உலக வரலாற்றில் முதன்முறையாக – அமெரிக்க அதிபரை நேருக்குநேர் எதிர்த்துப் பேசிய உக்ரைன் அதிபர்

இதுபோன்ற எதையும் நாங்கள் இதற்கு முன்பு பார்த்ததே இல்லை என்று அமெரிக்காவைச் சேர்ந்த சக ஊடக நண்பர்கள் எங்களிடம் தெரிவித்தனர்.

“வெள்ளை மாளிகையில் இதுபோன்ற ஒரு காட்சியை கற்பனை செய்து பார்க்கவே முடியாது,” என்று ஒருவர் என்னிடம் கூறினார்.

செய்தியாளர்கள் ஓவல் அலுவலகத்தை விட்டு வெளியேறியதும், பலர் அதிர்ச்சியில் அசையாமல் நின்றிருந்தனர். சிறிது நேரத்திற்குப் பிறகு, தலைவர்களின் சந்திப்பில் நிகழ்ந்த பேச்சுவார்த்தை முழுமையாக வெள்ளை மாளிகையில் உள்ள பத்திரிகையாளர் அறையில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதனை அங்கிருந்த பத்திரிகையாளர்கள் நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இவ்வாறு உக்ரேனின் பிபிசி செய்தியாளர்கள் விவரித்த அதிர்ச்சி நிகழ்வு அமெரிக்காவில் நடந்தேறியது.உலக வரலாற்றில் முதன்முறையாக இப்படி ஓர் நிகழ்வு நடந்ததாகச் சொல்லப்படுகிறது.

ரஷியா உடனான போரில் உக்ரைனுக்கு 3 ஆண்டுகளாக அமெரிக்கா செய்த நிதியுதவிக்குப் பதிலாக, உக்ரைனில் உள்ள அரியவகை கனிம வளங்களின் உரிமையை காலவரையில்லாமல் வழங்க ட்ரம்ப் கேட்டுள்ளார்.இது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக அமெரிக்கா சென்றார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.

அந்த நிகழ்வு சுமுகமாக முடியாமல் பெரும் வாக்குவாதமாக மாறியது. உலகம் பார்க்க நடந்த அந்த வாக்குவாதத்தில், போரில் உக்ரைனுக்கு உத்தரவாதம் அளித்தால் ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயார் என ஜெலன்ஸ்கி தெரிவிக்க, உத்தரவாதம் அளிக்க ட்ரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமலும், மதிய உணவைப் புறக்கணித்தும் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார்.

இந்த நிகழ்வு குறித்துதான் மேற்கண்ட விவரிப்பு.

அவர்கள் மேலும் கூறியிருப்பதாவது….

அமெரிக்காவில் அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை வெளிநாட்டு பிரமுகர்களை சந்திக்கும் ஏற்பாடுகளுடன் ஒரு வழக்கமான நாளாக தொடங்கியது.

யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெஸ்ட் விங் வாசலில் மரியாதையுடன் வரவேற்றார். இரு தலைவர்களும் கைகுலுக்கிக் கொண்டனர்.

யுக்ரேன் ஊடகக் குழுவில் நாங்கள் ஓவல் அலுவலகத்தில் இருந்தோம். முன்பே திட்டமிடப்பட்டிருந்த வழக்கமான சம்பிரதாயங்களையும் சுமார் அரை மணி நேர கண்ணியமான பேச்சையும் கண்டோம்.

ஜெலன்ஸ்கி டிரம்பிற்கு யுக்ரேனிய குத்துச்சண்டை வீரர் ஒலெக்சாண்டர் உசிக்கின் சாம்பியன்ஷிப் பெல்ட்டை வழங்கினார்.

ஜெலன்ஸ்கியின் உடையை டிரம்ப் பாராட்டினார்.

இதுவரை, எல்லாமே இராஜ தந்திர ரீதியில் அமைதியாக நகர்ந்தது.

ஆனால் சில நிமிடங்களிலேயே நிலைமை முன்னெப்போதும் இல்லாத வகையில் மாறியது. அன்பான தொனி கோபமாகவும் குழப்பமாகவும் மாறியது. உரத்த குரல்களையும், கோபம் கொப்பளிக்கும் கண்களையும், எதிர்பார்ப்புகளுடன் இருந்த முகத்தையும் உலக தொலைக்காட்சிகளின் கேமராக்கள் படம் பிடித்தன.

உலக தொலைக்காட்சிகளின் கேமராக்கள் முன்பாகவே, அமெரிக்க அதிபரும் துணை அதிபரும் யுக்ரேன் அதிபரை கண்டித்தனர், யுக்ரேனின் போர் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்த அமெரிக்காவுக்கு ஜெலன்ஸ்கி போதுமான அளவு நன்றியுள்ளவராக இல்லை என்று அவர்கள் இருவரும் குற்றம் சாட்டினர்.

துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், போரை ராஜ தந்திர நகர்வுகள் மூலம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று ஜெலன்ஸ்கியிடம் கூறிய போது பதற்றம் அதிகரித்தது.

எப்படிப்பட்ட ராஜ தந்திரம்? என்று ஜெலன்ஸ்கி கேட்டார்.

ஓவல் அலுவலகத்திற்கு வந்து அமெரிக்க ஊடகங்கள் முன்பாகவே வாதிடுவது அவமரியாதை என்று யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் வான்ஸ் கூறினார். டிரம்பின் தலைமைக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுததினார்.

அறையில் இருந்த பத்திரிகையாளர்கள் ஒரு அசாதாரண நிகழ்வை தொடர்ந்து அதிர்ச்சி மேலிட பார்த்துக் கொண்டிருந்தனர்.

“நீங்கள் போதும் போதும் எனும் அளவுக்கு பேசிவிட்டீர்கள். நீங்கள் இதில் வெல்லவில்லை,” என்று ஒரு கட்டத்தில் ஜெலன்ஸ்கியிடம் டிரம்ப் கூறினார்.

“நீங்கள் நன்றியுடன் இருக்க வேண்டும். இந்த ஆட்டத்தில் தொடர்ந்து நீடித்திருக்க உங்களிடம் ஏதும் இல்லை.” என்றார் டிரம்ப்.

“நான் விளையாடவில்லை,” ஜெலன்ஸ்கி பதிலளித்தார்.

“நான் மிகவும் உறுதியுடன் இருக்கிறேன் அதிபர் அவர்களே. நான் போரில் ஈடுபட்டுள்ள ஒரு நாட்டின் அதிபர்” என்றார் ஜெலன்ஸ்கி.

“நீங்கள் மூன்றாம் உலகப் போர் உருவாகும் நெருக்கடியுடன் விளையாடுகிறீர்கள்,” என்று டிரம்ப் பதிலளித்தார்.

“நீங்கள் செய்வது நாட்டிற்கு, இந்த நாட்டிற்கு மிகவும் அவமரியாதையானது.” என்றார் டிரம்ப்.

“இந்த முழு சந்திப்பிலும் ஒரு முறையாவது ‘நன்றி’ என்று சொன்னீர்களா? இல்லை” என்று வான்ஸ் குறிப்பிட்டார்.

அமெரிக்காவுக்கான யுக்ரேன் தூதர் தனது தலையில் கைகளை வைத்துக் கொண்டு அந்த நிகழ்வுகளை நேரில் பார்த்துக் கொண்டிருந்தார்.

சில நிமிடங்களில் அங்கே சூழல் முற்றிலுமாக மாறியிருந்தது.அங்கே ஒரு குழப்பம் ஏற்பட்டது.

திட்டமிடப்பட்டபடி, செய்தியாளர் சந்திப்பு நடக்குமா அல்லது அமெரிக்காவிற்கும் யுக்ரேனுக்கும் இடையே கனிம வளங்கள் தொடர்பாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகுமா என்பது குறித்து உடனடி கேள்விகள் எழுந்தன.

சில நிமிடங்களுக்குப் பிறகு, டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகப் பக்கத்தில் ஜெலன்ஸ்கி “அமைதிக்குத் தயாராக இருக்கும் போது திரும்பி வரலாம்” என்று பதிவிட்டார்.

வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையில் நடைபெறவிருந்த செய்தியாளர் சந்திப்பு மற்றும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வு அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டது.

ஜெலன்ஸ்கி வெளியே வந்து, அங்கே காத்திருந்த ஒரு எஸ்.யூ.வி. காரில் ஏறிய சிறிது நேரத்திலேயே, அவரது தூதர் அவரை பின்தொடர்ந்தார்.

உலகம் ஒரு அசாதாரண தருணத்தை ஜீரணிக்கத் தொடங்கியிருந்த போது அவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.முழு வீச்சிலான ஒரு வாக்குவாதம் நடந்துவிட்ட போதிலும், விரைவிலோ அல்லது சற்று கால தாமதமாகவோ ஒரு கனிம ஒப்பந்தத்திற்கான சாத்தியம் இருக்கவே செய்கிறது.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், ஜெலன்ஸ்கியின் இந்த அமெரிக்க வருகை முற்றிலும் மாறுபட்ட காரணங்களுக்காக நினைவுகூரப்படும்.

இவ்வாறு அவர்கள் எழுதியுள்ளனர்.

Leave a Response