எடப்பாடி பழனிச்சாமி நேற்று கோவையில் இருந்து விமானம் மூலம் தில்லி சென்றார். அவருடன் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோரும் சென்றனர்.
நேற்று மாலை தில்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமியை, தம்பிதுரை, சி.வி.சண்முகம் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் இந்திராகாந்தி விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்தும் சால்வை அணிவித்தும் வரவேற்றனர்.
இதையடுத்து தில்லி சாணக்கியாபுரியில் இருக்கும் அசோகா ஓட்டலில் தங்கியிருந்த எடப்பாடி பழனிச்சாமி நேற்று இரவு சுமார் 9 மணியளவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்க அவரது இல்லத்திற்குச் சென்றார்.
அவருடன் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி,கேபி.முனுசாமி மற்றும் ஜெயகுமார் ஆகியோர் சென்றிருந்தனர்.
அமித்ஷா வீட்டில் அமித்ஷாவுடன் ஜே.பி.நட்டா மற்றும் அண்ணாமலை ஆகியோர் இருந்துள்ளனர்.
அமித்ஷா தரப்பு எடப்பாடி பழனிச்சாமி குழுவின் சந்திப்பு சுமார் 50 நிமிடங்கள் நடந்துள்ளது.
இந்தச்சந்திப்பின்போது அண்ணாமலையையும் கூடவே இருக்க வைத்ததன் மூலம், எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஓர் அழுத்தமான செய்தியை அமித்ஷா சொல்லியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
அண்ணாமலையை அங்கு பார்த்ததும் எடப்பாடி பழனிச்சாமி குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அண்மையில்தான் அண்ணாமலை பற்றி எங்களுக்குக் கவலையில்லை மேலே உள்ள பாஸ் உடன் பேசுவோம் என்று எடப்பாடி சொல்லியிருந்தார். அந்த பாஸ் வீட்டில் அண்ணாமலையும் இருக்க வைக்கப்பட்டதன் மூலம் எடப்பாடி தரப்புக்கு அதிர்ச்சி கொடுத்து அனுப்பியிருக்கிறார் அமித்ஷா.
அதோடு, பாராளுமன்றத் தேர்தலுக்குள் அதிமுக பிரிவினைகள் இல்லாமல் ஒருங்கிணைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
அமித்ஷா சந்திக்க நேரம் கொடுத்ததால் மிக மகிழ்ச்சியுடன் சென்ற எடப்பாடி குழுவினர் அதிர்ச்சியுடன் திரும்பி வந்ததாகச் சொல்கிறார்கள்.