ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள் – தெரிந்தே நடக்கும் தப்பை அரசு தடுக்குமா?

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்டது கனிராவுத்தர் குளம்.ஈரோட்டிலிருந்து சித்தோடு செல்லும் பாதையில் அமைந்துள்ளது.அக்குளம் பல்வேறு ஆக்கிரமிப்புகளாலும் விதிமீறல்களாலும், சாய, சாக்கடை கழிவுநீர்களாலும் நஞ்சாகப்பட்ட நிலையில், குளத்தை மீட்டு மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் கனிராவுத்தர் குளம் மீட்பு இயக்கத்தை உருவாக்கி, இதன் மூலம் பல்வேறு கட்டப் போராட்டங்களை முன்னெடுத்தும், குளத்தைத் தூர்வாரியும் குளத்தைப் பாதுகாக்க பொதுமக்களின் துணையோடு பெரும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

அக்குளத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமிப்பு செய்தவர் அதிமுக பிரமுகர் என்பதால், அதிமுக அரசு ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றாமல், அனுமதியற்ற கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி போக்குக் காட்டி வந்தது.

பல்வேறு போராட்டங்களுக்குப் பின், 90% தூர் வாரிய குளத்திற்கு, நிதி ஒதுக்கீடு செய்து குளத்தைப் புனரமைக்கும் பணியை மேற்கொண்டது. இந்தப் பணியிலும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமாகவே நடந்து கொண்டது. மேலும் அவசரகதியில் அரைகுறையாக பராமரிப்பு பணிகளை மேற்கொண்டது. இதன் விளைவு இன்று வரை குளத்தில் நன்னீரைச் சேமிக்க முடியவில்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நல்ல மழையின் விளைவாக, குளத்திற்கு நீர்வரத்து அதிகமாக இருந்த காரணத்தினால், பெரிய பாதிப்பு எதுவும் தெரியவில்லை. ஆனால் தற்போது குளம் மீண்டும் பழையபடி சாக்கடைக் கழிவுகள் வழிந்து நிரம்பும் குளமாக மாறியிருக்கிறது.

கடந்த சில நாட்களாக 23,24/04/2023 குளத்து நீரில் அதிகபடியான மாசு ஏற்பட்டு, நச்சுத்தன்மை கொண்ட வேதியல் வினை ஏற்பட்டு கொத்துக்கொத்தாய் ஜிலேபி மீன்கள் செத்து மிதந்துகொண்டிருக்கின்றன.

தற்போது குளத்தில் மூச்சுத் திணறி ஜிலேபி மீன்கள் இறந்து கிடப்பதற்குக் காரணம், குளத்து நீரில் சாக்கடை மற்றும் இரசாயன கழிவுகளால் நச்சுத்தன்மை அதிகரித்துள்ளதும், ஆகாயத்தாமரையின் வளர்ச்சியும் இதனால் ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறையும் தான் காரணம் என தெரியவருகிறது.

கனிராவுத்தர் குளத்து நீரை ஆய்வு செய்ததில், நீருயிர்ச் சூழல் சராசரி அளவைவிட பத்து மடங்கு அதிகமாக அதாவது 1200 டிடிஎஸ் (TDS) இருக்கிறது. இந்த அளவானது நீரில் நச்சுத்தன்மையை அதிகரித்து நீர்வாழ் உயிரினங்கள் வாழ தகுதியற்றதாக நிலையை ஏற்படுத்தும்.

மேலும் ‘நீரில் கரைந்த உயிர்வாயு’ அளவானது நீரில் உயிர்கள் வாழ குறைந்தபட்சம் 6 பிபிஎம் (ppm) இருக்க வேண்டும். ஆனால் ஆய்வு செய்ததில் 3 பிபிஎம்மிற்கு குறைவான அளவே உள்ளது. இந்த அளவானது பெரும்பான்மையான நீர் வாழ் உயிரினங்களுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்தி உயிரைப் பறிக்கும்.

இதற்கான காரணம் அளவுக்கு அதிகமான சாக்கடை கழிவுகள் மற்றும் இரசாயனம் கலப்பதால் குளம் மீண்டும் நீர்வாழ் உயிரினங்கள் உயிர் வாழ முடியாத அளவில், கழிவுநீர் குட்டையாக மாறி வருவது கவலை அளிக்கிறது.

இந்த நிலை இப்படியே நீடித்தால் ஜிலேபி மீன்களைத் தொடர்ந்து அவுரி, கெண்டை, ஆமை உள்ளிட்ட இதர உயிரினங்களும் உயிரிழக்க நேரிடும்.

குளத்து நீர் நச்சுத்தன்மையாக மாறியதன் விளைவு மிக மோசமாக துர்நாற்றம் வீசுகிறது. இது சுற்றுச்சூழலையும், நிலத்தடி நீரையும் பாதிக்கும்.

இக்கொடுமை தொடராமல் தடுக்க மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளது கனிராவுத்தர் குளம் மீட்பு இயக்கம்.

அவ்வியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நிலவன், தமிழ்நாடு முதல்வருக்கு வைத்துள்ள கோரிக்கைகள்…..

1.உடனடியாக செத்துக் கிடக்கும் மீன்களையும், ஆகாயத்தாமரையையும் குளத்திலிருந்து அகற்ற வேண்டும். ஐந்துக்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகளைக் கொண்டு குளத்து நீரை மேல்நோக்கி பீச்சி அடித்து குளத்துநீரின் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க வேண்டும்.

2.பி.கே.டி நகரில் உள்ள, குறிப்பாக அனுமதிற்ற குடியிருப்புகள் மற்றும் கடைகள் வழி, வெளியேறும் கழிவுநீர் நேரடியாகக் குளத்தில் கலந்து வருகிறது. இதனால் குளம் பழையபடி சாக்கடைக் குட்டையாக மாறி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம், மாநகராட்சியும் உடனடியாக குளத்தில் கழிவு நீர் கலக்காமல் இருக்கத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, விதிமுறைகளுக்கு எதிராக உள்ள கட்டடங்கள் மீது மின்னிணைப்பு, குடிநீர் இணைப்பைத் துண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.குளத்தில் சாயப்பட்டரை மற்றும் டையிங் பட்டரை கழிவுகள் கலக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர். இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து உண்மைத் தன்மையைக் கண்டறிந்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4.கனிராவுத்தர் குளத்திற்கு வரும் வழக்கமான நீர் வரத்து வழிகள் அடைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கருவில் பாறை வலசு குளத்திலிருந்து வரும் நீர். கனிராவது குளத்திற்குள் சென்று பின் தடுப்பணை வழியாக (கலிங்கு)வெளியேறி பிச்சைக்காரன் பள்ளத்தில் கலந்து, காவிரி ஆற்றில் கலக்கும். இப்படி வெளி நீர் உள்வந்து போனால் மட்டுமே குளத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள முடியும். காலம் காலமாக இருந்த இந்த நீர் வழித்தடம் தற்போது அடைக்கப்பட்டுள்ளது. இதை வரும் பருவமழை காலங்களுக்குள் நீர் வழித்தடத்தை செப்பனிட்டுத் திறந்து விட வேண்டும்.

5.கனிராவுத்தர் குலத்தில் தனியார் ஆக்கிரமிப்பு உள்ளது. அதேபோல் விதி மீறல்களும் உள்ளன. இந்த இரு நடவடிக்கைகள் தான் குளம் நாசமாவதற்குக் காரணம். இதை பல்வேறு ஆதாரங்களுடன் எடுத்துக் கூறியும் முந்தைய அரசு நடவடிக்கை எடுக்காமல் போலியான வருவாய் மற்றும் நிலஅளவை ஆவணங்களைத் தயார் செய்தும், காலம் கடத்தியும் ஆக்கிரமிப்பாளரைப் பாதுகாத்து வந்தது. தற்போது உள்ள அரசு சட்டப்படியும் நியாயப்படுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று எண்ணுகிறோம். ஈரோட்டின் பொக்கிசமான கனிராவுத்தர் குளத்தை ஆக்கிரமிப்பில் இருந்தும் கழிவுநீர் கலப்பதிலிருந்தும் பாதுகாத்து மக்கள் பயன்பாட்டிற்கு உதவ அன்புடன் வேண்டுகிறோம்.

இவ்வாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Response