ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரசுக்கே என திமுக அறிவிப்பு – ஈவிகேஎஸ் போட்டி?

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் 2011 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரசு போட்டியிட்டது. அக்கட்சியின் சார்பில், ஈவிகேஎஸ் இளங்கோவனின் மூத்த மகனும், பெரியாரின் பேரனுமான திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் உடல்நலக்குறைவு காரணமாக 2023 சனவரி 4 ஆம் தேதி மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

பிப்ரவரி 27 ஆம் தேதி அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில், காங்கிரசுக் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. அந்தக் கூட்டத்தை தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, அறிவாலயத்தில் காங்கிரசு மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, ஈவிகேஎஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர் எம்பி, முன்னாள் எம்பி கிருஷ்ணசாமி ஆகியோர் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின்போது திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்புக்குப் பிறகு, திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்….

2023 ஆம் ஆண்டு வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியின் இடைத்தேர்தலையொட்டி, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணித் தலைவர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து பேசி, ஏற்கனவே 2021 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசுக் கட்சியின் சார்பில் அத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காரணத்தால், தற்போது இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியை இந்திய தேசிய காங்கிரசுக் கட்சிக்கே ஒதுக்கீடு செய்வதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தொகுதியில் காங்கிரசு போட்டியிடும் என்று அறிவித்தாலும், திமுக சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் பொறுப்பாளர்களை நியமிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக மூத்த தலைவர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொறுப்பாளர்களை நியமிப்பதோடு, தேர்தல் பரப்புரை செய்வது, திமுகவே போட்டியிடுவதாக நினைத்து முழு மூச்சுடன் வேலைகளை மேற்கொள்வது என்று முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேநேரத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், அந்தத் தொகுதியில் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து மாநில நிர்வாகிகளுடன் கே.எஸ்.அழகிரி நேற்று இரவு ஆலோசனை நடத்தினார். இந்தத் தொகுதியைப் பொறுத்தவரை ஈவிகே.எஸ் இளங்கோவன் போட்டியிட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்களும், மூத்த தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர். இதற்கு இளங்கோவனும் சம்மதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Leave a Response