தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கும் வரை விதிகளின்படி தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்க முடியாது என ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.ஒன்றிய அமைச்சரின் இந்தக் கருத்துக்கு தமிழ்நாட்டில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது….
தேசிய அளவில் கல்வியில் பிகார், இராஜஸ்தான், ஏன் குஜராத்துடன் தமிழ்நாட்டுடன் ஒப்பிடுகையில் பாதி அளவிற்கு கூட அம்மாநிலங்கள் வர முடியாத நிலை உள்ளது. அண்ணா கூறியபடி தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருமொழிக் கொள்கையைச் சிறப்பாகச் செயல்படுத்தி உலக அளவில் இன்றைக்கு நம் இளைஞர்கள் பல சிறந்த பணிகளிலும் அரசு உயர் பொறுப்புகளிலும் இருக்கிறார்கள். இருமொழிக் கொள்கையில் குறை மட்டும் இல்லை என்பதைத் தாண்டி நிறை இருக்கிறது என்பதையும் நிரூபித்துள்ளோம்.
இருமொழிக் கொள்கை கூட செயல்படுத்த முடியாத பல மாநிலங்களில் ஒரு மொழியை வைத்து அதையும் கூட சரியாக செயல்படுத்தாத மாநிலங்கள் நீங்கள் எங்களுடைய கொள்கையைத் தான் பயன்படுத்த வேண்டும் எனச் சொல்வது பொருத்தமற்றது. ஆனால், கொள்கை விருப்பமாக சட்டத்தில் இடம்பெறாத புதிய கல்விக்கொள்கையை கொண்டு வந்து விட்டு நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் உங்களுக்கு ஜனநாயக முறைப்படி சட்டமைப்பு படி 15 ஆவது நிதிக்குழுபடி தர வேண்டிய நிதியைத் தர முடியாது எனச் சொல்கிறார்கள். இது கொடூரமான சர்வாதிகாரி செய்யும் வேலை.
மக்கள் வரிப்பணத்தை வைத்து அரசியல் செய்கிறோம் என்பதை ஒன்றிய அமைச்சர் தனது வாயாலே ஒப்புக்கொண்டு விட்டது நல்ல விசயமாகும்.ஒன்றிய அமைச்சரின் கருத்து சட்டமைப்பில் எங்கே இடம் பெற்றுள்ளது என மிகத் தெளிவாக முதலமைச்சர் கேள்வி எழுப்பி உள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் இந்த விவகாரம் போய் நிற்கப் போகிறது. ஒரு மாநில நிதிக்குழுவின் பரிந்துரையின்படி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பரிந்துரையை ஏற்று வழங்கப்பட வேண்டிய பணத்தை வழங்காமல் இருப்பதும், இதைச் செய்தால்தான் நிதி என்று கட்டாயப்படுத்தி வெளிப்படையாகப் பேசி இருப்பது சட்டமைப்புக்கு விரோதமானது. சட்ட அமைப்பால் நடத்தப்படுகிற ஒரு நாட்டில் ஒன்றிய அமைச்சரின் வார்த்தையை நீதிமன்றம் கண்டிக்கும் என நான் நம்புகிறேன்
இவ்வாறு அவர் கூறினார்.