
இந்திய ஒன்றிய அளவில் மேற்கொள்ளப்படும் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு நடவடிக்கையினால் தமிழ்நாட்டிற்கு ஏற்படப்போகும் பேராபத்தைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
அதேநாளில்,தில்லியில் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, மாநிலத் திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
அதன்பின், செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறியதாவது….
இன்று மிக முக்கிய 3 சந்திப்புகள் நடைபெற்றது. அதில், ஒன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடனான சந்திப்பு. இரு கட்சிகளின் இடையே நடக்கும் வழக்கமான சந்திப்பு தான் இது. எங்களின் யோசனைகளை பரிமாறிக் கொண்டதுடன், தேசிய சனநாயகக் கூட்டணியின் அடுத்தகட்ட செயல்திட்டம் குறித்து ஆலோசனை நடத்தினோம். அதேவேளையில், நில அபகரிப்பு (தடை) சட்ட மசோதா, கடந்த 5 ஆண்டுகளாக மாநிலத்தில் பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது. நில அபகரிப்பு மற்றும் அது தொடர்பான மனுக்களும் பெரும் சவாலாக இருக்கின்றன.குஜராத் மாநிலத்தில் இதனை சிறப்பாக அமல்படுத்தியுள்ளனர். தற்போது ஆந்திர சட்டசபையில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது, இதற்கு ஒப்புதல் பெறுவதற்காக தில்லிக்கு வந்துள்ளோம். விரைந்து இதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
நாடாளும்ன்றத் தொகுதி மறுவரையறை செய்வது தொடர்பாக தற்போது வரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அதனை எப்படி கணக்கிடுவது என்பதற்கான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆனால், இது தாமதமான ஒன்று. சரியான நேரத்தில் இது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை செய்யும் என்று நம்புகிறேன்.
ஒவ்வொருவரும் மக்கள் தொகை எண்ணிக்கை குறித்து கவனம் செலுத்த வேண்டும்.குடும்பக் கட்டுப்பாட்டை ஊக்குவிக்கும் நான், தற்போது என் நிலைப்பாட்டை மாற்றியுள்ளேன். அதிகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்பவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். மக்கள்தொகை அதிகமாக இருப்பது நல்லதுதான்
இவ்வாறு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைக்கான மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை நிர்ணயிப்பது என்கிற முடிவின் மூலம்,மக்கள் தொகை கட்டுப்பாட்டை சிறப்பான முறையில் கடைப்பிடித்த தமிழ்நாட்க்குத் தண்டனை தரும் செயலை ஒன்றிய அரசு செய்யப் போகிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார்.
அவருடைய கருத்தை ஆதரிக்கும் விதமாக குடும்பக் கட்டுப்பாடு விசயத்தில் என் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டேன்.அதிகக் குழந்தைகள் பெறுவதை ஊக்குவிக்க வேண்டும் என்று சந்திரபாபு பேசியுள்ளார்.
பாஜக ஆட்சிக்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கும் சந்திரபாபு, அமித்ஷா சந்திப்புக்குப் பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு ஆதரவாகப் பேசியிருப்பதும் தொகுதி மறுவரையறை தொடர்பாக அவர் சொன்ன கருத்தும் பாஜகவினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.


