உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவரும், தமிழர் தேசிய முன்னணி தலைவருமான பழ.நெடுமாறன் தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மறைமலையடிகளாரால் தோற்றுவிக்கப்பட்ட தனித்தமிழ் இயக்கத்தின் நூற்றாண்டு தொடக்க விழா மாநாடு வருகிற ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாதம் முதல் வாரத்தில் 2 நாட்கள் தஞ்சையில் நடத்தப்பட உள்ளது. இதற்காக வரவேற்பு குழு, மலர் தயாரிக்கும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த நூற்றாண்டு விழா இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. மேலும் மாவட்டம் தோறும் கருத்தரங்குகளும் நடத்த உள்ளோம்.
கெயில் நிறுவனம் எரிவாயு குழாய்களை விவசாய நிலங்களில் பதிப்பதினால் விவசாய நிலங்கள், ஆறு, கிணறுகள் பாதிக்கப்படும். விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு உடனடியாக மறு சீராய்வு மனுவை அளிக்க வேண்டும். மேலும் மத்திய அரசை வலியுறுத்தி இந்த திட்டத்தை நெடுஞ்சாலை ஓரம் பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக சட்டசபை தேர்தல் நிலை குறித்து தமிழர் தேசிய முன்னணி தெற்கு, மேற்கு, மத்திய மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து பேசி உள்ளோம். வடக்கு மாவட்ட நிர்வாகிகளுடன் வருகிற 13-ந்தேதி கலந்து பேச உள்ளோம். அதன் பின்னர் தலைமை செயற்குழு கூடி இறுதி முடிவு எடுக்கும். தேர்தலில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது தான் அனைத்து கட்சிகளின் விருப்பம். ஆனால் அதனை மக்கள் தான் முடிவு செய்வார்கள். தி.மு.க.- அ.தி.மு.க. இல்லாத 3-வது அணி அமைய வேண்டும் என நான் நீண்ட நாளாக வலியுறுத்தி வருகிறேன்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் மத்திய அரசுடன் கலந்து பேசி மாநில அரசு முடிவு செய்ய வேண்டும் என நீதிமன்றம் கூறி உள்ளது. இது தொடர்பாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க நீண்ட காலம் ஆகும். எனவே தமிழக அரசு 7 பேரையும் நீண்ட கால பரோலில் விடுதலை செய்ய வேண்டும். இதே போல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகளையும் நீண்டகால பரோலில் விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.


