தமிழில் படித்ததுதான் என் பலம் – விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேச்சு

திருப்பூர், சிங்கனூர் பகுதியில் உள்ள தாய்த்தமிழ் உயர்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, தாய்த்தமிழ் கல்விப் பணி அறக்கட்டளைத் தலைவர் ப.அருள்செல்வம் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாகிகள் மு.துரைசாமி, பழ.ரகுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தாளாளர் அ.சுப்பிரமணியன் வரவேற்றார்.

விழாவில், பெங்களூரு இந்திய விண்வெளி செயற்கைக்கோள் ஆய்வு மைய தலைமை திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:

எனது பெற்றோர் என்னை மேல்நிலைப் பள்ளி வரை தமிழில்தான் படிக்க வைத்தனர். தாய்மொழியில் படித்த காரணத்தால்தான் இன்று விஞ்ஞானியாக வளர்ந்துள்ளேன்.

என்னுடைய பலமே தாய்மொழியில் படித்ததுதான். தற்போதைய சூழலில், தமிழ் மொழியில் படித்தால் குழந்தைகள் முன்னேறாமல் போய் விடுவார்கள் என்ற அச்சம் பெற்றோர்களிடம் உள்ளது. அந்த எண்ணம் தவறானது.

முதல் 15 ஆண்டுகள் குழந்தைகள் இயல்பானவர்களாக இருக்க வேண்டும். ஐன்ஸ்டீன், அப்துல் கலாம் ஆகியோரெல்லாம் அப்படித்தான் இருந்தார்கள். பெற்றோர்கள், குழந்தைகளை இறுக்கமானவர்களாக மாற்றக்கூடாது. தங்களது எண்ணங்களை அவர்கள் மீது திணிக்கக் கூடாது.

இஸ்ரோவில் பணிபுரியும் 3 ஆயிரம் விஞ்ஞானிகளில் 90 சதவீதம் பேர் அவரவர் தாய் மொழியில் படித்தவர்கள்தான் என்றார்.

தலைமை ஆசிரியர் ர.சங்கர் நன்றி கூறினார். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

 

Leave a Response