சர்ச்சை காரணமாக பட்டத்தின் பெயர் மாற்றம் – வைரமுத்து அறிவிப்பு

மதுரைத் தமிழ் இசைச் சங்கம் 50 ஆண்டுகள் கடந்து இந்த ஆண்டு பொன்விழா கொண்டாடுகிறது. அந்த விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு ‘முத்தமிழ்ப் பேரறிஞர்’ என்ற பட்டம் வழங்கப்படுகிறது. இந்தப் பட்டமானது 1 இலட்சம் ரூபாய், பொற்கிழி, பதக்கம் மற்றும் பட்டயம் கொண்டது.

ஆகஸ்ட் 5 ஆம் தேதி மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெறும் விழாவில், அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரைத் தமிழ் இசைச் சங்கத் தலைவர் ஏ.சி.முத்தையா, தேவகி முத்தையா உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள். கர்நாடக இசைப் பாடகியும் சமயச் சொற்பொழிவாளருமான விசாகா ஹரி பொற்கிழி பெறுகிறார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

1980 ஆம் ஆண்டு பாரதிராஜாவின் நிழல்கள் படத்தில் ‘பொன்மாலைப் பொழுது’ என்ற பாடலின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார். இதுவரை 8000 பாடல்கள் எழுதியுள்ள கவிஞர் வைரமுத்து, இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்காக 7 முறை தேசிய விருது பெற்றிருக்கிறார்.

திரைப்பாட்டு – இலக்கியம் என்று இரண்டு துறைகளிலும் சிகரம் தொட்ட வைரமுத்து தனது கள்ளிக்காட்டு இதிகாசம் நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கிறார். அது 22 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.

இந்தியாவின் உயர்ந்த விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷண் விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

அந்நாள் இந்தியக் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் இவரைக் ‘காப்பியக் கவிஞர்’ என்று கொண்டாடினார். அந்நாள் இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இவரைக் ‘கவிசாம்ராட்’ என்று பாராட்டியிருக்கிறார். தமிழ்நாட்டின் அந்நாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி இவருக்குக் ‘கவிப்பேரரசு’ என்று பட்டம் தந்திருக்கிறார்.

உலகின் 5 கண்டங்களிலும் தமிழ் இலக்கியப் பயணம் செய்தவர். அண்மையில் இவர் எழுதிய ‘மகாகவிதை’ என்னும் பெருங்கவிதை நூலுக்கு மலேசியன் இந்தியக் காங்கிரஸ் மற்றும் தமிழ்ப்பேராயம் இணைந்து ஒரு இலட்சம் ரிங்கிட் (இந்திய மதிப்பில் 17 இலட்சம்) பரிசு வழங்கின.

இதுவரை 39 நூல்கள் எழுதியிருக்கும் கவிஞர் வைரமுத்து மூன்று பல்கலைக் கழகங்களின் கெளரவ டாக்டர் பட்டம் பெற்றவராவார். இவரது படைப்புகளை ஆராய்ச்சி செய்து 40 க்கும் மேற்பட்டவர்கள் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள்.

இப்போது தமிழ் இசைச் சங்கம் அவருக்கு, முத்தமிழ்ப் பேரறிஞர் என்கிற பட்டத்தை வழங்கவுள்ளது என் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பல விமர்சனங்கள் எழுந்தன.

முத்தமிழறிஞர் என்று கலைஞரை அழைப்பார்கள்.இப்போது இவர் அவரை மிஞ்சிவிட்டாரா? என்றெல்லாம் விமர்சனங்கள் வந்தன.

இதைத் தொடர்ந்து பட்டத்தின் பெயர் முத்தமிழ்ப் பெருங்கவிஞர் என்று மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவின் மூலம் இதை அறியமுடிகிறது.

அவர் ஆகஸ்ட் 4 ஆம் தேதி காலை எட்டுமணிக்கு வெளியிட்டுள்ள பதிவில்…

நாளை மாலை
மதுரை வருகிறேன்

ஒரு பட்டம் பெறுகிறேன்
எல்லார்க்கும்
பகிர்ந்துதரப் போகிறேன்

விருதுகள் புளகாங்கிதம்
தந்த காலம் போய்விட்டது;
இப்போது வெறும்
உலர்ந்த புன்னகைதான்

ஆனால் இது
சராசரி விருதல்ல;
சரித்திர விருது

பொன்விழாக் காணும்
மதுரைத் தமிழ் இசைச்
சங்கத்தால் வழங்கப்படும் விருது

அமைச்சர் தங்கம் தென்னரசு,
மதுரைத் தமிழ் இசைச்
சங்கத் தலைவர் ஏ.சி.முத்தையா,
திருமதி. தேவகி முத்தையா
உள்ளிட்டோர்
பட்டயமும் பொற்கிழியும்
வழங்கிப் பாராட்டும் விருது

ராஜா முத்தையா மன்றத்தில்
திங்கட்கிழமை மாலை 6மணிக்கு
வழங்கப்படும் விருது

மதுரைத் தமிழர்களே
மதுரத் தமிழ் வாணர்களே

வையை நதிகிழிக்கும்
மைய மதுரையிலே
துய்ய தமிழ்கேட்கப்
பைய வரும் பாங்கியரே

சங்கத் தமிழின்
சிங்கக் குருளைகளே
களிப்பேற்ற வரும்
புலிப் போத்துகளே

உங்களைக் காணக்
காத்திருக்கிறேன்

இந்த விருது
எனக்கான பெருமையல்ல;
என்னை எடுத்துத் தமிழ்
தன்னை அலங்கரித்துக்
கொள்கிறது

கவிதா மண்டலம்
களிகொள்கிறது

ஏனென்றால்
விருதின் பெயர்
‘முத்தமிழ்ப் பெருங்கவிஞர்’

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Response