தமிழ்நாட்டைப் பழிவாங்கும் பாஜக அரசுக்குப் பதிலடி கொடுப்போம் – கே.பாலகிருட்டிணன் ஆவேசம்

நாகை மாவட்டம், கீழவெண்மணியில், 55 ஆவது வெண்மணித் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு, திங்களன்று பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருட்டிணன் பங்கேற்றுப் பேசினார்.

அவர் பேசியதாவது…..

அமைப்பாகத் திரண்ட உழைக்கும் வர்க்கம் ஒருங்கிணைந்த தஞ்சையில், கீழவெண்மணி மண்ணில் நிலப்பிரபுத்துவம் தனது கோரமுகத்தை வெளிக்காட்டியது. பெண்கள், குழந்தைகள் உட்பட 44 விவசாயத் தொழிலாளர்களை எரித்துக் கொன்றது. அவர்களின் தியாகத்தைத்தான் ஆண்டுதோறும் வீரவணக்க நாளாகக் கடைப்பிடித்து வருகிறோம்.

நாம் அமைப்பாக ஒன்று திரளும்போதுதான், அமைப்பை வலுமிக்கதாகக் கட்டுவதன் மூலம்தான் எதிரிகளுக்கு நம் மீதான அச்சம் கலந்த பார்வையை உருவாக்க முடியும். நமது பலத்தையும் காட்ட முடியும். அந்த வகையில், அமைப்பாக ஒன்று திரண்டு 1968 இல் இந்த மண்ணில் விவசாயத்தை நம்பியிருந்த மக்கள் போராடினர். செங்கொடி இயக்கத்தின் கீழ் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு இந்த மண்ணைக் காக்கவும், தங்கள் சுயமரியாதையைப் பாதுகாத்துக் கொள்ளவும் அணிதிரண்டனர்.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் செங்கொடி இயக்கம் ஆளுமை செலுத்துகிற இயக்கமாக இருந்தும், இங்கு எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று சில நாட்களுக்கு முன்பு பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமைத்தனம் மண்டிக்கிடந்த தஞ்சை மண்ணில், இன்று ஒரு வரை ‘வாடா’ என்று அழைக்க முடியாது; ஒரு பெண்ணை ‘வாடி’ என்று கூப்பிட முடியாது என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது என்றால், அதற்குக் காரணம் செங்கொடி இயக்கம் தான் என்பதை, அண்ணாமலை யின் புத்திக்கு உறைப்பதற்காகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

நிலப்பிரபுகள் அன்று வைத்த தீ அன்றோடு எரிந்து அணைந்து விடவில்லை. இன்னும் எங்கள் நெஞ்சில் எரிந்து கொண்டிருக்கிறது. நிலப்பிரபுத்துவத்தின் வழி வந்த முதலாளித்துவமும், அதன் கொடுமைகளும் என்றைக்கு ஒழித்துக்கட்டப்படுகிறதோ அன்று தான் எங்கள் நெஞ்சில் கனன்று கொண்டிருக்கும் இந்த வெண்மணித் தீயை அணைக்க முடியும். அது வரை இந்த நெருப்பினை எங்கள் நெஞ்சில் சுமந்துகொண்டே இருப்போம். அணைக்க முடியாத நெருப்பு அது.

சாதியப் பாகுபாடுகளையும், அடிமைத்தனத்தையும், விவசாய மக்களுக்கு இழைக்கப்பட்ட இன்னல்களையும், கொடுமைகளையும் வேரோடு பிடுங்குவதற்கு நடேசன் துவங்கி, செம்படை இயக்கத்தின் தளபதிகளாக மணலூர் மணியம்மை, மணலி கந்தசாமி, பி.சீனிவாச ராவ், பி.எஸ்.தனுஷ்கோடி, கே.ஆர்.ஞானசம்பந்தம், கோ.வீரய்யன் உள்ளிட்ட செங்கொடி இயக்கத்தின் புதல்வர்கள் இம்மண்ணில் இருக்கிற ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் களம் கண்டார்கள். எனவேதான், இந்நாளை வீரவணக்க நாளாகக் கடைப்பிடித்து வருகிறோம். நீதிமன்றங்கள் உழைக்கும் மக்களுக்கானதாக இல்லை.

இந்தக் காவல்துறையை நம்பியும் நாம் இல்லை. இலட்சக்கணக்கான செங்கொடிப் புதல்வர்களை நம்பியே இந்த இயக்கம் இருக்கிறது. 44 விவசாயத் தொழிலாளர்களை கொலை செய்தவர்களுக்கு நீதிமன்றங்கள் என்ன தண்டனை கொடுத்தன? ஆயுள் தண்டனை கொடுத்ததா? அல்லது தூக்குத் தண்டனை கொடுத்ததா? எனவேதான் நாம் சொல்கிறோம், செங்கொடி இயக்கத்தின் தோழர்களை நம்பியே நாம் இருக்கிறோம்.

தமிழ்நாட்டில் தீண்டாமை இல்லை என்று சொல்லிவிட முடியாது. இன்னும் தீண்டாமை வெவ்வேறு வடிவங்களில் இருந்து கொண்டிருக்கிறது. ‘எல்லோரும் சமம்’ என கூற வேண்டுமானால் அனைவரின் கையிலும் நிலம் இருக்க வேண்டும். சாதிய ஏற்றத்தாழ்வுகள் ஒழிய வேண்டும் என்றால் அடித்தட்டு மக்களாய் இருக்கின்ற ஏழை, எளிய – பாட்டாளி மக்களின் கைகளில் நிலம் போய்ச் சேர வேண்டும். உழுபவனுக்கே நிலம் வேண்டும். தமிழ்நாட்டில் எத்தனையோ சாதிய அமைப்புகள் இருக்கின்றன. ஏன் அனைவருக்கும் நிலம் வேண்டும் என்று அந்தச் சாதி அமைப்புகள் கேட்கவில்லை. செங்கொடி இயக்கம் மட்டும்தான் அனைவருக்கும் நிலம் இருக்க வேண்டும் என்று போராடுகிறது.

ஐந்து இலட்சம் ஏக்கர் பஞ்சமர் நிலத்தை இங்கு இருக்கும் பெரிய முதலாளிகளும், நிலச்சுவான்தார்களும் பிடுங்கி தனதாக்கிக் கொண்டனர். இந்த நிலங்களை மீட்கவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியை நான் பாராட்டுகிறேன். நிச்சயமாக பஞ்சமர் நிலத்தை மீட்டெடுக்க செங்கொடி இயக்கம் வலுவான போராட்டத்தை நடத்தும்.

நாடாளுமன்றத்தில் ஒரு கோமாளித்தனமான ஆட்சி நடக்கிறது. யாருமே நுழைய முடியாது என்று நம்பிக் கொண்டிருந்த நாடாளுமன்றத்திற்குள் புகைக் குப்பிகளை வீசி நாட்டின் பாதுகாப்பையே கேள்விக்கு உள்ளாக்குகின்றனர். ஆனால், புகைக்குப்பி வீசிய இருவருக்கு பாஸ் கொடுத்த பாஜக எம்.பி.யை அவர்களால் சஸ்பெண்ட் செய்ய முடியவில்லை, கேள்வி கேட்க முடியவில்லை. மாறாக, இந்த நாட்டின் நாடாளுமன்ற பாதுகாப்பு குறித்து அக்கறையுடன் கேள்விகேட்ட 146 நாடாளுமன்ற எதிர்க்கட்சிக் உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்கிறார்கள். மாநிலத்திற்கு மாநிலம் ஆளுநர்களை அனுப்பி கலவரம் செய்ய வைக்கிறார்கள். இந்த ஆளுநர்கள் சாலையில் இறங்கி தெருச்சண்டை நடத்துகிறார்கள்.

தமிழ்நாட்டில் ஒருபுறம் கடுமையான மழை. மற்றொருபுறம் டெல்டா பகுதியில் வறட்சி நிலவுகிறது. தமிழ்நாடு முழுமைக்கும் இருக்கும் பாட்டாளி மக்கள் தங்களால் இயன்றதைச் செய்து, பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டி வருகிறார்கள். இந்தியாவில், அதிகமான வரி செலுத்தும் முக்கிய மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றாக இருக்கிறது. ஆனால், இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தொகை கொடுப்பதில் கூட தமிழ்நாட்டைப் பழி வாங்கும் போக்குடன் ஒன்றிய பாஜக அரசு செயல்படுகிறது.

எனவேதான், தமிழ்நாடு அரசு கேட்டிருக்கும் ரூ. 21 ஆயிரம் கோடி நிவாரண நிதித் தொகையைக் கொடுக்காவிட்டால் ஜனவரி 3 அன்று ஒன்றிய அரசின் அலுவலகங்கள் செயல்படும் சென்னை சாஸ்திரி பவனை முற்றுகை இடுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

அப்படியும் ஒன்றிய அரசு இறங்கி வரவில்லை என்றால், மாநிலத்திற்குள் நுழையும் ஒன்றிய அமைச்சர்களை, அவர்கள் செல்லும் இடமெல்லாம் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவோம். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக-வையும், அதிமுக-வையும் விரட்டியடிப்போம். அதற்கு வெண்மணித் தியாகிகள் நினைவு நாளில் வீர சபதம் ஏற்று, தேர்தல் களம் காண்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response