பாரதிதாசன் பிறந்த நாளில், கவிஞர்களுக்கு தமிழ்மாமணி விருது -புதுவை முதல்வர் பேச்சு

புதுச்சேரி அரசு கலை, பண்பாட்டுத் துறையும், தென்னக பண்பாட்டு மையமும் (தஞ்சாவூர்) இணைந்து புதுப்பிக்கப்பட்ட மகாகவி பாரதியார் நினைவு அருங்காட்சியகம்-ஆய்வு மையம் திறப்பு விழாவை நடத்தியது.

விழாவுக்கு புதுவை சட்டபேரவைத் தலைவர் சபாபதி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு மகாகவி பாரதியார் நினைவு அருங்காட்சியகம்-ஆய்வு மையத்தினை திறந்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து அவர், புதுப்பிக்கப்பட்ட மகாகவி பாரதியார் அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பாரதியார் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

விழாவில் அமைச்சர் தியாகராஜன், பாராளுமன்ற உறுப்பினர் கோகுலகிருஷ்ணன் , சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன் ., புதுவை தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

புதுச்சேரிக்கு பெருமை சேர்ப்பதே பிரெஞ்சு காலத்தில் கட்டப்பட்ட பழமையான கட்டிங்கள் ஆகும். புதுவையில் உள்ள தனியார் கட்டிடங்களைப் பாதுகாக்க அரசு ரூ.ஒரு லட்சம் வழங்கி வருகிறது.

புதுவை அரசால் ரூ.ஒரு கோடி செலவில் மகாகவி பாரதியார் நினைவு அருங்காட்சியகம்-ஆய்வு மையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதுவையில் பழமை வாய்ந்த பல கட்டிடங்கள் பாழடைந்துள்ளது. அவற்றைப் புதுப்பிக்க அரசு அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது. ஆன்மிகத் தலமான புதுச்சேரியில் உள்ள கோவில்களில் இருந்து பல்வேறு கவிதை தொகுப்புகளை மகாகவி பாரதியார் எழுதியுள்ளார். இது புதுவைக்கு மற்றொரு பெருமையாகும்.

புதுச்சேரியில் உள்ள கவிஞர்களுக்கு கலைமாமணி, தமிழ்மாமணி விருதுகளை பாரதிதாசன் பிறந்தநாள் அன்று வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் புதுவையில் உள்ள கவிஞர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு தனிகவனம் செலுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக இசை நிகழ்ச்சியும், பரத நாட்டியமும் நடைபெற்றது. விழாவில் கலை, பண்பாட்டுத்துறை செயலாளர் முத்தம்மா வரவேற்றார். முடிவில் இயக்குனர் ராகினி நன்றி கூறினார்.

Leave a Response