காவல்துறை விசாரணையில் நடந்ததென்ன? – சீமான் விளக்கம்

சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்​சுமி அளித்த புகாரின்​பேரில், சென்னை வளசர​வாக்கம் காவல்துறையினர் பாலியல் துன்​புறுத்தல் உள்ளிட்ட பிரிவு​களின் கீழ் வழக்குப் பதிவு செய்​தனர். இதை இரத்து செய்யக் கோரி உயர் நீதி​மன்​றத்​தில் சீமான் மனு தாக்கல் செய்​தார். ஆனால், வழக்கை இரத்து செய்ய மறுத்த நீதி​மன்​றம், 12 வாரத்​துக்​குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்​யு​மாறு உத்தர​விட்​டது.

இதனால்,விசாரணைக்காக சீமானுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது.ஆனால் அவர் காவல் நிலை​யத்​தில் ஆஜராக​வில்லை.

இதையடுத்து, நீலாங்​கரை​யில் உள்ள சீமான் வீட்​டின் கதவில் வியாழக்கிழமை மீண்​டும் அழைப்பாணை ஒட்டப்​பட்டது. அதில், பிப்ரவரி 28 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆஜராகத் தவறினால், கைது நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது.

இதனையடுத்து நேற்றிரவு ஒன்பது மணியளவில் வளசரவாக்கம் காவல் நிலையம் சென்றார் சீமான்.

அவரிடம் சுமார் 1 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.இந்த வழக்கு தொடர்பாக சுமார் 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதற்கு சீமான் அளித்த பதில்கள் அனைத்தும் எழுத்துப்பூர்வமாகவும், காணொலியாகவும் பதிவு செய்யப்பட்டது. காவல் துறையின் இணை ஆணையர் அதிவீர பாண்டியன், உதவி ஆணையர் செம்பேடு பாபு மற்றும் வளசரவாக்கம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ஆகியோர் சீமானிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணைக்குப் பின்னர் பத்திரிகையாளர்களை சீமான் சந்தித்தார்.

அப்போது..

காவல்துறை விசாரணையில் சென்ற முறை கேட்ட அதே கேள்விகளையே இந்த முறையும் கேட்டனர். புதிய கேள்விகள் ஏதும் கேட்கப்படவில்லை. விசாரணைக்குத் தாமதமாக வர காவல் துறையினரே காரணம். என்னை அவமானப்படுத்த வேண்டுமென்ற நோக்கில் இந்தக் குற்றச்சாட்டை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். விசாரணைக்கு மீண்டும் தேவைப்பட்டால் ஆஜராக தயார். விசாரணையில் என்ன நல்ல முறையில் நடத்தினர்.

இந்த வழக்கை விசாரித்து முடிக்க மூன்று மாதம் கால அவகாசம் உள்ளது. மூன்றே நாளில் இதை விரைந்து செய்ய வேண்டிய அவசியம் என்ன? எனக்கு சம்மன் கிடைத்த போது நான் பயணத்தில் இருப்பதாக தெரிவித்தேன். மீண்டும் கொடுத்த சம்மனை அடுத்து விசாரணைக்கு ஆஜரானேன். காவல்துறைக்கு இந்த வழக்கில் அழுத்தம் தரப்படுகிறது. ஆளும் திமுக அரசு இந்த வழக்கை நீட்டித்துக் கொண்டு செல்கிறது.

என் வீட்டின் கதவில் ஒட்டப்பட்ட சம்மனை அகற்றியதில் எந்தத் தவறும் இல்லை. எங்கள் வீட்டில் இருந்த இருவரைக் கைது செய்ததும், அவர்களைத் தாக்கியதும் தவறு. சம்மனை ஒட்டியது வளசரவாக்கம் காவல் நிலைய அதிகாரிகள். அப்படி இருக்கும் போது நீலாங்கரை காவல் நிலைய அதிகாரிகள் ஏன் எங்கள் வீட்டில் இருந்தவர்களைக் கைது செய்ய வேண்டும்.

கருணாநிதி என்னைக் கைது செய்து தலைவர் ஆக்கினார். இப்போது இவர்கள் என்னைக் கைது செய்து முதல்வர் ஆக்க உள்ளனர். கடந்த தேர்தலில் தனித்து நின்று அடையாளம் பெற்றோம். எங்களுக்கு 36 இலட்சம் வாக்குகள் விழுந்தன. வாக்குக்குப் பணம் கொடுக்காமல் இதைப் பெற்றுள்ளோம். என் மீதுள்ள நற்பெயரை சிதைக்கும் வகையில் அரசு இதை செய்துள்ளது.

புகார் அளித்த நடிகை கடந்த 15 ஆண்டுகளாக என்னை அவமானப்படுத்தி வருகிறார். விரும்பி வந்து அவர் உறவு வைத்துக் கொண்டார். எனக்கு திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகிவிட்டது. குழந்தைகள், குடும்பம் ஆகிவிட்டது. என் மீதான பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்டதா?

அரசியல் களத்தில் நான் ஒரு பக்கமும், விஜய் ஒரு பக்கமும் நிற்கிறார். என்றைக்கும் அவர் எனது அன்புத் தம்பி தான். மாண்புமிகு முதல்வர் அப்பா ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

இவ்வாறு சீமான் கூறினார்.

Leave a Response