என் பேச்சை நானே கேட்கமாட்டேன் – விஜய் பேசிய வசனமே அவருக்கு எதிரியானது

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்பது உட்பட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆளுநரிடம், தவெக தலைவர் நடிகர் விஜய் மனு வழங்கினார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை கண்டித்து அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. இச்சம்பவத்துக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் ஏற்கெனவே கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை நேற்று விஜய் சந்தித்தார். அப்போது 3 பக்கங்கள் கொண்ட கோரிக்கை மனுவை வழங்கினார்.

அந்த மனுவில், ‘தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை ஒன்றிய அரசு முழுமையாக வழங்க வேண்டும்’’ என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக் கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, கோரிக்கைகளை பரிசீலிப்பதாக விஜய்யிடம் கூறினார். இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்றது. அப்போது, ஆளுநருக்கு திருக்குறள் புத்தகத்தை விஜய் வழங்கினார். பதிலுக்கு ஆளுநரும் பாரதியார் கவிதை தொகுப்பை நடிகர் விஜய்க்கு வழங்கினார். இதையடுத்து, அங்கிருந்து விஜய் காரில் புறப்பட்டுச் சென்றார். இந்த சந்திப்பின்போது, தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

நடிகர் விஜய் ஆளுநரை சந்தித்து மனு வழங்கியிருப்பது பேசுபொருளாக மாறி இருக்கிறது.அக்டோபரில் நடந்த தவெக மாநாட்டில் ‘ஆளுநர் பதவியை இரத்து செய்ய வேண்டும்’ என தீர்மானம் நிறைவேற்றிய விஜய், தற்போது ஆளுநரைச் சந்தித்து மனு அளித்திருப்பதை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.

போக்கிரி என்கிற படத்தில், நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்சை நானே கேட்கமாட்டேன் என்று வசனம் பேசியிருந்தார் விஜய்.

அந்த வசனத்தைப் பகிர்ந்து விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.இது விஜய்க்குப் பின்னடைவு என்று சொல்லப்படுகிறது.

Leave a Response