
சென்னை, கடலூர் வெள்ளப் பேரழிவினை உருவாக்கியது யார்? எதிர்காலத்தில் தடுப்பது எப்படி? என்ற தலைப்பில் கருத்தரங்கம் விவாதம் மற்றும் புகைப்பட கண்காட்சி 9-1-2016 சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
ஆர்.ஆர்.சீனிவாசன் மற்றும் அமிர்தராஜ் ஸ்டீபன் ஆகியோரின் வெள்ள பாதிப்பை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பல்வேறு துறை சார்ந்த அறிஞர்கள், சூழலியலாளர்கள், ஊடகவியலாளர்கள், கட்சி இயக்கங்களை சார்ந்த தலைவர்கள், அரசியல் செயற்ப்பாட்டாளர்கள் கலந்துகொண்டு தங்களின் அனுபவங்கள், ஆய்வுகள் மற்றும் பாடங்களை விளக்கி பேசினார். பெண்கள் சிறுவர்கள் உள்ளிட்ட ஏராளமான பொது மக்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வில்லிவாக்கம் மற்றும் ராமாபுரம் பகுதியை சார்ந்த மக்கள் தங்களின் பாதிப்புக்களை பகிர்ந்துகொண்டனர். மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் நிகழ்வை தொகுத்து வழங்கினார். வெள்ள பாதிப்பின் ஒரு சிறு பகுதியை விளக்கும் வகையில் சென்னை வில்லிவாக்கம் அன்னை சத்தியா நகர் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னையை விளக்கும் ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது.
மழை வெள்ள பாதிப்புக்களை இத்துடன் கடந்து போய்விடாமல் தொடர்ந்து அரசை எதிர்கொண்டு போராடும் மக்கள் இயக்கமாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தேவை எழுந்துள்ளதை சுட்டிக்காட்டி அதன் தொடக்கமாகவே இந்நிகழ்வு அமைந்தது.


