2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பிரதமராக இருந்தவர் மன்மோகன் சிங்.அவர் தற்போது வயது மூப்பு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகி இருக்கிறார். கடந்த மாதம் இராஜஸ்தான், பன்ஸ்வாராவில் தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் மோடி, 2006 ஆம் ஆண்டின் போது, நாட்டின் வளங்களில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை இருக்க வேண்டும் என்று அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.பிரதமர் மோடியின் பேச்சுக்குக் காங்கிரசு தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
மக்களவைக்கு 6 கட்டத் தேர்தல் முடிந்து நாளை கடைசி கட்டத் தேர்தல் நடக்க உள்ள நிலையில் மோடியின் இராஜஸ்தான் பேச்சுக்கு மன்மோகன் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் நடைபெறுவதையொட்டி அந்த மாநில மக்களுக்கு மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்து ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில்…
அன்பு, அமைதி, சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு ஒரு வாய்ப்பு அளியுங்கள்.காங்கிரசுக் கட்சியால் மட்டுமே வளர்ச்சி அடிப்படையிலான, எதிர்காலத்தை உருவாக்கி அதில், ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பைப் பாதுகாக்க முடியும். கடந்த காலத்தில் எந்தவொரு பிரதமரும் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரையோ அல்லது எதிர்க்கட்சியையோ குறிவைக்கும் வகையில் இதுபோன்ற வெறுக்கத்தக்க, நாடாளுமன்ற மரபுகளை மீறும் வகையிலும், முரட்டுத்தனமான சொற்களை உச்சரித்தது இல்லை.
தேர்தல் பிரசாரத்தின் போது, மோடி மிகவும் மோசமான வெறுப்பு பேச்சுகளில் ஈடுபட்டுள்ளார். அவை முற்றிலும் பிரிவினையை ஏற்படுத்தும். தரம் தாழ்ந்த, கண்ணியம் குறைந்த பேச்சால் பிரதமர் பதவியின் மாண்பைக் குறைத்த முதல் பிரதமர் மோடி ஆவார். மோடியின் வெறுப்புப் பேச்சுக்களால் பிரதமர் பதவிக்கே இழுக்கு. என்னைப் பற்றியும் பொய்யான தகவல்களை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். நான் என் வாழ்நாளில் ஒரு சமூகத்திலிருந்து மற்ற சமூகத்தைத் தனித்துப் பார்த்ததில்லை.
அப்படி ஒரு சமூகத்தைப் பிரித்துப் பார்ப்பதற்குக் காப்புரிமை வாங்கி வைத்துள்ள ஒரே கட்சி பாஜக. பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குச் சீரழிந்து உள்ளது. பணமதிப்பிழப்பு என்னும் பேரழிவு, குறைபாடுள்ள ஜிஎஸ்டி, கொரோனா தொற்றின் போது அமலில் இருந்த வலிமிகுந்த தவறான நிர்வாகம் ஆகியவை பரிதாபகரமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளன. இதற்கு முன் இல்லாத அளவுக்கான வேலையின்மை, கட்டுப்பாடற்ற பணவீக்கம் ஆகியவை 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சமத்துவமின்மையை அதிகரித்திருக்கிறது.
பாஜக அரசின் தவறான ஆட்சியால் குடும்ப சேமிப்புகள் 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துவிட்டன. 30 இலட்சம் அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளன. நாட்டின் ஜிடிபி ஆறு முதல் ஏழு சதவீதம் வரை இருக்கும் என்ற எதிர்பார்ப்பு புதிய இயல்பானதாக மாறியுள்ளது. பாஜக அரசின் கீழ் சராசரி ஜிடிபி வளர்ச்சி ஆறு சதவீதத்திற்கும் கீழ் சரிந்துள்ளது. காங்கிரசு ஆட்சிக் காலத்தில் அது சுமார் எட்டு சதவீதமாக இருந்தது . முன்னெப்போதும் இல்லாத வேலையின்மை மற்றும் கட்டுப்பாடற்ற பணவீக்கம் ஆகியவை சமத்துவமின்மையை பெரிதும் விரிவுபடுத்தியுள்ளன,
அக்னி வீரர் திட்டத்தை அமல்படுத்தியதன் மூலம், பாஜக கட்சி தேசபக்தி, வீரம் மற்றும் சேவையின் மதிப்பு வெறும் 4 ஆண்டுகள்தான் என்று மதிப்பிட்டுள்ளது. இது பாஜகவின் போலி தேசியவாதத்தைக் காட்டுகிறது. ஆயுதப்படை மூலம் தாய்நாட்டிற்குச் சேவை செய்ய வேண்டும் என்று கனவு காணும் பஞ்சாப் இளைஞர்கள், இப்போது 4 ஆண்டுகளுக்கு மட்டுமே பணியமர்த்தப்படுவதைப் பற்றி ஒருமுறைக்கு இருமுறை யோசிக்கிறார்கள். அக்னிவீர் திட்டம் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் பஞ்சாப், பஞ்சாபியர்களை பழிவாங்கும் முயற்சிகள் தீவிரமாக நடந்தன. இதையெல்லாம் இந்திய மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அது இப்போது உச்சத்தை எட்டியுள்ளது. இந்த முரண்பாடு சக்திகளிடமிருந்து நமது அன்பான தேசத்தைக் காப்பாற்றுவதே இப்போது நமது கடமை. பஞ்சாப் மக்களின் தியாக உணர்வை அனைவரும் அறிவர். நாட்டில் சர்வாதிகாரத்தை ஏற்படுத்தத் துடிக்கும் ஆட்சியிடம் இருந்து நாட்டின் ஜனநாயகம், அரசியலமைப்பை காப்பதற்கான கடைசி வாய்ப்பாகும் இது
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.