விடுதலைச்சிறுத்தைகளை அவமதித்தாரா எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்? – நடந்தது என்ன?

11/11/2023 அன்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தைப் பார்க்கச் சென்ற காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினரும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளருமான சிந்தனைச்செல்வனை நிற்க வைத்துப் பேசி அவமரியாதை செய்துவிட்டார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் என்கிற குற்றச்சாட்டு எழுந்தது.

அது தொடர்பாக சிந்தனைச்செல்வன் வெளியிட்டுள்ள விளக்கம்….

நாய்கள் குறைப்பதால் சூரியனின் பயணம் நின்று விடாது என்கிற உணர்வோடு கடந்து போவதா அல்லது இதையே எனது நன்றி உணர்வை வெளிப்படுத்த நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்வதா என என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்.

அமைச்சரின் இளைய மகளுக்கு அண்மையில் திருமணம் நடந்து முடிந்திருந்த நிலையில் புதுமணத் தம்பதிகளுக்கு நான்வாங்கி தந்த அரிய பகவான் புத்தரின் திருவுருவச் சிலையின் நுட்ப வேலைப்பாடுகள் குறித்து அருகிருந்தோரிடம் ஆர்வத்தோடு நான் விளக்கிக்கொண்டிருந்த காட்சியை மட்டும் வெட்டி ஒட்டி தவறாய் வியாக்கியானம் செய்யும் அற்பர்களைக் கண்டு நான் பரிதாபப்படுகிறேன்.

mrk - sinthanai
mrk – sinthanai

அண்ணன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் எனக்கு மட்டுமல்ல. விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கும்
எமது தலைவருக்கும் கிடைத்த தூய்மையான தோழமை.

சமூக நல்லிணக்கமே அவரது வாழ்க்கை. சமத்துவம் ததும்பும் தோழமையே அவரது பண்பு.சாதிகளைக் கடந்த அரவணைப்பே அவரது தொடரும் வெற்றிக்கான பாதை.

வியப்புக்குரிய ஆளுமை,சமத்துவம் ததும்பும் தோழமை,மாண்பமை அமைச்சர் அண்ணன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள்.

எழுச்சித்தமிழர் மரியாதைக்குரிய நமது தலைவர் அவர்களின் வெற்றிக்குத் தொடர்ந்து அரும்பாடுபட்டு அதை தேர்தல் களத்தில் சாத்தியமாக்குகிற ஆளுமையாக அண்ணன் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்கள் திகழ்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதியில் மட்டுமே கிடைத்ததால் எழுச்சித்தமிழரின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது. இந்த வெற்றிக்குப் பின்னால் அண்ணன் எம்.ஆர்.கே அவர்களின் கள்ளங்கபடமற்ற அரிய உழைப்பு இருக்கிறது என்பதைச் சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை.

தலைவர் அவர்களின் மணி விழா மேடையில் திமுக வெற்றிக்குச் சிறுத்தைகளின் பங்களிப்பு முக்கியமானது என மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மனதாரப் புகழ்ந்தார் அதே மனசாட்சியோடு நமது தலைவரின் வெற்றிக்காக உழைத்த அண்ணன் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்களை எண்ணிப் பார்க்கிறேன்.

காட்டுமன்னார்க்கோயில் பேரூராட்சித் தலைவர் பதவி என்பது பொதுவில் ஒதுக்கப்பட்ட பதவியாகும். ஆனால் பேரூராட்சியில் ஆதிதிராவிட சமூகத்தைச் சார்ந்த அண்ணன் திரு கணேசமூர்த்தி அவர்களைப் பேரூராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெறச் செய்தவர் அண்ணன் எம்.ஆர்.கே அவர்கள்.

இந்த சரித்திர சாதனையை ஆரவாரம் ஏதும் இல்லாமல் அமைதியாக அவர் சாதித்திருக்கிறார்.

காட்டுமன்னார்க்கோயில் ஒன்றியம் பொதுத்தொகுதிதான். பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது, அதில்கூட சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த இஸ்லாமிய சகோதரி திருமதி சஃதியா பர்வீன் அவர்களை ஒன்றியப் பெருந்தலைவராக வெற்றி பெறச் செய்து தனது சமத்துவ உணர்வை சமூக நல்லிணக்கப் பாங்கை உறுதிப்படுத்தியிருக்கிறார் அண்ணன் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்கள்.

பெருந்தலைவர் அய்யா எல் இளையபெருமாள் அவர்களுக்கு நூற்றாண்டு நினைவு அரங்க மண்டபம் அமைக்கவேண்டுமென சட்டமன்றத்தில் நான் வைத்த கோரிக்கையை ஏற்று மாண்புமிகு முதல்வர் அவர்கள் அதை அறிவித்தபோது மனம் நிறைந்து சட்டமன்றத்திலேயே வாழ்த்திப் பேசியவர் அண்ணன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள்.

வாழ்த்தி[ பேசியதோடு நிற்காமல் சிதம்பரம் புறவழிச் சாலையில் மையமான பகுதியில் மிகசிறந்த இடத்தை பல கோடி மதிப்புள்ள நிலத்தை அதற்காகத் தேடி உறுதிப்படுத்தியவர் அமைச்சர் அண்ணன் எம்.ஆர்.கே.பி. அவர்கள்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கொரோனாவால் அவர் பாதிக்கப்பட்டு தேர்தல் பணிகளைச் செய்ய முடியாத நிலைக்கு ஆளானார்.அந்த நிலையில் கூட உயிரைப் பணயம் வைத்து காட்டுமன்னார்க்கோயில் சட்டமன்ற தொகுதியில் எனக்காகக் களத்தில் இறங்கி அவர் பணியாற்றினார். உரத்துப் பேச முடியாத அளவுக்கு உடல் நலம் குன்றியிருந்த நிலையில் கூட நான் குறிஞ்சிப்பாடியில் வெற்றி பெறுவதற்கு விடுதலைச்சிறுத்தைகள் காரணமாக இருந்தார்கள். எனக்காக சிந்தனைச்செல்வன் பணியாற்றினார். ஆகவே அவரது வெற்றிக்கு நாம் பணி செய்வது என்பது நாம் நன்றி உள்ளவர்கள் என்பதை உறுதிசெய்ய காலம் தந்த வாய்ப்பு என்று கட்சிகார்ர்களை வணிகர்களை பிறசமூகத் தலைவர்களைக் கூட்டிக் கூட்டிப் பேசினார்.

கடந்த நவம்பர் – 4, 5 ஆகிய தேதிகளில் காட்டுமன்னார்கோவிலில் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது எல்லா வாக்குச்சாவடிகளிலும் திமுக நண்பர்களைக் காண முடிந்தது. வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கான சிறப்பு முகாம் நடைபெற்றுக் கொண்டிருந்த அந்தத் தருணத்தில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதியில் மாத்திரம் 50,000 வாக்குகள் கூடுதலாக எழுச்சித்தமிழர் அண்ணன் திருமா பெற வேண்டும் என்று எங்கள் அமைச்சர் அண்ணன் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார் என்று திமுக உடன்பிறப்புகள் சொன்ன போது நன்றியில் நான் கரைந்து போனேன்.

இதைப்போல இன்னும் நூறு செய்திகளைச் சொல்ல முடியும். எல்லாவற்றையும் தாண்டி எனது தனிப்பட்ட வாழ்வில் அவர்செய்த உதவிகளை என் உயிருள்ளவரை மறவேன். என். எல் சி வேலையைத் துறந்து எண்ணற்ற வழக்குகளைச் சுமந்து துயரத்தின் எல்லையில் கிடந்த எனது குடும்பம் இன்று தலை நிமிர்ந்திருக்கிறது என்றால் தலைவர் திருமாவின் அன்பும் அண்ணன் எம் ஆர் கே அவர்களின் உதவியும் என் வாழ்விணை தங்கத்தின் சகிப்பும்தான்.

இப்படியெல்லாம் பொங்கும் நன்றி உணர்வை வெளிப்படுத்த அமைச்சர் என்னை ஒருபோதும் அனுமதித்ததில்லை. அனால் அதற்கான வாய்ப்பை சில உதிரிகள்…அரைவேக்காடுகள்…..அரசியல் அயோக்கியர்கள் இன்று உருவாக்கித் தந்துள்ளார்கள்.

அண்ணன் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களைச் சந்தித்து விடைபெற்ற நிகழ்வின் ஒரு பகுதியை மட்டும் பதிவு செய்து அவதூறாகப் பதிவிட்டு இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response