பாசிசத்தை முறியடித்த மு.க.ஸ்டாலின் – பழ.நெடுமாறன் பாராட்டு

தமிழ்நாட்டில் பாசிசத்தை முழுமையாக முறியடித்த முதலமைச்சருக்குப் பாராட்டுத் தெர்வித்து
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்…

தனித்த பெரும்பான்மையைக்கூட பெற முடியாது பா.ச.க.வைத் தோற்கடித்துக் காட்டிய மக்களுக்கு நமது பாராட்டுதல்கள். தமிழ்நாட்டில் 40 தொகுதிகளில் பா.ச.க. கூட்டணியை படுதோல்வியடையச் செய்யும் வகையில், கூட்டணியை அமைத்து பெரும் வெற்றி கண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வாழ்த்திப் பாராட்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பாசிச பேரபாயத்திலிருந்து நாடு காக்கப்பட்டது என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் செ.ப.முத்தமிழ்மணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்…

சனநாயகத்தைச் சீரழித்து சர்வாதிகாரத்தை நிலைநாட்ட பா.ச.க. ஆட்சி இடைவிடாத முயற்சியில் ஈடுபட்டது. தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முதலமைச்சர்கள் உள்பட அமைச்சர்கள், தலைவர்கள் அனைவர் மீதும் அமலாக்கத்துறையின் மூலம் பொய் வழக்குகள் தொடுக்கப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

எந்தத் தேர்தலிலும் கண்டறியாத வகையில் அதிகார பலம், பணபலம் ஆகியவற்றை முழுமையாகப் பயன்படுத்தியும், பத்திரிகைகள், ஊடகங்கள் மூலமாக 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ச.க. வெற்றி பெறும் எனப் பொய்யாகப் பிரச்சாரம் செய்தும், நாட்டின் தலைமையமைச்சரின் தகுதிக்குச் சற்றும் பொருந்தாத வகையில் கீழிறங்கித் தரங்கெட்ட வகையில் மோடி அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காகக் கூறினார்.

சனநாயகத்திற்குப் புறம்பான அவரின் பேச்சுகளைக் கண்டு வெறுத்துப்போன மக்கள் கொதித்தெழுந்து பா.ச.க.வுக்குத் தனிப் பெரும்பான்மைக்கூட கிடைக்காத வகையில் தோற்கடித்தனர். கூட்டணிக் கட்சிகளின் தயவில்லாமல் அவர் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலைமை உருவாகியுள்ளது. அரசியல் சட்ட மாண்பையும், நாட்டின் எதிர்காலத்தையும் பாதுகாக்கும் வகையில் மக்கள் தீர்ப்பளித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் பா.ச.க.வையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் தடம் பதிக்கவிடாமல் அடியோடு தோற்கடித்து பாசிச பேரபாயம் படரவிடாமல் தடுத்துவிரட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இயங்கிய கூட்டணி வேட்பாளர்களுக்கும், கட்சிகளுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரியனவாகுக.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response