சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. இதில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கும் நடைமுறையும், எரிவாயு உருளை விலையை மாதத்திற்கு ஒருமுறை மாற்றியமைக்கும் நடைமுறையும் பின்பற்றப்படுகிறது.
ஒன்றியத்தில் 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பின், பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை ஆகியவற்றின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. காங்கிரசு ஆட்சியில் (2014) எரிவாயு உருளை விலை ரூ.414 என்று இருந்தது. தற்போது சுமார் மூன்று மடங்கு அதாவது ரூ.700 அதிகரித்து ரூ.1100க்கு மேல் விற்கப்படுகிறது. சென்னையில் விலை ரூ.1,118.50 ஆக உள்ளது. இது வரலாறு காணாத விலையேற்றமாகும்.
கடந்தாண்டு ரஷ்யா-உக்ரைன் போரால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோது, வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலை எப்போதும் இல்லாதவகையில், ரூ.1,050க்கு மேல் உயர்த்தப்பட்டது. இதன்பிறகு மாதங்கள் கடந்தோட கச்சா எண்ணெய் விலை பெருமளவு குறைந்த பின்னரும்,எரிவாயு உருளை விலையில் மாற்றத்தை ஏற்படுத்தாமல் எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிலையாக வைத்துக் கொண்டு இலாபம் கண்டது.
நடப்பாண்டில் மார்ச் மாதத்தில் வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை மேலும் ரூ.50 அதிகரிக்கப்பட்டது. இதன்காரணமாக நாடு முழுவதும் சராசரியாக விலை ரூ.1100 ஐ தாண்டியது. இதன்பிறகு ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும், எரிவாயு உருளை விலையை மட்டும் எண்ணெய் நிறுவனங்கள் குறைக்கவில்லை. இதன்காரணமாக தொடர்ந்து 5 ஆவது மாதமாக மாற்றமின்றி நடப்பு மாதம் (ஆகஸ்ட்) வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை டெல்லியில் ரூ.1,103, கொல்கத்தாவில் ரூ.1,129, மும்பையில் ரூ.1,102.50, சென்னையில் ரூ.1,118.50 ஆக விற்கப்படுகிறது.
எரிவாயு உருளை வாங்கும் பொதுமக்கள், அதனை எடுத்து வரும் ஊழியர்களுக்கு வழங்கும் தொகையோடு சேர்க்கும்போது ஒவ்வொரு குடும்பத்தினரும் ரூ.1,150 முதல் ரூ.1,200 வரை வழங்க வேண்டி வருகிறது. இதனால், ஏழை, நடுத்தர மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 85 டாலர் என்ற நிலைக்கு குறைந்து வந்திருக்கும் நிலையில் (கடந்தாண்டு 100 டாலருக்கு மேல் இருந்தது) எரிவாயு உருளை விலையைப் பெருமளவு குறைக்க வேண்டும் என பொதுமக்களும், காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தி வந்தன. ஆனால், பல மாதங்களாக விலை குறைப்பு பற்றி ஒன்றிய அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இந்நிலையில் டெல்லியில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம், பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நேற்று நடந்தது. அக்கூட்டத்தில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலை ரூ.200 குறைப்பதாக முடிவெடுக்கப்பட்டது.
இந்த விலை குறைப்பு, பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் எரிவாயு உருளை பெறும் பயனாளிகளுக்குப் பொருந்தும். இவ்விலை குறைப்பு அறிவிப்பை ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர், செய்தியாளர்களிடம் தெரிவித்த போது,
‘‘ரக்ஷாபந்தன் மற்றும் ஓணம் திருவிழாவையொட்டி மகளிருக்கு பிரதமர் மோடி அன்புப் பரிசு வழங்கியிருக்கிறார். அதாவது அனைவருக்குமாக வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை ரூ.200 குறைக்கப்படுகிறது. உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பயன்பெறும் 9.6 கோடி பயனாளிகளுக்கு ஏற்கனவே ரூ.200 மானியம் வழங்கப்படுகிறது. தற்போதைய இந்த விலைக் குறைப்பால் அவர்களுக்கான விலை ரூ.400 குறையும். உஜ்வாலா திட்டத்தில் மேலும் 75 இலட்சம் பேரை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,’’ என்றார்.
இன்னும் 2 மாதங்களில் இராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் வரவுள்ளதால், ஒன்றிய பாஜக அரசு சிலிண்டர் விலையைக் குறைத்திருக்கிறது. இவ்விலைக் குறைப்பு நடவடிக்கையை ஓராண்டிற்கு முன்பே எடுத்திருக்க வேண்டும். ஆனால், மக்கள் தலையில் பெரும் சுமையை ஏற்றி வைத்து கொள்ளை இலாபம் சம்பாதிக்கும் நோக்கில் ஒன்றிய பாஜக அரசும், எண்ணெய் நிறுவனங்களும் செயல்பட்டன.
தற்போது மக்கள் மத்தியில் ஆளும் பாஜவுக்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியிருப்பதால், 5 மாநிலத் தேர்தலுக்கு முன்பாக எரிவாயு உருளை விலையில் ரூ.200 குறைத்திருக்கிறார்கள். ஆனால், இவ்விலைக் குறைப்பு போதாது. இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரப்படி பார்த்தால் ஒரு உருளையை ரூ.600 முதல் ரூ.700க்கு கொடுக்கலாம். ஆனால், இன்னும் ரூ.1000 என்ற நிலையிலேயே விற்க ஒன்றிய பாஜக அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. அடுத்தாண்டு துவக்கத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருவதால், வரும் மாதங்களில் மக்களை ஏமாற்ற இன்னும் விலையைக் குறைப்பார்கள். மிக விரைவில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அறிவிப்பையும் வெளியிடுவார்கள். இதுவெல்லாம் தேர்தலுக்கான நாடகம் என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.