மலையாளத்தில் உறுதிமொழி ஏற்ற திமுக சமஉ – புதுச்சேரி பரபரப்பு

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இதில்,என்.ஆர்.காங்கிரசு 12, பாஜக 4, அதிமுக, லஜக தலா 1 இடங்கள் என மொத்தம் 18 இடங்களைக் கைப்பற்றியது.எதிரணியில்,திமுக 5, காங்கிரசு 1, நேயம் மக்கள் கழகம் 1, தவெக 2, சுயேட்சை 3 இடங்களையும் வென்றன.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல்வராக இரங்கசாமி மே 13 ஆம் தேதி பதவியேற்றார்.அவருடன் அமைச்சர்களாக நமச்சிவாயம்,மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோரும் பதவியேற்றனர்.

தொடர்ந்து 18 ஆம் தேதி புதுச்சேரி தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராக அன்பழகனை,ஆளுநர் மாளிகையில் துணை நிலை ஆளுநர் கைலாசநாதன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக நேற்று காலை சட்டப்பேரவை தற்காலிக சட்டப்பேரவை தலைவர் அன்பழகன் தலைமையில் கூடியது.அப்போது, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

புதுச்சேரி மங்கலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக முதல்வர் இரங்கசாமி பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.கடவுள் அறிய உறுதி கூறுகிறேன் என அவர் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி பிரமாணம் நடந்தது.தவெகவில் இருவர் சட்டமன்ற உறுப்பினர்களாக வென்றனர். இதில் மணவெளி தொகுதியில் தேர்வு செய்யப்பட்ட ராமு பதவியேற்புக்கான உறுதிமொழியை வாசித்தபோது கடவுள் அறிய எனக்கூறி விஜய் படத்தைக் காட்டினார். இதைப்போல ஏம்பலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மோகன்தாஸ் கடவுள் என்.ஆர். அறிய எனக்கூறி பதவியேற்றார்.
மற்றொரு தவெக சமஉ சாய்சரவணன்குமார் பேரவை முடிந்தபிறகு தனியாக வந்து பதவிப்பிரமாணம் எடுத்துகொண்டார்.

பாகூர் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார்.அவர் பதவியேற்கும்போது மலையாளத்தில் உறுதிமொழியை வாசித்தார்.

அவர், பிரெஞ்சு மொழியில் உறுதிமொழி வாசிக்க அனுமதி கேட்டிருந்தார்.ஆனால் சட்டப்பேரவைச் செயலர் தயாளன்,பிரெஞ்சு மொழியில் உறுதிமொழி வாசிக்க நடைமுறை இல்லை எனக்கூறி அனுமதி மறுத்துள்ளார். அதையடுத்து அவர் மலையாளத்தில் உறுதிமொழியை வாசித்தார்.

இதுபற்றி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கூறியதாவது…

புதுச்சேரியில் பிரெஞ்சுமொழியின் நிலை குறித்து நான் கவனத்தை ஈர்க்க விரும்பினேன்.ஆனால் சபாநாயகர் மறுத்துவிட்டார்.எனவே,எனது எதிர்ப்பைப் பதிவு செய்து,பிரெஞ்சு மொழியின் நிலை குறித்துக் கவனத்தை ஈர்க்க மலையாளத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டேன்

இவ்வாறு அவர் கூறினார்.

ஒன்றிய அரசின் கட்டாய இந்தித் திணிப்புக்கு எதிரான கவனம் ஈர்க்கும் வகையிலான,திமுக உறுப்பினரின் இந்தச்செயல் புதுச்சேரி மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Leave a Response