்கிணைப்பு – எடப்பாடி கருத்தை நிராகரித்த சசிகலா

அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.அதனால் தமிழ்நாடு அரசியல் கட்சிகளின் கூட்டணிக்கணக்குகள் அவை தொடர்பான வேலைகள் ஆகிய வேலைகள் திரைமறைவில் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கின்றன.

அதேநேரம்,பிரிந்து கிடக்கும் அதிமுகவை ஒருங்கிணைக்கும் வேலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில்,தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தெலுங்கன் குடிக்காடு கிராமத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை அவரது இல்லத்தில் சசிகலா நேற்று நேரில் சந்தித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்…..

இந்தச் சந்திப்பு என்பது அனைத்தும் கலந்தது. இந்த இயக்கம் என்பது தலைவர் எம்ஜிஆர் ஆரம்பித்தது. மக்களுக்காக ஆரம்பித்தது. நல்ல ஆட்சி 2026 இல் கொடுப்போம். அது மக்களாட்சியாக இருக்கலாம். வெளியில் சில பேர் நினைக்கலாம், அதிமுகவை சுக்கு நூறாக உடைத்து விடலாம் என்று.அது எப்படி இருக்கிறது என்றால் கடலில் இருக்கும் தண்ணீரை பக்கெட்டில் எடுத்து வெளியேற்றிவிடுவேன் என்பது போல் உள்ளது.

அதிமுக என்பது பொதுமக்கள் மற்றும் ஏழை மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி. 2026 இல் எல்லோரும் ஒன்றிணைந்து நல்லபடியாக ஆட்சி அமைப்போம். அது தலைவர் எம்ஜிஆர் மற்றும் அம்மா ஜெயலலிதா வழியில் மக்களுக்குப் பிடித்த ஆட்சியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அனைவரும் ஒன்றிணைய வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிச்சாமி கூறி வருகிறார்.இது குறித்து சசிகலாவிடம் கேட்டதற்கு,

இது ஒருத்தர் மட்டும் முடிவு செய்யும் விசயம் இல்லை. எங்கள் கட்சியின் சட்டதிட்ட விதிகள்படி, எங்கள் அடிமட்டத் தொண்டர்கள் என்ன முடிவு செய்கிறார்களோ அதுதான் நடக்கும். அதை நாங்கள் நல்லபடியாகச் செய்வோம் என்றார்.

Leave a Response