இராகுல்காந்தி சொன்னதைச் செய்ய வேண்டிய நெருக்கடியில் மோடி – தில்லி பரபரப்பு

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. எனினும், பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் பாஜக ஆட்சி அமைக்க, 16 இடங்களில் வெற்றி பெற்றுள்ள சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் மற்றும் 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சிகளின் ஆதரவு அவசியம் தேவைப்படுகிறது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை இல்லாத பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துள்ள ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) ஆகிய கட்சிகள், பாஜக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அக்னிபாத் திட்டத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என நிபந்தனைகள் விதித்துள்ளன.

ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் கே.சி.தியாகி அளித்த பேட்டியில், “அக்னிபாத் திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு எங்கள் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. ஏனென்றால், அக்னிவீரர் திட்டம் தொடர்பாக வாக்காளர்கள் மத்தியில் கோபம் உள்ளது. எங்கள் கட்சி அந்தக் குறைபாடுகளை நீக்க வேண்டும் என்று விரும்புகிறது. மக்களுக்கு இந்தத் திட்டங்களில் ஆட்சேபனை உள்ளது. அதேபோல், காலத்தின் தேவையாக இருக்கும் சாதிவாரிக் கணக்கெடுப்பை நாடு முழுவதும் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

இதேபோல், பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள மற்றொரு கட்சியான லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவரும் சிராக் பஸ்வானும், அக்னிபாத் திட்டத்தை மறு ஆய்வு செய்ய பாஜகவுக்கு நிபந்தனை வைத்துள்ளார். இது தொடர்பாக பேசிய சிராக் பஸ்வான், “அக்னிபாத் திட்டத்தை மறுஆய்வு செய்வதற்கும், நாடு தழுவிய சாதிவாரிக் கணக்கெடுப்புக்கும் நான் ஆதரவாக இருப்பேன். எங்கள் கட்சி அக்னிபாத் திட்டத்தை மறு ஆய்வு செய்வதற்கும் மற்றும் சாதிவாரி கணக்கெடுப்புக்கும் அழுத்தம் கொடுக்கும்” என்று அவர் தெரிவித்தார்.

இவ்விரு கட்சிகளும் இப்போது சொல்வதை தேர்தல் பரப்புரைகளின் போது தீவிரமாகப் பேசி வந்தார் இராகுல்காந்தி.

அவர் செய்வதாகச் சொன்னவற்றை பாஜகவே செய்யவேண்டும் என்று கூட்டணிக்கட்சிகள் கூறியிருப்பது தொல்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a Response