எடப்பாடி பழனிச்சாமியின் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டுக்கு நேற்று காலை 11 மணி அளவில் பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி சென்றார். இருவரும் 30 நிமிடம் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பு அதிமுகவுடன் பாமக கூட்டணி சேரும் வகையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
2021 சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுகவுடன் பாமக கூட்டணி சேர்ந்து போட்டியிட்டது.அதன்பின்னர் 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது,பாமக நிறுவனர் இராமதாசு அதிமுகவுடன் கூட்டணி சேர விரும்பினார். ஆனால் அவர் மகன் அன்புமணி, பாஜவுடன் கூட்டணி சேர்ந்தே ஆகவேண்டும் என்று நெருக்கடி கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதன்காரணமாக கடைசி நேரத்தில் பாமக, பாஜவுடன் கூட்டணி சேர்ந்தது.
இந்நிலையில் சமீபத்தில் கட்சி நிர்வாகிளிடம் பேசிய பாமக நிறுவனர் இராமதாசு, கூடா நட்புகேடாக முடிந்ததாகக் கூறினார்.
இதனால்,2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர மருத்துவர் இராமதாசு விரும்புவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஜி.கே.மணியின் சந்திப்பு நடந்துள்ளது.எனவே, இது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது.
அதே நேரம்,ஜி.கே.மணி மைத்துனரின் மகனுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்கத்தான் எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்கு அவர் சென்றார் என பாமக தரப்பினர் கூறுகின்றனர்.
அதே சமயம், ஜி.கே.மணி எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் வேலுமணி, எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து நீண்டநேரம் பேசினார்.
இதனால்,2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர பாமக முன்வந்திருப்பது உறுதியாகியிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
உண்மையிலேயே இது கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கான சந்திப்பா? இதற்கு அன்புமணியின் ஆதரவு உண்டா? என்கிற கேள்விகளெல்லாம் எழுந்திருக்கின்றன.போகப்போகத்தான் இவற்றிற்கு விடை கிடைக்கும் எனச் சொல்லப்படுகிறது.