அதிமுகவுக்கு வாழ்த்து சொன்ன பவன்கல்யாண் – ஓபிஎஸ் நன்றி இபிஎஸ் புறக்கணிப்பு

அதிமுக 53 ஆவது தொடக்கநாள் நேற்று அக்கட்சியினரால் கொண்டாடப்பட்டது. அதையொட்டி ஆந்திர மாநிலத்தின் துணைமுதலமைச்சர் அக்கட்சியினருக்கு வாழ்த்து தெரிவித்து தமிழிலும் ஆங்கிலத்திலும் சமூகவலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார்.

அவர் பதிவு…

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் 53 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த நன்நாளில், அதனது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமைக்கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

1972-ஆம் ஆண்டு அக்டோபர் 17-ஆம் நாள், புரட்சித் தலைவர் திரு. எம்.ஜி.ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) அவர்கள் தொடங்கிய அதிமுக தமிழ்நாட்டில் மிக குறுகிய காலத்தில் ஆற்றல்மிக்க அரசியல் சக்தியாக உயர்ந்து ஆட்சி கட்டிலிலும் அமர்ந்து வரலாறு படைத்தது. எம்.ஜி.ஆர் அவர்கள் எளிய மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு ஆழமான அர்ப்பணிப்புடன் செயல்பட்டார். பசி அறியாது, ஒவ்வொருவரும் கண்ணியமாக வாழ்வதை உறுதிப்படுத்த வரலாற்று சிறப்பு மிக்க பல மக்கள் நலத்திட்டங்களை கொண்டுவந்து செயல்படுத்தினார்.

தொலைநோக்கு கொண்ட அவரது எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களே அவரது பெருமைக்கு இன்றும் சான்றாக திகழ்கின்றன.தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் மக்கள் நலன் ஆகியவற்றை தனது நிர்வாகத்தின் இரு கண்களாக கருதி அவர் செயலாற்றியதே தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி மாநிலமாக மாற்றியது.

அந்நேரத்து மக்கள் பிரச்சனைகளை, உடனடி தேவைகளை பூர்த்தி செய்வதோடு நில்லாமல், தொலை நோக்கோடு சீரான நீண்டகால வளர்ச்சிக்கு அடித்தளமிட்டு அவர் செயலாற்றினார். நல்லாட்சிக்கும் நிர்வாகத்திற்கும் புரட்சித் தலைவரை எனது ஆசானாக நான் கருத இதுவே காரணம்.

புரட்சித்தலைவரின் மறைவுக்கு பிறகு அவர் விட்டுச்சென்ற பாரம்பரியத்தை கட்டிக்காத்ததோடு மட்டுமல்லாது தொலைநோக்கு கொண்டு தனது நிகரில்லா தலைமையால் மேலும் பல சாதனைகளை படைத்த பெருமை “புரட்சித் தலைவி” ஜெயலலிதா அவர்களை சாரும். “மக்களால் நான் மக்களுக்காகவே நான்” என்று தமிழக மக்களுக்காக அர்ப்பணிப்புடனும் தாயன்புடனும் அவர் செய்யலாற்றியதே தமிழக மக்கள் அவரை “அம்மா” என்று அன்போடு அழைக்க காரணமானது.

‘ஒன்றே குலம்’ என்ற அண்ணா வழியில் அண்டை மாநில மக்கள் மீதும் புரட்சித் தலைவி கொண்டிருந்த மரியாதை போற்றுதலுக்குறியது.

தெலுங்கு மொழியில் சிறந்த புலமை கொண்டிருந்த
புரட்சித்தலைவி ஜெயலலிதா எம்மக்கள் மீதும் மிகுந்த அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தியது, மகாகவி
பாரதியார் எழுதிய
“சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து

தோணிகளோட்டி விளையாடி வருவோம்”

என்ற ஒருமைப்பாட்டை பறை சாற்றும் வரிகளை நினைவூட்டும் வகையில் அமைந்தது.

எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆற்றல் மிக்க, சிறந்த தலைமையின் கீழ், எம்.ஜி.ஆர் அவர்களின் கொள்கைகளை அதிமுக தொடர்ந்து காப்பாற்றி வருகிறது. பல சவால்களை எதிர்கொண்டிருக்கும் போதிலும் இக்கட்சி தமிழ்நாட்டின் அடித்தட்டு மக்களின் உரிமைக்குரலாய் எம்.ஜி.ஆர் வழியில் இன்றும் திகழ்கிறது.

புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதாவின் காலத்திலும், அவரது மறைவுக்கு பிறகும் அதிமுக அரசின் முதலமைச்சராக அவரது வழியில் சிறப்பாக செயலாற்றிய திரு. ஓ. பன்னீர் செல்வம்
அவர்களுக்கும் இந்த நன்நாளில் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

எனது ஜனசேனா கட்சி சார்பாக அதிமுக தொண்டர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எம்.ஜி.ஆர் அவர்களின் கனவுகளை நிறைவேற்றி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டு, மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வழியில் அதிமுக தமது பாரம்பரியத்தை நிறைவேற்ற வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன்.

தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் தமிழர்களின் போராட்ட குணத்தின் மீது மிகுந்த மரியாதை கொண்டவன் நான்.

தெய்வப்புலவர் திருவள்ளுவரின் பூமி தமிழ் நாடு.

சித்தர்களும், ஞானிகளும் வாழ்ந்த புண்ணிய பூமியான தமிழகம் அவர்களின் அருளாசிகளால் என்றும் தழைத்தோங்கட்டும்.

இவ்வாறு அவர் பதிவிட்டிருக்கிறார்.

பவன் கல்யாணின் இந்த வாழ்த்துக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

அதேசமயம்,அதிமுகவை வாழ்த்தும் பதிவில் ஓ.பன்னீர்செல்வம் பெயரையும் குறிப்பிட்டிருப்பதால் எடப்பாடி பழனிச்சாமி இந்த வாழ்த்துக்குப் பதிலளிக்கவில்லை.அவருடைய ஆதரவாளர்கள் பவன்கல்யாணைத் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் சிலர், அதிமுகவை ஒருங்கிணைக்கும் நீங்கள் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Leave a Response