ஈரோடு கிழக்கு வேட்பாளர் அறிவிப்பில் அதிருப்தி – பரபர பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் இன்று காலை அறிவிக்கப்பட்டார்.

இத்தொகுதி வேட்பாளராக ஆ.செந்தில்குமார் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுவிட்டார்.

இதைத் தொடர்ந்து ஆ.செந்தில்குமார் வெளியிட்டுள்ள பதிவு…..

வீழ்வது நானாக இருப்பினும், வாழ்வது கழகமாக இருக்கட்டும்.

வணக்கம்..

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது, ஏற்பட்ட *துரோக வலியினால்* இனிமேல் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு செய்வதில்லை என எனது முகநூலில் பதிவு செய்திருந்தேன். அதுபோலவே நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருப்ப மனு கொடுக்கவில்லை. அதேபோல், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் என வந்த பின்பும் நான் கேட்க வேண்டாம் என அமைதியாகத்தான் இருந்தேன். ஆனால் சமூக ஊடங்களிலும், தினசரி நாளிதழ் மற்றும் பல்வேறு ஊடகங்கள் எனது பெயரை முன் நிறுத்தியதும், அதைத்தொடர்ந்து கழக நிர்வாகிகள், கழகத் தோழர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர், அவசியம் கேள் இந்த முறை உனக்குத் தான் வாய்ப்பு என உற்சாகமூட்டியதும், நானும் சராசரி மனிதனாய் பதவி சபலம் ஏற்பட்டு, அனைத்து தகுதிகளும் இருப்பதாய் எனக்கு நானே எண்ணிக்கொண்டு அதற்கான முயற்சியை முன்னெடுத்தேன்.

நீண்ட நாட்களாக கழகப்பணியாற்றி வந்தாலும், ஈரோடு தொகுதி பல ஆண்டுகளாக மாவட்டசெயலாளர் அல்லது மாற்றுகட்சியிலிருந்து வரும் விவிஐபி களுக்கு என்று ஒதுக்கப்படுவதால் என்னைப்போன்றவர்களின் பெயர்கள் பரிசீலனைக்கே எடுக்கப்படுவதில்லை.

1980ல் திரு.சாயிநாதன் (மொடக்குறிச்சி தொகுதியை சேர்ந்தவர்) காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது,

1984, 1989 திருமதி.சுப்புலட்சுமி ஜெகதீசன் (மொடக்குறிச்சி தொகுதியை சேர்ந்தவர் ),

1991 திரு.கணேசமூர்த்தி மாவட்ட செயலாளர்,(மொடக்குறிச்சி தொகுதியை சேர்ந்தவர்),

1996,2001 திரு.NKK பெரியசாமி மாவட்ட செயலாளர்(பவானி தொகுதியை சேர்ந்தவர்)

2006 திரு. NKKP ராஜா மாவட்ட செயலாளர் (பவானி தொகுதியை சேர்ந்தவர்),

2011 திரு. சு.முத்துசாமி,

2016 திரு. வி.சி.சந்திரகுமார்,

2021 திருமகன் ஈவெரா , (காங்கிரஸ் கட்சி)

இப்படி ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் ஈரோடு தொகுதியை குறி வைப்பதால் என்னை போன்ற ஈரோட்டை பூர்வீகமாக கொண்ட கழக நிர்வாகிகளின் பெயர்கள் பரிசீலனைக்கே வராமல் போய்விட்டது.

கட்சியின் நலன் கருதி மாவட்ட செயலாளர்களை எதிர்த்து போராடியதால், அப்போதெல்லாம் எவ்வித பொறுப்பிற்கும் வர முடியவில்லை. தற்போது மாவட்ட செயலாளரை அனுசரித்து அவருடன் இருந்தாலும் வாய்ப்பைப் பெற முடியவில்லை.

ஏனென்றால் நான் எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கமாட்டேன் என்பதாலும், இவன் எம்.எல்.ஏ ஆனால் கட்சியையும் கைப்பற்றி விடுவானே என்றும், எம்.எல்.ஏ என்ற நிலை மட்டும் இருந்தால் பரவாயில்லை அடுத்த நிலை அங்கீகாரத்திற்கு வந்து விடுவானே என்றும் பயந்த சிலர் எனக்கு வரும் வாய்ப்பை தட்டி விட்டனர்.

ஒவ்வொரு தேர்தலின் போதும் சில துரோகங்களால் நான் வீழ்த்தப்படுகிறேன். துரோகம் செய்யும் நபர்கள் மாறுகிறார்களே தவிர பாதிக்கப்படுபவன் நான் மட்டுமாகவே இருக்கிறேன்.

“எதிரிகள் தாக்கித் தாக்கி வலுவிலக்கட்டும், நான் தாங்கித் தாங்கி வலுப்பெறுகிறேன்”
என்ற பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதை மனதில் வைத்தும்,

உடன்பிறப்பே,
ஓய்வின்றி உழைத்திடு !
ஒரு கலங்கமுமின்றி கடமையாற்றிடு !!
மக்களின் பார்வை உன் மீது..!!!
என்ற தலைவர் கலைஞர் அவர்களின் வரியினை நெஞ்சில் சுமந்தும்,

“அஞ்சாத சிங்கம் என் காளை இது பஞ்சாய் பறக்க விடும் ஆளை”
என்ற பாடலை என் தாய் பாடுவது போன்ற உணர்வுடன்

எப்போதும் போல் *தடுமாறாமல், தடம் மாறாமல்* அணுவளவும் இயக்கத்திற்கு துரோகம் இழைக்காமல் “வீழ்வது நானாக இருப்பினும், வாழ்வது கழகமாக இருக்கட்டும்” என்று தலைவர் தளபதி அவர்கள் தலைமையில் கழக பணியாற்றுவேன் என்று கழகத் தலைமைக்கும், கழகத் தோழர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நினைத்த நல் உள்ளங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு
உணர்வுடனும், மகிழ்வுடனும், கலங்காத மனதுடனும்…

*ஆ.செந்தில்குமார்*
மாவட்ட துணைச் செயலாளர்
ஈரோடு தெற்கு மாவட்ட திமுக

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Response