மக்களவையில் மொத்தமுள்ள 543 இடங்களுக்கான 18 ஆவது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கிய தேர்தல் இதுவரை 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 486 தொகுதிகளில் ஆறு கட்ட வாக்குப்பதிவுகள் முடிந்துவிட்டன.
இந்நிலையில் 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் 7 ஆம் கட்டமாக இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.
பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உள்பட 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. அதே போல் ஒடிசாவில் 41 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இறுதிக் கட்டமாக நடக்கும் 57 தொகுதியில் மொத்தம் 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 10.02 கோடி பேர் இன்று வாக்களிக்க உள்ளனர். இதற்காக 1.09 இலட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்று வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகள்..
பஞ்சாப் 13, இமாச்சல் 4,உத்தரபிரதேசம் 13,மேற்குவங்கம் 9,பீகார் 8,ஒடிசா 6,ஜார்க்கண்ட் 3, சண்டிகார் 1
பிரதமர் மோடி உபி மாநிலம் வாரணாசியில் தொடர்ந்து 3 ஆவது முறையாகப் போட்டியிடுகிறார். மோடிக்கு எதிராக அஜய் ராய் (காங்கிரசு), அதர் ஜமால் லாரி (பிஎஸ்பி), கோலிசெட்டி சிவ குமார் (யுக துளசி கட்சி), ககன் பிரகாஷ் யாதவ், (அப்னா தளம், காமராவதி), மற்றும் சுயேச்சைகள் தினேஷ் குமார் யாதவ், சஞ்சய் குமார் திவாரி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான மார்ச் 16 ஆம் தேதி தொடங்கிய தேர்தல் பரபரப்பு 76 நாள்களுக்குப் பிறகு நேற்றுடன் முழுமையாக நிறைவடைந்தது.
கிட்டத்தட்ட இரண்டரை மாதங்களாக தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த நிலையில், தற்போது தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்று வாக்குப்பதிவு முடிந்த பிறகு மாலை 6.30 மணிக்குப் பிறகு வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துகணிப்புகளை அச்சு, காட்சி ஊடகங்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் வெளியிடலாம் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் இன்று மாலை 6.30மணிக்கு மேல் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வௌியாக உள்ளன. அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அதனுடன் ஆந்திரா, ஒடிசா சட்டப்பேரவையில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.
அதற்கு முன்னதாக மக்களவைத் தேர்தலுடன் நடந்த அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (ஜூன் 2) எண்ணப்படும்.
6 கட்டங்களில் எவ்வளவு விழுக்காடு வாக்குப்பதிவு….
முதல்கட்டம் 66.14
2 ஆவது கட்டம் 66.71
3 ஆவது கட்டம் 65.68
4 ஆவது கட்டம் 69.16
5 ஆவது கட்டம் 62.20
6 ஆவது கட்டம் 63.36