மின்சாரவாரியம் திடீர் நடவடிக்கை – பொதுமக்கள் அதிருப்தி அன்புமணி எதிர்ப்பு

தமிழ்நாட்டில் 3 கோடிக்கு மேல் மின் இணைப்புகள் உள்ளன. 2 மாதத்துக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கிடப்பட்டு அதற்கான கட்டணத்தைச் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.

மின்வாரிய இணையதளம், மின்வாரிய செயலி, கூகுள் பே, போன் பே செயலிகள் மூலம் ஏராளமானோர் மின் கட்டணத்தைச் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்தது. இதுதொடர்பாக மின்நுகர்வோரின் கைபேசி எண்ணுக்கும் மின்வாரியம் குறுஞ்செய்தி அனுப்பியது.

நேரடியாக மின் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் அட்டையின் நகலை எடுத்துச் சென்று மின் கட்டணம் செலுத்தும் போதே ஆதார் நகலைக் கொடுத்து ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம் என்றும், ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு வைத்துள்ளவர்கள் அனைத்து மின் இணைப்புகளுக்கும் ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம் என்றும், வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் தங்கள் ஆதார் எண்ணை அந்த வீட்டு மின் இணைப்புடன் இணைக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து மின் நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைத்து வருகின்றனர். இதுவரை சுமார் 3 இலட்சம் பேர் ஆதார் எண்ணை இணைத்து உள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என மின்சார வாரியம் அறிவித்துள்ள போதிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு வைத்திருப்போர் அவை அனைத்துக்கும் தங்களது ஒரே ஆதார் எண்ணைப் பதிவு செய்வதால் ஏதேனும் சிக்கல் வருமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

இதுபோன்ற பல்வேறு காரணங்களினால் பலர் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க முன்வருவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்ட மின்வாரியம் மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைத்தால் மட்டுமே மின் கட்டணத்தைச் செலுத்த முடியும் என்ற வகையில் திடீர் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

கடந்த சில நாட்களாக இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்த முயன்ற மின் நுகர்வோருக்கு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது குறித்து தெரிவிக்கப்படுகிறது.

பின்னர், ஆதாரை இணைக்கும் பக்கத்துக்கு தானாகவே சென்று ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களைப் பதிவிடும்படி அறிவுறுத்தப்படுகிறது. தேவையான விவரங்களைப் பதிவு செய்தால் மட்டுமே மின் கட்டணத்தைச் செலுத்தும் பக்கத்திற்குச் செல்லும் வகையில் அந்த இணையதளத்தில் மின்வாரியம் மாறுதல்களைச் செய்துள்ளது. அதேபோன்று கூகுள் பே, போன் பே போன்ற செயலிகளை நடத்தி வரும் நிறுவனங்கள் மூலம் மின் கட்டணத்தைச் செலுத்த முயற்சி மேற்கொள்பவர்களுக்கும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி குறுஞ்செய்தி அனுப்ப மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

இதன்மூலம் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே மின் கட்டணத்தைச் செலுத்த முடியும் என்ற நிலையை மின்வாரியம் ஏற்படுத்தி உள்ளது. மின் கட்டணம் செலுத்த நிர்ணயிக்கப்பட்டுள்ள கடைசி நாளில் இணையதளம் மூலம் கட்டணத்தை செலுத்த முயன்ற பலர் ஆதார் எண்ணை இணைக்காததால் கட்டணத்தைச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மின்வாரியத்தின் இந்த திடீர் நடவடிக்கை நுகர்வோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பொதுமக்களின் அதிருப்தியைத் தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது……

தமிழ்நாட்டில் மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை ஆன்லைன் வழியாக இணைப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. ஆதார் எண்ணை இணைக்க முடியாதவர்களால் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை. அதனால் மின் சந்தாதாரர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மின்வாரியச் சீர்திருத்தத்திற்காக ஆதார் இணைப்பு செய்யப்படுவது வரவேற்கத்தக்கது தான்.

ஆதார் இணைப்புக்கான இணையவழி இணைப்பு ஒரு வாரத்திற்கு முன்பு தான் வெளியிடப்பட்டது. அடுத்த சில நாட்களிலேயே இலட்சக்கணக்கானோர் மின் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் உள்ளது. அதற்குள்ளாகவே ஆதாரை இணைத்தால் தான் மின் கட்டணம் செலுத்த முடியும் என்பது நியாயமல்ல. மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை எதற்காக இணைக்க வேண்டும் என்பதே பெரும்பான்மையானோருக்குத் தெரியவில்லை. அது குறித்து மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response