
அப்பால் ஒரு நிலம் இப்போதுதான் வாசித்து முடித்தேன்..
களத்திலிருக்கும் ஒரு சிறிய உளவுப்படையணி எதிரியின் வசமிருக்கும் கிளிநொச்சி முகாமுக்குள் ஊடுருவி உளவெடுக்கத் திட்டமிடுவதும் செயல்படுத்துவதும்தான் கதைக்களம்..
ஓயாத அலைகள02 மூலம் சிங்கள ராணுவத்திடமிருந்து புலிகள் கிளிநொச்சியை வெற்றிகொண்டதும், அதற்குக் காரணமாக இருந்த வேவு நடவடிக்கையின் மீதான புனைவே இந்நாவல்..
பொதுவில் போரில் வெற்றி தோல்வி மட்டுமே கவனத்தைப்பெறும்.. அதிலும் வேவுப்படையணியின் தியாகமோ, வெற்றியோ
களத்திலிருக்கும் படையணியினர்கூட அறிவதற்கு வாய்ப்புகள் குறைவு..
அப்படியாக, மரணத்தைச் சுமந்தபடி மறைந்து திரியும் சிறிய படையணியோடு உடனிருந்த அனுபவத்தை வாசிப்பவரை உணரவைப்பதில் முழுவெற்றியடைந்திருக்கிறார் குணா கவியழகன்
மரணம் துரத்தத்துரத்த ஓடும் சூழலை நகைச்சுவையோடு எதிர்கொள்ளும் மணியின் சமநிலை குலையாத மனோதிடம் வாய்ப்பதரிது.. அர்ப்பணிப்புள்ள இளம் போராளி வீரன், கூர்மதி கொண்டதளபதி றோமியோ,போர்த்துயரங்களால் தளராத வீரனம்மா, கில்மன் அனைவருமே அற்புதமான மனிதர்கள்
போரென்பது கூட்டு நடவடிக்கை.. வரலாறு அதன் முடிவுகளை மட்டுமே தன் நினைவில் வைத்திருக்கும்.. இலக்கியம் மட்டுமே அதன் உணர்வுகளை பதிவு செய்யும்..
முப்பதாண்டு கால தியாகமும், வீரமும் முள்ளிவாய்க்காலுக்குள் முடக்கி அழிக்கப்பட்டன..
மாவீரர் துயிலுமிடங்களைக்கூட பேரினவாதம் எதிர்வரும் சந்ததிக்கு அடையாளமாக விட்டு வைக்கவில்லை..
இந்நிலையில் குணா கவியழகன் தன் எழுத்தால் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கும் மாவீரர் இல்லங்கள்தாம்
நஞ்சுண்டகாடும், விடமேறிய கனவும், அப்பால் ஒரு நிலமும்.. இவற்றை எவனாலும் அழிக்கவியலாது..
கவியழகனும் அவரோடு களத்திலிருந்த தம்பிகளும்,தங்கைகளும்
எழுதித்தீராத வீரத்தின் கதைகளை எழுதிக் கொண்டே இருக்கவேண்டும்…
அவற்றை இயன்றவரை மொழிமாற்றிப் பரப்பவேண்டும்..
உலகப்பரப்பில் எங்கோ ஒரு மண்ணில் நடக்கும் அல்லது நடக்கவிருக்கும் உரிமைப்போருக்கு முன்னுதாரணமாகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் வல்லரசுகளெல்லாம் சேர்ந்து ஈழப்போராட்டத்தைத் தோற்கடித்தன..
எழுதுங்கள் பிள்ளைகளே..
இயக்கம் விட்ட இடத்தை
இலக்கியம் வெல்லட்டும்.
–கவிதாபாரதி


