தமிழர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நிலங்களை உரியவர்களிடம் இலங்கை ராணுவம் திருப்பியளிக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையர் ஜெயித் ராத் அல் ஹுசேன் வலியுறுத்தினார்.

இலங்கையில் கடந்த சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை 4 நாள்கள் சுற்றுப்பயணம் செய்த ஹுசேன், தமிழர்களின் பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்தினார். வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தலைவர்களை சந்தித்துப் பேசிய அவர், போரின்போது 4,000 தமிழர்கள் காணாமல் போன விவகாரத்தை இலங்கை அரசுத் தலைமையிடம் எடுத்துச் செல்வதாக உறுதியளித்தார்.
இந்நிலையில், தனது பயணத்தின் கடைசிநாளான செவ்வாய்க்கிழமை கொழும்பில் ஹுசேன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
கடந்த காலத் தீமைகளுக்கு எதிராகப் போரிட்டு, அவற்றை இலங்கை வெற்றி கொள்ள வேண்டும். பொறுப்புணர்வை உறுதிப்படுத்துவது, அதற்கான பணியில் ஈடுபடுவது ஆகியவற்றுக்கான அமைப்புகளை இலங்கை அரசு ஏற்படுத்த வேண்டும்.
இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, தமிழர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நிலங்களை உரியவர்களிடம் இலங்கை ராணுவம் திருப்பி அளிக்க வேண்டும்.
போர்க் குற்றத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டால் நற்பெயருக்கு ஏற்பட்ட கறையை அகற்றுவதற்கு அதுதொடர்பான விசாரணையை இலங்கை ராணுவம் எதிர்கொள்ள வேண்டும் என்றார் ஹுசேன்.


