தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 26 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் உயர்வு அமலாகிறது.இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் வருகிறது. இதில் 1,44,634 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலையில் 892 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. சுங்கசாவடிகளையும் அந்த அமைச்சகமே தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்து கட்டணம் வசூல் செய்ய அனுமதி அளித்து வருகிறது.
தமிழ்நாட்டில் 6,606 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 54 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒரு முறை 5 விழுக்காட்டில் இருந்து 10 விழுக்காடு வரை கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தபடி 1992 ஆம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதமும், 2008 ஆம் ஆண்டு போடப்பட்ட சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதன்படி தமிழ்நாட்டில் இரண்டு கட்டங்களாக சுங்கக்கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. அதில் ஏப்ரல் மாதம் 29 சுங்கச்சாவடிகளுக்கும் செப்டம்பர் மாதம் மீதமுள்ள 26 சுங்கச் சாவடிகளுக்கும் ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்திக்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதித்துள்ளது.
இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டில் 26 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் இன்று நள்ளிரவு முதல் உயர்த்தப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கட்டணங்கள் மாற்றியமைக்கும் நடவடிக்கையை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொள்கிறது. இதன்படி கடந்த நிதியாண்டில் சுங்கக்கட்டணம் 10-20% வரை உயர்த்தப்பட்டது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் 5-10% வரையிலான கட்டண உயர்வுக்கு நெடுஞ்சாலை ஆணையம் ஒன்றிய அரசுக்குப் பரிந்துரைத்திருந்தது.
அதன்படி ஏற்கனவே 29 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதம் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான கட்டண உயர்வு தமிழகம் முழுவதும் உள்ள 26 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட உள்ளது. மதுரை, தூத்துக்குடி, சேலம், திருச்சி, திண்டுக்கல், மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை உள்பட 26 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு 12 மணி முதல் சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
அதன்படி ஜீப், வேன், கார் ஆகிய நான்கு சக்கர வாகனங்களுக்கு பழைய கட்டணமாக ரூ.85லிருந்து ரூ.5 உயர்த்தப்பட்டு ரூ.90 யாகவும், இருமுறை சென்று வர ரூ.125லிருந்து ரூ.10 உயர்த்தப்பட்டு ரூ.135 வசூலிக்கப்படும். அதனைத் தொடர்ந்து ஒரு முறை சென்று வர கட்டணம் ரூ.5 லிருந்து ரூ.45 ஆகவும், இருமுறை பயணம் செய்ய ரூ.10 லிருந்து ரூ.65வும், மாதாந்திர கட்டணம் ரூ.235 லிருந்து ரூ.1,325தாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் இதன் ஒரு பகுதியாக மதுரை – தூத்துக்குடி பகுதியைப் பயன்படுத்துவதற்கான பயனாளிக் கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்டம் எலியார்பாத்தி சுங்கச் சாவடி மற்றும் தூத்துக்குடி மாவட்டம் புதுர்பாண்டியாபுரம் சுங்கச்சாவடி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக சுங்கச்சாவடி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் ஒருமுறை சென்று வர பழைய கட்டணம் ரூ.85 லிருந்து ரூ.90 ஆகவும், இரு முறை சென்று வர ரூ.125 லிருந்து ரூ.135 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணம் ரூ.2,505 லிருந்து ரூ.2,740யாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இலகு ரக வாகனங்கள் ஒரு முறை சென்று வர ரூ.145லிருந்து ரூ.160, இரு முறை சென்று வர ரூ.220லிருந்து ரூ.240 ஆகவும் மாதாந்திர கட்டணம் ரூ.4,385 லிருந்து ரூ.4,800யாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் லாரி, பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஒருமுறை சென்று வர கட்டணம் ரூ.290 லிருந்து ரூ.320, இரு முறை சென்று வர ரூ.440 லிருந்து ரூ.480 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணமாக ரூ.8,770 லிருந்து ரூ.9,595யாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் இரண்டு அச்சு மிக கனரக வாகனங்கள் ஒரு முறை சென்று வர ரூ.470 லிருந்து ரூ.515 யாக உயர்த்தப்பட்டுள்ளது.
இருமுறை சென்று வர கட்டணம் ரூ.705 லிருந்து ரூ.770 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணமாக ரூ.14,095 லிருந்து ரூ.15,420 யாக உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து வகை வாகனங்களுக்கும் பணம் செலுத்திய நேரத்திலிருந்து 24 மணி நேரத்திற்குள் செய்யப்படும் பல முறை பயணங்களில் பாஸ்டேக் பயனாளிகளுக்கு மட்டும் இந்த கட்டண சலுகை அமலாகும். சுங்கக்கட்டணம் வசூல் மையத்திலிருந்து 10 கி.மீ. சுற்று வட்டாரத்திலுள்ள வணிக உபயோகம் இல்லாத கார், பயணிகள் வேன் அல்லது ஜீப் மாதாந்திர நுழைவுச்சீட்டு ரூ.150 மற்றும் சுங்கக்கட்டணம் வசூல் மையத்திலிருந்து 10 கி.மீ.க்கு மேற்பட்ட 20 கிலோ மீட்டருக்கு உள்ளாக சுற்று வட்டாத்திலுள்ள கார், பயணிகள் வேன், ஜீப்களுக்கு மாதாந்திர நுழைவுச் சீட்டு ரூ.300 வசூலிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்…
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளுக்கு உட்பட பகுதிகளில் சாலை பராமரிப்பு மற்றும் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் இந்தப் பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் அரசு விதிமுறைகளின் படி சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படாது. அதன்படி தமிழகத்தில் பல்வேறு சுங்கச்சாவடிகளில் பணிகள் நடைபெற்று வருவதால் சுங்கக் கட்டணம் வசூலிக்கவோ அல்லது உயர்த்தப்படவோ வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தென் மாநிலங்களில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் நடந்த கட்டண வசூலில் ரூ.132 கோடி முறைகேட்டை சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 26 சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் உயர்த்தப்பட உள்ளதற்கு சரக்கு வாகன உரிமையாளர்கள், ஆம்னி பஸ் உரிமையாளர்கள், லாரி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.