நாமக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அளவிலான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் கே.பாலகிருட்டிணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது…..
பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் தவறான கொள்கையால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக பெட்ரோல், டீசல் மீது மிக அதிகமான வரி விதித்துள்ளனர். லாரி போக்குவரத்தில் நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டண வசூல் என்பது பகல் கொள்ளையாக உள்ளது.
சிஏஜி அறிக்கையில் டோல் கொள்ளை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலை, சாலைப் போக்குவரத்து, ஜிஎஸ்டி போன்றவை விலைவாசி உயர்வுக்குக் காரணமாக அமைகிறது. வேலையில்லாத் திட்டம் என்பதும் அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் இந்தியா வல்லரசாக மாறப்போகிறது என உலகம் முழுவதும் பிரதமர் மோடி பேசி வருகிறார்.
ஆனால், வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது. ஒன்றிய அரசு அலுவலகம், பொதுத்துறை அலுவலகங்களில் 10 இலட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. மாநிலங்களவையில் இதுபற்றி தெரிவிக்கப்பட்டது. ரயில்வே துறையில் 3.50 இலட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன.
ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் 1 இலட்சம் பேர் பங்கேற்கக் கூடிய வகையில் செப்டம்பர் 7 ஆம் தேதி சிபிஎம் சார்பில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன் போராட்டம் மற்றும் ரயில் மறியல் போராட்டமும் நடத்தப்பட உள்ளது. இதுபோல் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும்.
அகில இந்திய அளவில் எதிர்கட்சிகள் ஒன்றாக இணைந்திருப்பது நல்ல மாற்றத்திற்கான அறிகுறியாக மக்கள் பார்க்கின்றனர். சமீபத்தில் நடைபெற உள்ள 3 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வீழ்த்தப்படும் என செய்திகள் வருகின்றன. 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மட்டும்மல்ல நாடு முழுவதும் பாஜகவுக்கு பெரிய அடி விழும்.
பாஜக அண்ணாமலை நடைப்பயணம் மேற்கொண்டாலும், மதுரையில் எடப்பாடி பழனிசாமி மாநாடு நடத்தினாலும் மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் மீது சிஏஜி 7.50 இலட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் பதில் எதுவும் சொல்லவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.