வக்கிரங்கள் பிரச்சார வெறி கொண்ட ரயில் திரைப்படம் – ஆழமாக அம்பலப்படுத்தும் இயக்குநர்

எழுத்தாளர் பாஸ்கர்சக்தி இயக்கத்தில், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில், குங்குமராஜ், வைரமாலா, ரமேஷ் வைத்யா, பர்வேஸ் மெஹ்ரூ, சமிரா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி ஜூன் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ரயில்.இப்படத்தின் கதை,திரைக்கதை மட்டுமின்றி எடுக்கப்பட்ட விதமும் தப்பு என்பதைப் பல்வேறு சான்றுகளுடன் நிறுவியிருக்கிறார் இயக்குநர் தங்கம்.

அவருடைய விரிவான கட்டுரை…

ரயில் என்னும் மறை பிரதி

– தங்கம் 

அந்நிய நாட்டைத் தனதாக்குவதற்காக அந்நிய நாட்டில் படைகளை நிறுத்தவேண்டாம். மாறாக, சொந்த நாட்டு மக்களை அந்நிய நாட்டுக்குக் குடியேற்றவேண்டும். ஏனெனில்,படையினர் சந்ததியைப் பெருக்க மாட்டார். குடியேறிய மக்கள் சந்ததியை பெருக்குவர்.கலாச்சாரத்தை விதைப்பர்.குடியேறிய மக்களால் விளைவிக்கப்படுகிற அந்நியக் கலாச்சாரமானது,உள்நாட்டுக் கலாச்சாரத்தை அப்புறப்படுத்தும்.இப்படியாகக் கலாச்சாரத்தை அப்புறப்படுத்துவதால்தான் அந்நிய நாட்டைத் தனதாக்க முடியும் – என்று கொள்கை வகுத்துக் கொடுத்திருக்கிறார் மாக்கியவல்லி.

1469 ஆம் ஆண்டு இத்தாலியில் பிறந்த அறிஞன் மாக்கியவல்லியை, மக்களுக்கு ஆதரவானவராகப் புரிந்துகொள்பவர்களும் உண்டு; எதிர்ப்பாளராகப் புரிந்துகொள்பவர்களும் உண்டு. மாக்கியவல்லி எப்படிப்பட்டவர்? என்று விளக்குவது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல. மாக்கியவல்லியின் கூற்றுகளுள் ஒன்று ( ஏகாதிபத்தியங்கள் காலங்காலமாகக் கடைபிடித்து வருகிற ஏகாதிபத்திய விரிவாக்கத் தந்திரங்களுள் ஒன்று ) இந்தக் கட்டுரையின் ஆரம்பமாக அமைக்கப்பட்டிருக்கிறது. ரயில் திரைப்படத்தை விமர்சிப்பதற்கு இந்தக் கூற்று பயன்படுகிறது என்பதால், இங்கிருந்து இந்தக் கட்டுரை ஆரம்பமாகிறது.

முதலாவதாக,‘ரயில்’ என்கிற தலைப்பு பொருத்தமற்றது.வடக்கர்கள் ரயிலில் வருகிறார்கள் என்று தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரிந்திருப்பதாலேயே அந்தத் தலைப்பு கதைக்குப் பொருத்தமானது என்று ஆகிவிடாது.கதை,ரயிலில் வருகிறவர்களைப் பற்றியது அல்ல.தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் இருக்கிற ஒரு கிராமத்தில் வசிக்கிறவர்களைப் பற்றியது.ஒரே காம்பவுண்டுக்குள் அமைந்து வாடகைக்கு விடப்பட்டிருக்கிற இரண்டு வீடுகளைப் பற்றியது.மனைவியோடு ஒரு வீட்டில் வாழ்கிற தமிழரையும், மனைவியை வடக்கே விட்டுவிட்டு இங்கு வேலை தேடி வந்திருக்கிற வடக்கரையும் பற்றியது.உழைக்கும் வர்க்கத்து இரண்டு ஆண்களைப் பற்றியது.உழைக்க மறுக்கிற தமிழரையும்,உழைப்புக்காக ஓடி வந்திருக்கிற வடக்கரையும் பற்றியது.குடித்துவிட்டு நாசமாய்ப் போன ஒரு தமிழரையும், ஒழுக்கமாய் வாழ்கிற ஒரு வடக்கரையும் பற்றியது. வடக்கர் மீது பொறாமை கொண்டு கொலை செய்யவும் துணிகிற தமிழரையும், அந்நிய ஊரில் விபத்தாகி மாண்டு போகிற ஒரு வடக்கரையும் பற்றியது. தமிழ்நாட்டுக்கு வந்து உழைத்துச் சேகரித்த பணத்தைத் தமிழரின் வீட்டில் ஒப்படைக்கிற நல்ல வடக்கரையும், அப்படி ஒப்படைக்கப்பட்ட செல்வத்தைக் களவாடி ஒளித்து வைத்திருக்கிற களவாடித் தமிழரையும் பற்றியது. ஆக, ‘ரயில்’ என்கிற தலைப்பு பொருத்தமற்றதுதானே!

பொருத்தமற்றவை பலவும் உண்டு இப்படத்தோடு தொடர்புடையவற்றுள்.அவற்றில் மிக மிக முதன்மையானது –  ‘நல்ல படம், சிறந்த படம், கலைப்படம், மனிதம் பேசுகின்ற படம்’ என்றெல்லாம் கிடைத்திருக்கிற வெகுமதி! உண்மையில் இந்தப் படம்,தமிழ்நாட்டுக் குடிமை வாழ்வின் இசைமையைச் சீர்கெடுக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது.எனவே இது மக்களுக்கு எதிரான திரைப்படம் ஆகும்.மக்களுக்கு எதிரான இந்தத் திரைப்படத்துக்கு, ‘மக்கள் கண்டு களித்து ஆதரவு நல்க வேண்டும்’ என்று, பட வெளியீட்டுக்கு முன்னர் பரப்புரை செய்தது ஒரு கூட்டம். பட வெளியீட்டுக்குப் பின்னர் இந்தக் கூட்டம் வாயே திறக்கவில்லை … கப் சிப்! படத்தை இனி ஆதரித்தால் மக்கள் சும்மா விடமாட்டார்கள் என்று அறிந்துகொண்டது இந்தக் கூட்டம்.

இந்தக் கூட்டம் இரண்டு பொய்களை விதைத்திருக்கிறது….

ஒன்று : ரயிலை, ‘நல்ல சினிமா’ என்று புளுகுகிறது.‘வெறுப்பு அரசியலுக்கு எதிரானது இந்தப் படம்’ என்கிறது; அதாவது, தமிழ்நாட்டார் வடக்கத்தியரை வெறுக்கிறார்களாம்.தமிழரிடம் இருப்பது வெறுப்பு அரசியலாம்.வடநாட்டுத் தொழிலாளரை இனமாக பார்க்காமல் பாவப்பட்ட தொழிலாளராகப் பார்க்கவேண்டும் என்று தமிழருக்கு அறிவு புகட்டுகிறது இந்த அறிவுத் திருக்கூட்டம். உண்மையில் இன வெறுப்புக்கு ஆட்பட்டிருப்பது தமிழினம்தான். 

2009 க்கு பின்னர் தமிழ்நாட்டு தமிழர் மீது ஒரு பண்பாட்டு ஒடுக்குமுறை திட்டமிட்டு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை மறைத்து, ‘தமிழர் இன வெறியர்’ என்கிறது இந்தக் கூட்டம். ரயில் படமேகூட, தமிழின வெறுப்பிலிருந்து விளைந்திருக்கிறது என்பதே உண்மை. ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருக்கும் தமிழரின் இன உரிமை பேசுகிறவர்களை  ‘இன வெறியர்கள்’ என்று கட்டம் கட்டுகிற வேலையிது.

இரண்டாவது :‘ரயில் கலையார்த்தமாக வெற்றி பெற்றிருக்கிறது’ என்றொரு பொய்யைக் கூவுகிறது இந்தக் கூட்டம். ரயில், எதார்த்தமாக இருக்கிறதாம் (இந்தப் படத்தில் வாடகைக்கு வீடு விட்டிருப்பது போலத் தமிழ்நாட்டில் எங்கேனும் உண்டா? இதுவா யதார்த்தம்?).அழகியல் சாதனையாம்.உலகத்தரமான திரைப்படமாம். இன்னும் எவ்வளவோ புனைவுகள்…முதலில் இந்தப் படம் ஒரு திரைப்படமாகவே கூட வடிவ ஒழுங்கு பெற்றிருக்கவில்லை உருக்குலைந்து காணப்படுகிறது. அவ்வளவு இலக்கணப் பிழைகள்.

தமிழ்நாட்டின அறிவுத் திருக்கூட்டத்தினரால் மிகுந்த பாராட்டுப் பெற்ற இந்தத் திரைப்படத்தை, இடது கையால் வழித்தெறிந்து விட்டார்கள் தமிழ்நாட்டு மக்கள். அந்த வகையில், இந்த அறிவுத் திருக்கூட்டத்திற்கு இல்லாத சுரணை தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கிறது என்பது பட்டவர்த்தனம் ஆகிறது.

இந்தப் படத்தைப் போய்,‘மனிதம் போதித்த படம், அன்புக் காவியம், எதார்த்த சினிமா, முழு உதாரணமான சினிமா, உலக சினிமா… இப்படியிப்படியெல்லாம் எண்ணற்ற வகைப்பாட்டுச் சினிமாக்களாகப்  பாராட்டித் தீர்த்தார்கள்.அதிலும் இந்த சினிமாக்காரர்கள் இருக்கிறார்களே… யப்பப்பா!!!!!!!

பத்து காசுக்குப் பெறாத இந்தப் படத்தை,ஷாட்டுக்கு ஷாட் இலக்கணப் பிழைகள் மண்டிக் கிடக்கிற இந்தப் படத்தை, தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்களே… இந்த இழிவை என்னென்று எடுத்துரைப்பது? இரண்டே இரண்டு நடிகர்கள் பங்கெடுத்துக் கொள்கிற காட்சியில் கூட Look தவறாக இருக்கிறது; Left – Right ஒழுங்காக இல்லை; Entry & Out தவறாக இருக்கிறது.

Match cut என்கிற பிணைப்பு இலக்கணமானது இரண்டு செங்கற்களைப் பிணைப்பதற்கு பயன்படுகிற சீமெந்து போன்றது – அதாவது,  ஒரு Binding source போன்றது – என்கிற பால பாடம்கூடக் கற்றுக் கொண்டிராமல் காட்சித்துண்டுகளை (Shots) எடுத்துத் தள்ளியிருக்கிறார் இயக்குநர்.‘காட்சித்துண்டுகளுக்கு இடையிலான ஒழுங்கும், காட்சித்துண்டுகளுக்கு உள்ளிருக்கிற ஒழுங்குமே’ சினிமாவின் அடிப்படை என்கிற ஆனா ஆவன்னா கூடத் தெரியாத இயக்குநர் இவர்.

படம் முழுவதும் Action continuity தாறுமாறாக இருக்கிறது.Action continuity தான்… காட்சியில் ஒரு Action unityயை உண்டாக்கும். இந்த வகையான Visual harmony பேணப்பட்டிருந்தால், பார்வையாளர் உணர்வுரீதியாக ஒன்றுவதற்குத் தக்கதாக ஒன்றுமே இல்லை என்றால்கூட எரிச்சலில்லாமல் படத்தைக் கவனிக்க முடியும். மாறாக, எவ்வளவு உணர்ச்சிகரமான காட்சியாக இருந்தபோதிலும்… Visual harmony இல்லையென்றால், பார்வையாளரால் ஒன்றமுடியாது.

ஒரு காட்சித்துண்டை எங்கு வெட்டவேண்டும் எங்கு ஒட்டவேண்டும் என்பன குறித்த அடிப்படைகள் பின்பற்றப்படவில்லை.வெட்டுப் புள்ளிகளும், இணைப்புப் புள்ளிகளும் தீர்மானிக்கப்பட்ட திரைக்கதைப் பிரதியைத்தான் படப்பிடிப்புத் தளத்துக்கு எடுத்துவர வேண்டும் ஒரு சிறந்த கலைஞன். ஒருவேளை அப்படி முற்றுப்பெற்ற பிரதி கைவசம் இல்லை என்றால்கூட, எடுக்கிற படத்தை இலக்கணம் மீறாமல் எடுக்கவேண்டும். ஒரு காட்சித் துண்டுக்கும் இன்னொரு காட்சித் துண்டுக்கும் ஒரு பொருத்தப்பாட்டின் காரணமான பிணைப்பு உண்டாகவேண்டும் என்கிற விதி கையாளப்படவில்லை.‘Emotional Conflict, Conceptual Conflict, Time Conflict, Spacious Conflict  போன்றவற்றில் ஏதாவது ஒன்று இருந்தால்தான் ஒரு காட்சித்துண்டு வெட்டப்பட வேண்டும்; இணைக்கப்பட வேண்டும்’ என்று நூறாண்டுக்கு முன்னரே வகுத்து வைக்கப்பட்டிருக்கிற விதியை இவர்கள் ஒழுகவில்லை.குறிப்பாகச் சொல்லப் போனால், 180° Rule பேணப்படவில்லை. முற்றிலும் இலக்கணப் பிழையோடு வந்திருக்கிறது இந்தப் படம்.

இப்படி இலக்கணப் பிழைகள் மலிந்திருக்கிற ஒரு படம் எந்த அனுபவத்தையும் கடத்தாது.காட்சிக்குக் காட்சி… ஒவ்வொரு காட்சித் துண்டினையும் இலக்கணப் பிழையோடு ஒரு இயக்குநர் படமெடுத்துக் காட்டியிருக்கிறார். “இலக்கணப் பிழையோடு மட்டும்தான் சினிமாவை நான் இயக்குவேன்” என்று குலசாமியிடம் சூளுரைத்து வந்து சினிமா எடுத்தது போல் இருக்கிறது.

இந்தப் படத்தை, புகழ்பெற்ற சினிமா தொழில்நுட்பக் கலைஞர்களும் பாராட்டியிருக்கிறார்கள். இதில் கூத்து என்னவென்றால், இவர்களில் பலரும் மாணவர்களுக்கு சினிமா வகுப்பு எடுக்கிறவர்கள். சும்மா வகுப்பு எடுக்கிறவர்கள் அல்ல – காசு வாங்கிக்கொண்டு! தமது விருப்பையோ வெறுப்பையோ விமர்சனத்தில் காட்டக்கூடாது. ஆகாதவரைத் தீர்த்துக் கட்டுவதற்கும் விமர்சனம் செய்யக்கூடாது ; ஆகத் தகுதியற்றதுகளை ஆக்குவதற்காகவும் விமர்சனம் செய்யக்கூடாது; ஆகவேண்டிய ‘காரியங்களுக்காக’வும் விமர்சனம் செய்யக்கூடாது!!! இந்த அறிவுத் திருக்கூட்டம் செய்திருப்பது என்னவென்றால், பிரமிளின் சொற்களில் – ‘மதிப்பீட்டு ஊழல்!’.

அரசியல் ரீதியாகவும், அழகியல் ரீதியாகவும் ரயில் திரைப்படத்திற்கு வாய்த்திராத தகுதியை வழங்கிக்கொண்டிருக்கிற இந்தக் கூட்டத்தின் ஒரு பகுதியினர், தமிழினத்தை அடிப்படுத்துவதற்காக இன்று நடைமுறையாகிக் கொண்டிருக்கிற ஏகாதிபத்திய மற்றும் இனவெறி ஃபாசிச அரசியல் கோட்பாடுகளையே தங்கள் கோட்பாடாக ஏற்றிருக்கிற ‘தமிழின வெறுப்பாளர்கள்’ என்றும்; மற்றொரு பகுதியினர், தமிழ்நாட்டின் இத்துப்போன ‘இஸ்டுகள்’ கக்குகிற அரைகுறைச் செரிமானக் கோட்பாடு வாய்ப்பாட்டு வாந்திகளை அப்படியே முழுங்கி, செரிக்காமல் ஏப்பம் விடுகிற கோஷ்டி என்றும்; பிறிதொரு பகுதியினரோ, இவை எவற்றையும் அறிந்துகொள்ள முடியாதவாறு மூளை கழுவப்பட்ட தமிழர்கள் என்றும்; இந்த மொத்தக் கூட்டத்தாருமே, ‘திரைக்கலை அழகியல் என்பது வீசை என்ன விலை?’ என்று கேட்குமளவுக்கு மட்டுமே விவரமுடையவர் என்றும் நிறுவுவது நமது கட்டுரையின் திருப் பணிகளுள் ஒன்று.

ரயில் திரைப்படத்தைக் கட்டுடைப்பதன் வழியாக இந்தக் கூட்டத்தைத் தோற்பித்துவிட முடியும்.கட்டுடைப்பது என்றால், அது எப்படிக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு பிரதியை உருவாக்குகிற அடிப்படைக் கூறுகள் எவையெவையென்று முதலில் ‘பிரித்து – உணர’ வேண்டும். பிரதிக்குள் இந்தக் கூறுகளின் இருப்பு குறித்தும், கூறுகளின் தன்னியக்கம் குறித்தும், கூறுகளின் கூட்டியக்கம் குறித்தும் விளங்கிக்கொள்ளுதல் வேண்டும்.ஒரு பிரதியை உருவாக்குகிற அடிப்படைக் கூறுகள் எவையெவை என்பதையும், எத்தகைய தனித்தன்மைக்காக அந்தக் கூறுகள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன என்பதையும், தனித்த கூறுகள் எவ்வாறு தனித்தனியாக இயக்கம் கொள்கின்றன என்பதையும், தனித்தவையெல்லாம் ஒன்றுகூடி எப்படிப் பிரதியாக உருப்பெறுகின்றன என்பதையும் விளங்கிக்கொள்ள வேண்டும்.

ரயில் என்கிற பெயர் சூடித் தோற்றம் காட்டுகிற இந்தப் பிரதி அல்ல உண்மையான பிரதி; உண்மையான பிரதியானது மறைவிக்கப்பட்டுக் கிடக்கிறது!மறைபிரதியைத் துப்பறிய வேண்டுமாயின் தோற்றப் பிரதியின் கட்டுமானத்தை ஆக்குகிற கமுக்கக் கோட்பாட்டினை உருவியெடுக்கவேண்டும்.அதாவது படைப்புள்ளத்தின் ஆழ்மன வேட்கைகளையும்,கமுக்க நோக்கங்களையும் கண்டுபிடிக்க வேண்டும்.ஆழ்மனப் பகுப்பாய்வுக்கு இந்தப் படைப்பை உட்படுத்தவேண்டும்.

அப்படி உட்படுத்தும்பொழுது அடிப்படையான இரண்டு உண்மைகள் தட்டுப்படுகின்றன.

ஒன்று : இந்தப் படம் கலையுந்துதலினால் ‘ஆகி’வந்ததல்ல.

இரண்டு : பிரச்சார வெறியினால் ‘செய்யப்’பட்டிருக்கிறது.

கலையுந்துதலால் ஆகியிராத ஒரு படைப்பு எப்படிக் கலையாகிவிட முடியும்? ஆனால் இந்தப் படத்தை, ‘சிறந்த கலைப் படைப்பு’ என்கிறது ஒரு கூட்டம்.அடுத்து – பிரச்சார வெறியினால் செய்யப்பட்டிருக்கிற படம் என்கிறபோது,‘பரப்புதல் எப்படிக் கலையாக முடியும்?’என்கிற கேள்வியும் எழுகிறது அல்லவா?அதிலும் பரப்புதல் செய்யப்படுவது ஒரு வெறி. ‘வெறி’ எப்படிக் கலையாக முடியும்? ஏனெனில் வெறி என்பது உள்ளதை உள்ளபடி காணமுடியாதபடி கேடுணர்ச்சி கொந்தளிக்கிற நிலை.வெறி என்பது ஒரு பித்து நிலை.பித்தம், மெய்மையைக் காணவொண்ணாது தடுத்தாடுகிற திரை.

பொய்மைத் திரைவிலக்கி மெய்மையைக் காணப்படுத்துவதுதான் கலை; பொய்மைத் திரையை நெய்து தொங்கவிடுவது அல்ல! “எவ்வளவு சிறப்பாகப் பொய்மைத் திரையை இயக்குநர்  நெய்திருக்கிறார் பாருங்கள்!” என்கிறது இந்தக் கூட்டம்!வெறி – அமைதிக்கு எதிரானது; இயல்புக்கு எதிரானது; இசைமைக்கு எதிரானது; ஆக்க ஆற்றல் அல்ல: அழிப்பு ஆற்றல்! இந்தத் தன்மையைக் கொண்ட வெறிதான் – அதாவது அழிப்பு ஆற்றல்தான் – பரப்புதலாகிறது என்கிறபொழுது படைப்பு முகம்  கொடூரமாக அல்லவா இருக்கும் … இந்தக் கொடூர முகத்தைத்தான் அழகியல் என்று விதந்தோதுகிறது மேற்படித் திருக்கூட்டம்.

“பரப்புதல் கலையாக முடியாதா?” என்று கேட்டால், பரப்புதலும் கலைத்தன்மை பெறும்; கலையழகு பெறும்; கலைத்தரம் பெறும்; உலகின் மிகச்சிறந்த கலைஞர்கள், பரப்புதலை அருமையான கலைப் படைப்பென்று ‘ஆக்கி’யிருக்கிறார்கள். அதற்கென்று கட்டமைப்புக் கட்டளைகள் இருக்கின்றன; அவரவர்க்கு என்றும் கதையாடல் நடைகள் இருக்கின்றன. பரப்புதல் கலையாவதற்குரிய கட்டமைப்புக் கட்டளை இந்தப் படத்திற்குள் இல்லை; புனைவுத் திறனைக் கலையாக்குவதற்கான புனைவொழுக்கம் இந்தப் படைப்பாளியிடம் இல்லை. எனவே இந்தப் படம் உயிரற்று அழுகி நாற்றமெடுக்கும் சடலமாகச் சிதைந்து கிடக்கிறது.

பரப்புதல் நோக்கம் கொண்ட திரைப்படம் கலைப் படைப்பெனத் துலங்க வேண்டுமாயின், சிப்பிக்குள் துயின்று கிடக்கும் முத்து போல, படத்தின் கதைக் கருவுக்குள் மெய்மை குடிகொண்டிருக்க வேண்டும்.அதாவது, பரப்புதலுக்கு உரியதாக அங்கொரு மெய்மை குடிகொண்டிருக்கவேண்டும்; பொய்மையன்று!

ரயில் திரைப்படம், பொய்மையைப் பரப்புதல் செய்கிறது.கதைக் கருவுக்குள் மெய்மை குடிகொண்டிருப்பதால் மட்டுமே ஒரு படைப்பு கலைப் படைப்பு ஆகிவிட முடியாது. கலைத் தொழில்நுட்பங்கள் ஒன்றுக்கொன்று ஊடாடி, தக்கவாறு இசைந்துரு கொண்டிட வேண்டும். இந்தப் படத்தின் கருவுக்குள் மெய்மைக்கு மாற்றாகப் பொய்மை குடிகொண்டிருக்கிறது; எனவே ஒரு பொய்யை எவ்வளவு அழகுபடுத்தினாலும் அது கலைப்படைப்பு ஆகிவிடாது!பொய்மையோ மெய்மையோ – கதைக் கருவுக்குள் எது குடியிருக்கிறதோ அது கதையாடலையும், கலை நுட்பங்களையும் தீர்மானிக்கும். கதையாடலிலும் கலைநுட்பங்களிலும் வெளிப்பட்டே தீரும்.அறத்தின் உயிர்வாழ்வுக்கு ஆற்றலைச் செலுத்தக்கூடிய அரிதினும் அரிதான மெய்யானது பரப்புதலுக்கு உட்படும்பொழுது அங்கு கலை மலரும். அரிதினும் அரிதான மெய்யைக் கண்டறிதற்கு உரிய நுட்பம் வாய்த்ததொரு நுண்ணிய கலை மனமானது, அறத்தின் உயிர் வாழ்வுக்கு ஆற்றலைப் புகட்டக்கூடிய அந்த மெய்யைப் பரப்புதல் செய்யும்பொழுது அங்கு பரப்பதல் செய்யப்படுகின்ற ஒன்று மெய்மையின் பெருமுழக்கம்  என்கிற முகத்தைக் கொள்கிறது.

அரிதினும் அரிதான மெய்யைத் தனது காலவெளியில் கண்டுணரத் தக்க நுண்ணுணர்வு வாய்த்திருக்கும் படைப்புள்ளமானது தனது நுண்ணுணர்வைப் படைப்பின் வழியாகக் கடத்தும்பொழுது படைப்புமிழும் நுண்ணுணர்வின் ஒளியிலேயே படைப்பின் மெய்மையைப் பார்வையாளர் கண்டுணர்கிறார். இந்த மெய்மைப் பரிமாற்றத்திற்குக் கருவியாகத் தொழிற்படுவதுதான் படைப்பின் வேலை. நுண்ணுணர்வு வாய்க்கப்பெற்ற ஒருவர் கண்டடைந்த மெய்மையானது,பிறிதொருவரின் நுண்ணுணர்வை இயக்கிப் புகட்டப்படுகிறது. இடையில், பிறிதொருவரின் நுண்ணுணர்வை இயக்குதல் பொருட்டு, ஊடகமாகக் கலைக்கருவி தொழிற்படுகிறது. இப்பொழுது, படைப்பாளியின் நுண்ணுணர்வினால் தீண்டப்பட்ட  கலைக் கருவி உயிர் பெற்று, படைப்பாளியின் அதே நுண்ணுணர்வைத் தானேற்றுக் கொண்டு மெய்மையைக் கட்டமைக்கிறது. இந்த நிலையைத்தான் ‘படைப்பு தன்னையே படைத்துக் கொள்கிறது’ என்கிறோம்.

படைப்பாளிக்குள் பிறந்திருக்கிற நுண்ணுணர்வு இயக்கமும், படைப்பாளியால் கண்டறியப்படுகிற மெய்மையின் இருப்பும் பூண்டிருக்கிற உறவு எத்தகையது என்றால் … அறிந்து கொள்வதற்கான வேட்கையும் அறியப்படுவதற்கான வேட்கையும் முயக்கம் கொள்கிற கலவி நாடகத்தை ஒத்ததாகும்.இந்த இரண்டு வேட்கைகளும் ஒன்று மற்றொன்றைத் துலங்கப் பண்ணுவதன் பொருட்டு ஊடல் செய்து இயங்கும்பொழுது தொழில்நுட்பம் கலையாகிறது. Craftsmanship எனப்படுவது Art என்கிற உயர்நிலையை எட்டுகிறது.ஒரு உண்மையானது தகவலாகவோ, கருத்தாகவோ, அனைவராலும் கண்டுணரக்கூடிய உண்மையாகவோ, கூருணர்வு தேவைப்படாமலே தட்டுப்படுகிற உண்மையாகவோ இருக்கும்பொழுது அது கலைப் படைப்புக்கான மூல வித்தாகப் பதியமாவதற்குத் தகுதியற்றது.

ஒரு உண்மையானது எளிதில் யாவராலும் கண்டடைய முடியாத உண்மையாக இருக்கவேண்டும். படைப்பாளியின் குறிப்பிட்ட தனித்துவம் காரணமாக மட்டுமே அந்த உண்மை கண்டுபிடிக்கப்பட்டதாக இருக்கவேண்டும். படைப்பாளியின் வாழ்க்கை அனுபவமோ அவரது தனித்த அறிவோ அவரது அறமோ ஏதோ ஒன்று தனித்துவமானதாக இருந்து அந்த உண்மை கண்டுணரப்பட்டிருக்க வேண்டும். மனச்சான்றின்படி அல்லாமல் வேறு எவ்வாறும் அந்த உண்மையைத் தொடர்பு கொள்ள முடியாது என்கிறதாக அவ்வுண்மை மூடப்பட்டிருக்கவேண்டும். அவ்வுண்மையை வெளிப்படுத்துவதால் பொய்மை இல்லாமலாக வேண்டும். வரலாற்றில் ஏற்பட்டிருக்கும் மதிப்பீட்டுச் சீர்குலைவு சமன்படுத்தப்பட வேண்டும். அந்த உண்மை வெளிப்படாதிருந்தால் வரலாறு பிழையாக எழுதப்பட்டதாக மாறியிருக்கும் என்கிற அளவு அறத்தின் வீச்சுள்ளதாக அவ்வுண்மை திகழவேண்டும்.

அவ்வுண்மையில் அன்பு தங்கியிருக்க வேண்டும். உண்மை எனப்படுகிற சொல்லுக்குள் உறைந்திருக்கிற தற்காலிகத் தன்மை நீங்கி, மெய் என்கிற சொல்லுக்குள் ஒளிர்கிற நிலைத் தன்மையை எட்டி, ‘எவரும் ஏற்றுக்கொள்ளும்படியான’ என்கிற  ஒரு விழுமியமாக முகிழ்த்திருக்க வேண்டும். அப்பொழுது மட்டுமே அந்த உண்மை, கலைப் படைப்பென ஆகுதற்குத் தகுதியுடையதாகும்.

இந்தப் படத்தில் என்ன உண்மை என்றால், ‘தமிழர் குடிக்கின்றனர் … அதனால் வேலைவாய்ப்பு வடவருக்குப் போகிறது!’. இதுவொரு உண்மைதான். ஆனால், சிக்கலின் அனைத்துப் பரிமாணங்களையும் தோற்றப்படுத்துகிற உண்மையல்ல. ‘தமிழர் இருப்பு  – வடவர் வருகை’ என்கிற முரணை எல்லாக் கோணங்களிலிருந்தும் பார்த்து ஆராய்ந்து எல்லாத் தரப்புக்கும் நீதியான ஒன்றை இந்தப் படம் கண்டடையத் தவறிவிட்டது.

‘தமிழர் – வடவர்’ சிக்கல் என்பது மண்ணின் மக்களுக்கும் வந்தேறிகளுக்குமான முரண் என்பது கோட்பாட்டுச் சொல்லாடல். ‘மண்ணின் மக்கள் – வந்தேறிகள்’ என்கிற கருத்தோட்டங்களை இந்தப் படம் ஆய்வு செய்திருக்கவேண்டும்.

ஏன் வடக்கத்தையத் தொழிலாளருக்குக் கூலி குறைத்துக் கொடுக்கப்படுகிறது? தமிழ்த் தொழிலாளி முன்வைக்கிற உழைப்புக் கூலி இந்த முதலாளிகளால் ஏன் ஏற்றுக்கொள்ளப்படவில்லை? தமிழ்நாட்டின் உடலுழைப்புத் தொழிலாளர் தவிர்த்துத் தமிழ்நாட்டின் பிற மக்களால் ஈடு கொடுக்க முடிகிற தமிழ்நாட்டு வாழ்க்கைத் தரத்திற்கும், தமிழ்நாட்டு விலைவாசிக்கும் ஈடு கொடுக்கும்படியான உடலுழைப்புக் கூலியைத் தமிழ்நாட்டு உழைப்பாளர் தமக்கென்று உத்தரவாதப்படுத்துவதில் என்ன பிழை இருக்கிறது? தமிழ்நாட்டின் வாழ்க்கைத் தரத்தையோ, தமிழ்நாட்டின் விலைவாசியையோ எட்டியிராத – வாழ்க்கைத் தரத்திலும் விலைவாசியிலும் வேறுபட்டிருக்கிற – மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருகிற தொழிலாளருக்குக் குறைந்த ஊதியம் போதுமாகத் தோன்றலாம். அந்த ஊதியத்தை, தமிழ்நாட்டிலேயே பிறந்து வாழ்ந்துகொண்டிருக்கிற தொழிலாளருக்கு நிர்ணயிப்பது மார்க்சிய அடிப்படையில் நியாயமானதுதானா? ஒவ்வொரு தேசிய நிலத்திற்கும் உரிய பண்புகளையும் இன்ன பிறவற்றையும் ஒத்ததுதான் வாழ்க்கைத் தரமும் விலைவாசியும். அப்படியானால் தமிழ்த் தேசிய நிலத்தின் வரலாற்று நிலைமைகளுக்கு ஏற்ப தமிழ்நாட்டு உழைப்பாளிகள் ஊதியம் கோருவதை மறுக்கிற குரல் மார்க்சியக் குரலா அல்லது பூர்ஷ்வாக் குரலா? வடவருக்கு ஊதியம் குறைத்து தமிழ்நாட்டுக்கு வரவழைப்பது எவ்வகையில் சரி?

அயல் மக்களைத் தொழிலாளராக ஏற்பதற்கும்,மறுப்பதற்கும் என்று பல வகையான சட்டதிட்டங்கள் உலக நாடுகளெங்கும் நடைமுறையில் இருக்கின்றன.துணைக் கண்டத்தில் எந்தவொரு தேசிய இனத்தின் இறையாண்மையையும் சீர்குலைக்காத வகையில் இங்கு தொழிற்சட்டங்களும், தொழிலாளர் சட்டங்களும் இயற்றப்பட வேண்டியது காலத்தின் தேவை.

இப்படித் தொடங்கி, ‘தமிழர் – வடவர்’ சிக்கல் என்பதை, தனி நூலாகவே எழுதலாம். இந்தக் கட்டுரை போதாது.

ஆனால் இவ்வகையான சிக்கல்களை இப்படம் விவாதத்திற்கு உட்படுத்தியிருக்க வேண்டும். தீர்வு சொல்லவேண்டும் என்பது கட்டளையல்ல. குறைந்தபட்சம் இச்சிக்கல்கள் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இந்தச் சிக்கல்கள் படத்தில் பேசப்படவில்லை. முற்றிலுமாக மறைவிக்கப்பட்டு இருக்கின்றன. வடக்கிருந்து வரும் தொழிலாளர்கள், முகாம்களில் அடைக்கப்பட்டவர்கள் போல ஒரு வாழ்க்கைக்குப் பழக்கப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். உண்டுறங்கி செல்போனில் பொழுது போக்குவது தவிர அவர்களுக்கு வாழ்க்கையில் எந்தக் கிளர்ச்சியும் தரப்படவில்லை. இடதுசாரிகள் முன்வைக்கிற தொழிலாளர் உரிமை எதுவும் பேணப்படுவதில்லை.இவற்றையெல்லாம் இயக்குநர் காட்சிப்படுத்தி இருந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டு முதலாளிகள் தமிழ்த் தொழிலாளிகளை மட்டுமல்லாமல் வடக்கத்தையத் தொழிலாளிகளையும் உறிஞ்சுகிறார்கள் என்பதைச் சொல்லியிருந்திருக்க வேண்டும்.இன்றைய நாளில் குறைகூலிக்கு உழைக்கிற வடக்கத்தியத் தொழிலாளர் கூட்டமானது பிற்காலத்தில், ‘வடக்கத்தியத் தொழிலாளி வர்க்கம்’ என்கிற அடையாளத்தின் கீழ் திரட்சி கொள்ளும்பொழுது அவர்கள் கேட்கப் போகிற கூலி, இன்றைய தமிழ்நாட்டுத் தொழிலாளர் வேண்டுகிற கூலியைவிடக் கூடுதலாக இருக்கப்போகிறது. அன்றைக்கு, தமிழ்நாட்டுத் தொழிலாளி வர்க்கத்திற்கும் வடநாட்டுத் தொழிலாளி வர்க்கத்திற்கு இடையில் மோதல் வருவதை வரலாற்றால் தடுக்கமுடியாது. தமிழ்நாட்டு முதலாளிகளுக்கு நேர்ந்திருக்கிற தொழிலாளர் சிக்கலைத் தீர்ப்பதற்காக அவர்கள் தேர்ந்தெடுக்கிற ‘வடவர் இறக்குமதி’ என்கிற தொழிற் கொள்கையானது, தேசிய இனச் சிக்கல்களை விளைவிக்கக்கூடியது என்பதையும், ‘குறுக்கு வழிகள் நீளமானவை’ என்றும் முதலாளி வர்க்கத்திற்குப் புரிய வைத்திருக்கவேண்டும் இடதுசாரிகள். ஆனால் இடதுசாரிகளுக்கே கூட இன்னும் இது புரிந்தபாடில்லை! 

பாட்டாளி வர்க்கமும், தேசிய இனமும் ஒருசேரத் தத்தம் பிறப்புரிமையுடன் வாழ்வதற்கு வழி வகுக்கிற கோட்பாடு எதுவோ அதைக் கண்டடையவேண்டும். இந்தத் திசையில் படம் பயணித்திருந்தால் நேர்மையான படம் என்று சொல்லலாம். ஆனால் இந்தச் சிக்கல்கள் எதுவுமே படத்தில் கையாளப்படவில்லை.இவையெல்லாம் தோற்றப் பிரதியில் முகம் காட்டிடாத வண்ணம் மறைவிக்கப்பட்டு இருக்கின்றன.இவையெல்லாம் தோற்றப் பிரதிக்குள் கொண்டுவரப்படவில்லை.

‘தமிழன் குடிக்கிறான்’ என்கிற இரண்டு சொற்களை எடுத்துக்கொண்டு, தமிழ்த் தேசிய இனத்தை எவ்வளவு தூரத்திற்கு இழிவுபடுத்த முடியுமோ அவ்வளவு தூரத்திற்கு இழிவுபடுத்தியிருக்கிறார் இயக்குநர் – தனது இன வெறுப்பைக் கையாண்டு. தமிழர் இழிவானவர் என்று படம் முழுக்கப் பரப்புரை செய்கிறார். இயக்குநர் தனது தமிழின வெறுப்பை உமிழ்வதற்காக, ‘தமிழர் – வடவர்’ தொழிலாளர் முரண் என்கிற நடப்புண்மையைக் கையாள்கிறார்.ரயில், பொய்யைப் பரப்புரை செய்கிறது; வெறுப்பை விதைக்கிறது; இன்றைக்கு நடப்பிலிருக்கிற, தமிழினத்தின் மீதான அரச ஒடுக்குமுறையையும், பண்பாட்டு ஒடுக்குமுறையையும் காண்பிக்க மறுத்து, மாறாக, ‘தமிழினத்தவர் இனவெறி பிடித்தவர்கள்’ என்று வரைந்து காட்டுகிறது; அநீதியை நியாயப்படுத்துகிறது; இல்லாததை இருப்பதாகக் காட்டுகிறது; இருப்பதைக் காண்பிக்காமல் மறைவிக்கிறது.

பொதுவில் பரப்புரைப் படங்களானவை ஒரு கண்ணை மட்டும் திறந்து – மறுகண்ணையும் திறந்து பார்த்தால் நீதியின் பரிமாணம் துலங்கிவிடும் என்பதால் மறு கண்ணை மூடிக்கொண்டு பார்த்து – கண்டதைக் காட்சிப்படுத்துபவை.பார்வையாளரின் ஒரு கண்ணை பிடுங்கிக் கொண்டு ஒற்றைக் கண்ணால் பார்க்க வைப்பவை. ரயில் திரைப்படமோ, பார்வையாளரின் ஒரு கண்ணை மட்டுமல்ல இரண்டு கண்களையும் நோண்டி எடுத்துவிட்டு, இல்லவே இல்லாததை வர்ணித்து, ‘இவ்வாறாகத்தான் காட்சிப்படுகிறது’ என்று கதைகட்டுகிறது.

இப்படிக் கட்டப்பட்ட கதையைப் பார்த்த அழுத்தாளர்களும் ஒயக்குநர்களும் நோதிமான்களும் பொரட்சியாளர்களும் இன்னும் ஏகப்பட்ட பீத்துக்குளிகளும் சேர்ந்து இந்தப் பொடத்தை ஒச்சந்தல்லையில் வைத்துக் குண்டாடுகிறார்கள்.

ரயில் ஒரு பரப்புதல் படமாக இருக்கிறது என்பதைவிட, ‘பட்டிமன்றத் தலைப்புக்குப் படமெடுத்து வைத்ததுபோல் இருக்கிறது’ என்பதுதான் சரி. ‘பண்பில் சிறந்தவன் இராவணனா இராமனா?’ என்கிற தலைப்பு போலவே ‘பண்பில் சிறந்தவன்  தமிழனா வடக்கனா?’ என்றவொரு தலைப்புக்குப் பட்டிமன்ற மேடையேறி மைக்கில் பேசாமல் கேமராவை எடுத்துக் கொண்டு போய், உயர்பண்பு கொண்டவன் வடக்கன் என்றும், பண்பு கெட்டவன் தமிழன் என்றும் ஒரு கதையை, நகரும் படங்களாகப் பிடித்துவைத்துக் காட்டுகிறார் இந்த இயக்குநர். இந்தக் கருமாந்திரத்தைக் கலை என்கிறது ஒரு கூட்டம்.

தமிழரை இழிவாகச் சித்தரிப்பதற்கான பாயின்டுகளும், வடக்கரை உயர்வாகச் சித்தரிப்பதற்கான பாயின்டுகளும் வரிசையாக முன்வைக்கப்படுகின்றன. இதற்கென்று ‘ஒப்பீட்டு ஆய்வு முறை (Comparative study)’ கையாளப்படுகிறது. இதற்கென்று கதைக் கூறுகள் தயாரிக்கப்படுகின்றன. கதைக் கூறுகள் ஒவ்வொன்றுக்குள்ளும் படைப்பாளியின் வேட்கை திணிக்கப்படுகிறது.

படைப்பாளியின் வேட்கைக்கு இரண்டு நிறங்கள். ஒன்றின் நிறம் வெறுப்பு; இன்னொன்றின் நிறம் விருப்பு! தமிழரைச் சுட்டுகிற கூறுகளில் எல்லாம் வெறுப்பு பூசப்படுகிறது வடக்கரைச்  சுட்டுகிற கூறுகளில் எல்லாம் விருப்பு பூசப்படுகிறது. இந்த முரண்களை, படைப்பாளி தனது விருப்பு வெறுப்புகளைப் பரப்புகிற நோக்கத்தில் ஒருங்கிணைக்கிறார். சதுரங்கப் பலகையில் எந்தெந்தக் காய்கள் எங்கெங்கு நிலைப்படுத்தப்பட வேண்டுமோ அங்கங்கு நிறுத்தப்படுவது போல கதைக் கூறுகள் இடம் பார்த்துக் குடிவைக்கப்படுகின்றன. சதுரங்கப் பலகையில் நிறுத்தப்படுகிற வெவ்வேறு காய்களுக்குமான தொடர்பு நிலைகள் என்னென்னவென்றும், கூட்டு நோக்கம் என்னென்னவென்றும் தீர்மானிக்கப்படுவது போலவே கதைக் கூறுகளுக்கும் நோக்கங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. சதுரங்க ஆட்டத்தில் ஒரு நோக்கத்தை முற்றுப்பெற வைப்பதற்கான காய் நகர்த்தல் போல கதைக் கூறுகள் இயக்கப்படுகின்றன. கதைக் கூறுகளிலும், கதைச் சலனங்களிலும்  படைப்பாளியால்  பொதித்து வைக்கப்பட்டிருக்கிற விருப்பு வெறுப்புகள்தான் கதைக்கரு(Theme), அடிக்கதை(Plot), கதை (Story), திரைக்கதை (Screenplay) ஆகிய அனைத்திலும் முகங்காட்டுகின்றன. 

கதையின் படி, எலக்ட்ரீசியன் வேலை செய்கிற தமிழன் முத்தையா வீட்டில் அன்றைக்குப் பார்த்து மின்விளக்கு எரியவில்லை. இருட்டிவிட்டது.முத்தையாவைக் கைபேசியில் அழைக்கிறாள் மனைவி செல்லம்மா. முத்தையா வீடு வரத் தாமதமாகிறது.அதற்கு முன்னரே எதிர் வீட்டில் குடியிருக்கும் வடக்கன் சுனில், பணி முடிந்து வீடு திரும்புகிறான்.மனைவியையும் பெற்றோரையும் குழந்தையையும் சொந்த நாட்டில் விட்டுவிட்டு இங்கு வந்து முத்தையாவின் வீட்டுக்கு எதிரே அதே காம்பவுண்டுக்குள் தனியாக வீடெடுத்துக் குடியிருக்கிற சுனில், முத்தையாவின் மனைவியாகிய செல்லம்மாவிடமிருந்து விவரமறிந்து பல்பை எரிய வைத்துவிட்டுச் செல்கிறான். தமிழன் எலக்ட்ரீசியன் வேலை பார்த்தால்கூட அவன் வீட்டுக்கு பல்பை எரிய வைத்து உதவி செய்கிற ஆளாக வடக்கன் இருக்கிறான், என்று ஒப்பீடு முன்வைக்கப்படுகிறது. இங்கு முத்தையா தாழ்த்தப்பட்டு சுனில் உயர்த்தப்படுகிறான். ‘வீட்டுக்கு விளக்கேற்றுதல்’ என்றொரு புனிதச் சொல்லாடல் இங்கு காட்சியாக வடிவம் எடுத்திருக்கிறது. தனது வீட்டுக்கு விளக்கேற்றிவைக்கத் துப்பில்லாத ஒரு தமிழரின் குடும்பத்துக்கு வடவர் விளக்கேற்றிவைக்கிறார். படத்தின் முதலாவது காட்சித் தொடரிலேயே இப்படியொரு காட்சியை வைத்து, கதைப்போக்கைக் கட்டியங்கூறுகிறார் இயக்குநர்.இந்த விளக்கேற்றும் காட்சிக்கு முந்தைய காட்சியாக, முத்தையாவை இன்னும் இழிவுபடுத்தக்கூடிய நிகழ்வு ஒன்று வருகிறது. எலக்ட்ரீசியனாக வேலை செய்யும் முத்தையா, ஊருக்குள் ஒரு வீட்டில் எலக்ட்ரீசியன் வேலை செய்கிறான் … கொடுக்கப்படும் கூலியை வாங்கிக்கொண்டு டாஸ்மாக் போய்விடுகிறான்.  அதனால்தான் அவன் தனது வீடு திரும்புவதற்குத்  தாமதமாகிறது. அப்படித் தாமதமான நேரத்தில்தான் முத்தையா வீட்டுக்கு விளக்கேற்றுகிறான் சுனில். இந்தக் காட்சித் தொடரில் முரண்கள் வலிமையாகக் கையாளப்படுகின்றன. முரண்களை இவ்வகையாகக் கையாளுகிற போக்கு படம் முழுவதும் ஒரு உத்தியாக அமைக்கப்பட்டிருக்கிறது.

தமிழர் – வடக்கர்; முத்தையா – சுனில்; குடிகாரன் – மதுவிலக்கன்;  உழைக்க மறுக்கிறவன் – கடுமையாக உழைக்கிறவன்; சம்பாத்தியத்தைக் குடித்துத் தொலைக்கிறவன் – சம்பாத்தியத்தைச் சேமித்து வைக்கிறவன்; பெற்றோரை இழந்து தறுதலையாக வளர்ந்தவன்; நன்முறையில் வளர்த்த பெற்றோரோடு இன்புற்று வாழ்கிறவன்; மனைவியோடு வாழ்கிறவன் – மனைவியை சொந்த நிலத்தில் விட்டுவிட்டு இங்கு தனியாக வாழ்கிறவன்; குழந்தை பெற்றுக்கொள்ளத் துப்பில்லாதவன் – குழந்தை பெற்றுக்கொண்டவன்; ஒரு வீட்டில் விளக்கெரிய வைத்ததற்காகப் பெண்ணிடம் காசு வாங்குகிறவன் – ஒரு வீட்டில் ‘விளக்கேற்றி வைத்து’ அந்தப் பெண்ணிடம் காசு வாங்காதவன்; புல்லுக்கட்டைத் தூக்குவதற்கும் வலிமையற்றவன் – புல்லுக்கட்டை தூக்குவதற்கு வலிமையுள்ளவன் (இப்படியொரு காட்சி வருகிறது : தெருவில் ஒரு பெண்மணி புல்லுக் கட்டைத் தூக்கிவிடுமாறு முத்தையாவிடம் உதவி கேட்க, முத்தையா புல்லுக் கட்டைத் தூக்கிவிடும்பொழுது சாராய போதையில் கீழே சரிந்துவிடுகிறான். அந்த நேரத்தில் அங்கு வரும் சுனில் புல்லுக்கட்டைத் தூக்கி அந்தப் பெண்ணின் தலையில் வைத்து அனுப்புகிறான்). இசை, ஓவியம் போன்ற நுண்கலைகளில் சற்றும் ரசனை இல்லாதவன் – பாடகனாகவும், ஓவியனாகவும் பரிமளிக்கிற நுண்கலைஞன்; செல்லம்மாவால் அவமதிக்கப்படுபவன் – செல்லம்மாவால் துதிக்கப்படுபவன்; ( பணி முடித்து இருட்டியதும் வந்த சுனில், அடுத்து சமையல் செய்யப் போகிறான் என்பதால் அவனுக்கு மீன் குழம்பு ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொடுக்கிறாள் செல்லம்மா – இரவு தாமதமாக வருகிற கணவன் முத்தையாவுக்கு அவள் சோறிடும்பொழுது ‘இத்துனூண்டு’ மீன் குழம்புதான் வட்டிலில் இருக்கிறது. புருஷனுக்கு ஆக்கிய மீன் குழம்பைப் புருஷனுக்கு ஊற்றாமல் ‘அடுத்த ஆம்பளைக்குத் தருகிறாள்’ என்பதுதான் விளக்கம் ). பெண்ணை அடிக்கிறவன் – பெண்ணை அடிக்கும் ஆணை, தட்டிக் கேட்கிறவன்;  வடக்கத்தியனிடம் அடி வாங்குபவன் – தமிழனை அடிப்பவன்; மாமனார் உழைத்த காசைத் தனது வியாபாரத்துக்குத் தருமாறு கேட்பவன் – வடக்கேயிருந்து வந்து சம்பாதித்து அந்தக் காசை வங்கியில் சேமித்து வைத்திருக்கிறவன்; செல்லம்மாவிடம் சுனில் கொடுத்து வைத்திருந்த சொத்துப் பையைத் திருடிக் கொள்கிற முத்தையா – வங்கியிலிருந்து எடுத்துவந்த பணத்தை செல்லமாவிடம் கொடுத்து, பிறகு வாங்கிக் கொள்வதாக சொல்கிற சுனில்; முத்தையா நம்பிக்கை துரோகி – சுனிலோ,  வெள்ளந்தி போல நம்புகிறவன்; செல்லம்மா தனது புருஷனிடம்  எரிந்து எரிந்து விழுகிறாள் – அய்யலானிடம் குழைந்து குழைந்து நெளிகிறாள்; இரவு படுக்கையில் காமத்தோடு முத்தையா நெருங்கும்போது தள்ளிவிடுகிறாள் செல்லம்மா – கார்த்திகை தீபத் திருவிழாவன்று விளக்குகள் எரிந்திடும் ஒளியிரவில் செல்லம்மாவின் அழகை சுனில் வர்ணிக்கும்போது ஏற்று புளகாங்கிதப்படுகிறாள்; 

இப்படியாக முத்தையாவும் சுனிலும், அதாவது தமிழரும் வடக்கரும் ஒப்பிடப்படுகிறார்கள். இந்த ஒப்பீடுகூட இடைவேளை வரைதான். ஏனெனில் இடைவேளையின்போது சுனில் இறந்துவிடுகிறான்.முற்பகுதியில் சுனிலுடன் ஒப்பிட்டு இழிவு செய்யப்பட்ட முத்தையா பிற்பகுதியில் சுனில் இல்லாததால் வேறு வகையாக இழிவு செய்யப்படுகிறான். முத்தையா கோழை. பேய் பயம் இன்னும் அவனை விட்டு நீங்கியிருக்கவில்லை. ஊரார் நடுவே அத்தனை பேரும் வேடிக்கை பார்க்கும்படி பொண்டாட்டி முத்தையாவைக் கேவலமாகப் பேசும்பொழுதும், ஒரு திருடனைப் போலீஸ்காரன் தெருவில் இழுத்துச் செல்வது போல முத்தையாவை செல்லம்மா சட்டைக் காலரைப் பிடித்துத் தெருவில் இழுத்துச்  செல்லும்போதும் ரோஷம் வராத அளவு சொரணை கெட்டவனாக இருக்கிறான்… (‘மானங்கெட்ட ஆம்பளை’ என்கிறார் இயக்குநர்.) செத்துப்போன சுனில் செத்துப் போவதற்கு முன்னர் செல்லம்மாவிடம் கொடுத்து வைத்திருந்த ஒரு சொத்துப் பையைக் காணவில்லை என்பதால் முத்தையாவை சந்தேகப்பட்ட செல்லம்மா தன் தந்தையாருடன் சேர்ந்து முத்தையாவை இழுத்துக்கொண்டு கோயிலுக்குப் போய் சாமிக்கு முன்னால் நிறுத்தி சத்தியம் செய்யச் சொல்கிறாள். திருடவில்லை என்று சத்தியம் செய்துவிட்டு அந்த இடத்தைவிட்டு விரைவாக நீங்குகிறான் முத்தையா.அவனைத் துரத்திச் சென்ற செல்லம்மா தங்கள் குடும்பத்துக்கு என்று ஒரு வாரிசுவை உருவாக்கப்போகிற அடிவயிற்றின் மீது கைவைத்து, சத்தியம் செய்யச்சொல்கிறாள். அப்பொழுதும்  சத்தியம் செய்கிறான் முத்தையா – தான் எடுக்கவில்லை என்று! முத்தையா இப்படிச் செய்கிற சத்தியம் எல்லாம் பொய் சத்தியமே என்கிற உண்மை இறுதிக் காட்சியில் பார்வையாளருக்கு அவிழ்க்கப்படுகிறது. அப்படியானால் இந்த முத்தையா என்கிற தமிழன் எவ்வளவு கேவலமானவன் பாருங்கள்… சாமிக்கும் உண்மையானவன் அல்ல.பிறக்கப் போகிற குழந்தைக்கும் உண்மையானவன் அல்ல ( குழந்தை மீதுகூட பொய் சத்தியம் செய்கிறவனாக இருப்பதால்தான் இவனுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை என்கிற ‘பேருண்மை’ அடிநாதமாக இருக்கிறது).

இறந்து போன சுனில் அனாதையாகப் போய்ச்சேரக்கூடாது என்பதற்காக ஊர் மொத்தமும் கூடியிருந்து சுனிலுக்கான இறுதிக் கடமையைச் செய்கிறார்கள். நடப்புண்மை என்னவென்றால், தமிழ்நாட்டு கிராமங்களுக்குள் வடநாட்டாரின் வருகை மக்களிடையே எதிர்ப்புணர்வைக் கிளப்பியிருக்கிறது என்பதுதான் கள நிலவரம். இந்த உண்மையைப் பூசி மெழுகுவதற்காக இப்படியொரு போலி மனிதாபிமானம் கதை வடிவில் புனையப்படுகிறது.

வடநாட்டார் தமிழ் மண்ணில் தங்களை நிலை நிறுத்தியதற்குப் பின்னர் தமிழ்நாட்டின் பாட்டாளி வர்க்கம் கட்டுக்கோப்பை இழந்திருக்கிறது என்பதை உணர்ந்திருக்கிற தமிழ்ப் பாட்டாளி வர்க்கம் உள்ளூரப் பொருமிக்கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. இது, தமிழ்நாட்டு உள்நிலங்களில், நிலத்தை ஆதாரமாக்கி வாழ்கிற மக்களிடம்  வடவர் குறித்த மனப்பான்மை. மட்டுமின்றி, வடவர் வெளியேற வேண்டும் என்கிற தீர்மானமான குரல், மக்களுக்குள் கலந்துரையாடலாக நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. எவர் வேண்டுமானாலும் கள ஆய்வுக்குச் சென்று பரிசோதித்துப் பாருங்கள். தாங்கள் வடவரை வரவேற்கவில்லை என்பதை அன்றாடம் வெளிப்படுத்திவருகிறது தமிழ்ப் பாட்டாளி வர்க்கம். ‘வந்தாரை வாழவைக்கும் தமிழகம்’ என்ற முழக்கம் தங்களுடையது அல்ல என்கிறது தமிழ்ப் பாட்டாளி வர்க்கம்.  ஆனால் இந்தப் படமோ,  எதார்த்தத்தை முற்றிலுமாக மறுதலித்து, பொய்யான ஒன்றை ஆவணப்படுத்துகிறது.

சுனில் இறந்தபின்னர், சுனிலின் குடும்பம் அந்த கிராமத்துக்கு வருகிறது. சுனிலுக்குச் செய்யவேண்டிய இறுதிச் சடங்குகளை முறைப்படி செய்துவிட்டு அவர்கள் ஊரைவிட்டு அகல்கிறார்கள். அந்தக் குடும்பம் கிராமத்தில் தங்கியிருக்கும் காலத்தில் அந்தக் குடும்பத்தின் தாக்கத்தினால் முத்தையாவின் மனப்பான்மையில் மாற்றம் நிகழ்கிறதாம்…  முத்தையாவின் மனப்பான்மையில் மாற்றத்தைத் தொடங்கி வைத்தது, இறந்து போன சுனிலின் மகள். சுனிலின் ஐந்து வயதுப் பெண் குழந்தையால் முத்தையாவின் இழிந்த குணங்கள் எல்லாம் கழுவப்பட்டு, வடக்கத்தியரின் அன்பினால் புனிதமாக்கப்படுகிறான் தமிழன் என்கிறார் இயக்குநர். சுனிலின் குடும்பத்தார் பொழிகிற அன்பைக் கண்டு குற்றவுணர்ச்சிக்கு ஆட்பட்ட முத்தையா, சுனில் தன்னிடம் கொடுத்துப் போனதாகச் சொல்லி ஒரு பையை, சுனிலின் தந்தையிடம் ஒப்படைக்கிறான். சுனிலின் வங்கியில் இருந்த பணம் எங்கே போனதோ?… என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்த சூழ்நிலையில், தந்தையின் நன்றி பெருக்கெடுக்கிறது. கையெடுத்து வணங்குகிறார் முத்தையாவை. சுனிலுக்கு  இறுதிச்சடங்கு நடக்கும்போது சுனிலின் தந்தையோடு கை பிடித்து, அந்தச் சடங்குகளில் தானும் ஒருவனாக – அதாவது சுனிலுக்கு அண்ணனாக, அந்த வடக்கத்தைய குடும்பத்தில் மூத்த மகனாக – சடங்குகளை எல்லாம் செய்கிறான் முத்தையா. இவ்வாறாக ஒரு தமிழன் வடக்கத்தையக் குடும்பத்தில் மூத்த மகனாகிறான். அந்த வீட்டின் ஆண்பிள்ளை இறந்து போனதால் வடக்கத்தையக் குடும்பம் கிராமத்தை விட்டு வெளியேறிய பின்னர் செல்லம்மா தனது உப்பிய அடிவயிற்றில் முத்தையாவின் உள்ளங்கைகளைப் பொதிக்கிறாள். அவள் கர்ப்பம் தரித்திருக்கிறாள் என்று அறிகிறான் முத்தையா. வடக்கத்தையக் குடும்பம் அவனை மூத்த மகனாக ஏற்றுக்கொண்டது; மனைவியும் அவனிடம் அன்புகாட்டத் தொடங்கிவிட்டாள்; தந்தையும் ஆகிவிட்டான். அனாதையாக வாழ்ந்து வந்திருந்த முத்தையாவை ஏற்றுக்கொண்டது உலகாயுதம். இத்தனை அற்புதங்களையும் அவன் வாழ்வில் நிகழ்த்திக் காட்டியது, அவதாரமாக ‘முத்தையா’வின் வாழ்வில் வந்துதித்த சுனில் என்கிற ‘நீலமுத்து’க் கிருஷ்ணனே என்கிறது தோற்றப் பிரதி!

இப்பொழுது இந்தப் படத்தின் மறைபிரதியைக் கட்டமைத்துப் பார்ப்போம். மறைபிரதியின் சில கூறுகளை மட்டும் கட்டவிழ்த்துப் பார்ப்போம். பிற கூறுகளை, பார்வையாளரே தத்தமது அனுபவத்தில் கட்டவிழ்த்துப் பார்த்துக்கொள்ளலாம்.இப்பொழுது பொதுமக்களுக்குக் காணக் கிடைக்கிற தோற்றப் பிரதி, மூலப்பிரதி அல்ல. மூலப் பிரதி, மறைவாகக் கிடக்கிறது. அந்த மறைபிரதியின் நிழற்பிரதிதான் பொதுமக்கள் காணக்கிடைக்கிறதுபொதுமக்கள் காணக் கிடைக்கிற பிரதியில், விபத்தின் காரணமாக மாண்டு போகிறான் சுனில். மாண்டிருக்காவிட்டால் சுனிலை ‘ஒச்சம்’ செய்திருப்பான் முத்தையாவின் நண்பன்; சுனிலைக் கொன்றிருப்பான் முத்தையா.இந்தக் குற்றங்களை நிகழ்த்தக்கூடியவர்களாக இரண்டு தமிழர்களும் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தக் குற்றங்கள் நிகழ்வதற்கு முன்னர் இறந்து போய்விட்டான் சுனில். மொத்தத்தில் வன்முறையாளர்களாக, கொலை வெறி பிடித்தவர்களாகத் தமிழரைச் சித்தரிப்பதுதான் இயக்குநரின் நோக்கம். மறை பிரதியைப் பொருத்தவரை, சுனிலைக் கொன்றுவிட்டான் முத்தையா. அதாவது – தமிழன் கொலைகாரன்.
சுனிலைக் கொன்றது ஒரு விபத்துதான் என்கிறது தோற்றப் பிரதி; சுனிலைக் கொன்றது முத்தையாதான் என்கிறது மறைபிரதி.செல்லம்மாவின் வயிற்றில் தங்கியிருக்கும் கரு முத்தையாவினுடையது என்கிறது தோற்றப் பிரதி ; சுனிலுடையது என்கிறது மறைபிரதி!அவள் வயிற்றில் வந்து பிறந்திருப்பது வேறு யாரும் அல்ல … சுனில்தான். கார்த்திகை தீபத் திருநாளன்று விளக்குகளின் ஒளியில் இருவரும் தத்தம் பார்வையை வீசிக்கொண்டனரே, அதுதான் இப்படிக் கர்ப்பந்தரிப்பதற்குக் காரணம். சூரியனைக் கண்டு கருத்தரித்த குந்தி போல! என்கிறார் இயக்குநர். சுனிலைக் கொன்றுவிடுவதாக மீண்டும் மீண்டும் சூளுரைத்தவன் முத்தையா. ஆனால் செல்லம்மா என்கிற தமிழச்சியின் வயிற்றில் கருக் கொண்டு வளர்கிறான், ‘தன்னால் கொலை செய்யப்பட்ட’ வடக்கன்தான் என்பதை அறிந்துவிடாதபடி மூடனாக இருக்கிறான் தமிழன். இந்தப் படம் வெளியாவதற்கு முன்னர் சூட்டியிருந்த ‘வடக்கன்’ என்ற தலைப்பு, வடக்கத்தையத் தொழிலாள வர்க்கத்தையோ, சுனிலையோ குறிப்பிடுவது அல்ல. வைத்திருந்தது சுனிலுக்காக அல்ல ; செல்லம்மாவின் வயிற்றில் தங்கி இருக்கிற கருவின் பெயர்தான் ‘வடக்கன்’!சுனில் என்கிற பெயரின் பொருள் ‘நீல மணி’. அதனால்தான் படம் முழுவதும் நீல உடையில் வலம் வருகிறான் சுனில். முத்தையா என்பது வெண்மணி ; ஆனால் எப்பொழுதுமே கறை படிந்த முத்துபோலக் காட்சியளிப்பான் முத்தையா; சுனில் என்பது நீலமணி! தாலி கட்டிய உறவு ; தாலி கட்டாத உறவு! இப்படிப் பொருள் தருகிறது மறைபிரதி. சுனிலின் நீலம், கிருஷ்ணனைக் குறிப்பதாகவும் வடநாட்டில் பொருள் கொள்ளப்படுகிறது. அப்படியென்றால், செல்லம்மா ராதையாகிவிடுகிறாள்! ‘செல்லம்மா’ என்ற சொல்லை, ‘என் அன்பே’ என்று வேற்று மொழியில் பெயர்க்கலாம்.

செல்லம்மாவுக்காக சுனில் பாடுகிற இந்திப் பாடலின் வரிகள் :‘என்னைத் தழுவிக்கொள் அன்பே.இந்த அழகிய இரவுதிரும்ப வருமா?தெரியாது!இந்த வாழ்க்கையில் நாம்திரும்பவும் சந்திப்போமா?தெரியாது!’

சுனில் இறந்த பின்னர் சவப்பெட்டியில் கிடத்தப்பட்டிருக்கிறது சடலம்.முத்தையாவைத் தவிர அந்த முற்றத்தில் வேறு யாருமில்லை. சுனிலின் ஆவி அங்கேதான் சுற்றிக்கொண்டிருக்கிறது என்று நம்பி, இருட்டில் அஞ்சித் தவிக்கிறான் முத்தையா. அப்பொழுது முத்தையாவின் செவிகளில் விழுகிற பாடல் வரிகள்தான் மேலே உள்ளவை.முத்தையாவின் வாயினால் “செல்லம்மா” என்று அழைக்கப்பட்டவள், சுனிலின் வாயினால் “என் அன்பே” என்று இந்திப் பாடலாகிறாள். அதாவது ‘வடக்கத்தி’ ஆகிறாள் என்கிறது மறைபிரதி!இவ்வளவு காம விகாரங்களும், இன வக்கிரங்களும் பொதிந்துகிடக்கிற இந்தப் படைப்புதான் மிகச்சிறந்த உலகக் காவியமா? என்று கேட்கிறோம். ‘ஆம்’ என்றாலும் ‘இல்லை’ என்றாலும் விளக்கம் தாருங்கள் தமிழ்நாட்டு அறிவுத் திருக் கூட்டமே!

Leave a Response