மோடிக்கு தொல்காப்பியம் நூல் பரிசு – 44 ஆவது சர்வதேச சதுரங்கப்போட்டி தொடக்கவிழா தொகுப்பு

44 ஆவது உலக சர்வதேச சதுரங்கப் போட்டியை நடத்தும் வாய்ப்பு முதல் முறையாக இந்தியாவுக்குக் கிடைத்தது. அதனை நடத்தும் பொறுப்பை தமிழகம் ஏற்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவித்தார். இந்தப் போட்டியை நடத்த சென்னையை அடுத்த மாமல்லபுரம் தேர்வு செய்யப்பட்டது.

போட்டிக்காக உடனடியாக ரூ.100 கோடி நிதியையும் ஒதுக்கினார். 186 நாடுகள், 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்ளும் போட்டியை, உலக நாடுகளே வியக்கும் வகையில் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முடுக்கி விட்டார்.

அவ்வப்போது போட்டி நடைபெறும் மாமல்லபுரத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அமைச்சர்கள், அதிகாரிகள் கொண்ட 18 குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களும் அங்கு முகாமிட்டு செஸ் போட்டியில் எந்த சுணக்கமும் ஏற்படாத வகையில் பணிகளை வேகப்படுத்தினர். மேலும், செஸ் போட்டியை பிரபலப்படுத்த, தமிழகம் முழுவதும் மக்களைக் கவரும் வகையில் விளம்பரங்கள் செய்யப்பட்டன.

குறிப்பாக தமிழகம் முழுவதும் செஸ் போட்டியின் சின்னங்கள் சாலையின் மையப் பகுதியில் இருந்து அரசின் உயர்ந்த கட்டிடங்கள் வரை காண முடிந்தது. மேலும், மாணவர்கள், பொதுமக்களிடையே செஸ் போட்டிகள் நடத்தி பரிசு வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முதல்முறையாக போட்டிக்கென தனிச் சின்னம் ‘தம்பி’ அறிமுகப்பட்டது. குதிரை தலையுடன் கூடிய அந்த தம்பி சின்னம் படங்களாகவும், சிலைகளாகவும் முக்கிய இடங்களில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சாலைகளில் வைக்கப்பட்டன. இது மக்களை வெகுவாகக் கவர்ந்தது. உலக அரங்கமே அதிரும் வகையில் பன்னாட்டுப் போட்டிக்கான அனைத்தும் ஏற்பாடுகளையும் தமிழக அரசு நான்கே மாதத்தில் சிறப்பாகச் செய்து முடித்திருந்தது.

இந்த நிலையில் 44 ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டிக்கான பிரமாண்ட தொடக்க விழா சென்னை ஜவகர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் ஜூலை 28 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி போட்டியின் தொடக்கவிழா நேற்று மாலை நடந்தது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி இந்திய விமானப்படைக்குச் சொந்தமான தனி விமானம் மூலம் நேற்று மாலை 5.10 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தார். அங்கு அவரை அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தயாநிதி மாறன் எம்பி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வரவேற்றனர்.

வரவேற்பை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு புறப்பட்டுச் சென்றார். பிரதமரின் பாதுகாப்புக்காக, பிரதமர் மோடியின் ஹெலிகாப்டருக்கு முன்னும், பின்னுமாக மேலும் 2 ஹெலிகாப்டர்கள் சென்றன. தலைமைச் செயலாளர் இறையன்பு, போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோரும் ஹெலிகாப்டரில் ஐஎன்எஸ் அடையாறு வந்தனர். அங்கு அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒன்றிய அமைச்சர்கள் அனுராக் தாகூர், எல்.முருகன், அமைச்சர் கே.என்.நேரு, கனிமொழி எம்.பி ஆகியோர் வரவேற்றனர்.

அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் புறப்பட்டு விழா நடைபெறும் நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு சரியாக மாலை 6.25 மணிக்கு வந்தார்.

தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு தமிழின் தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியம் நூலை வழங்கி வரவேற்றார்.

அதன் பிறகு சரியாக 6.27 மணிக்கு தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் விழா தொடங்கியது. இந்தப் பாடல் 100 இசைக்கலைஞர்களால் இசைக்கப்பட்டது.

தொடர்ந்து தமிழக சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வரவேற்றுப் பேசினார். தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் சிற்பத்தை நினைவுப் பரிசாக வழங்கி கவுரவித்தார்.

விழாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அதற்காக குலுக்கல் முறையில் நடந்த நிகழ்வில் கறுப்பு காய்களை மோடி தேர்ந்தெடுத்தார். இந்தக் காய்கள் மூலம் நாளை நமது அணி விளையாடுகிறது.

போட்டியைத் தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்திப் பேசியதாவது……

மிகவும் பிரபலமான இந்த 44 ஆவது ஒலிம்பியாட் செஸ் போட்டி சென்னையில் நடைபெறுவது பெருமையளிக்கிறது. காலனி ஆதிக்கத்திலிருந்து இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடி வரும் இந்த ஆண்டில், இந்த செஸ் போட்டி இந்தியாவில் நடைபெறுவது இந்திய வரலாற்றில் இடம்பெறக்கூடிய நிகழ்வாகும். இந்தப் போட்டியை நடத்தும் தமிழக அரசுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். மிகக் குறுகிய காலத்தில் மிகச்சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளூவர் கூறியுள்ளார். ‘‘இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு’’ அதாவது இருப்பதை வைத்து இல்வாழ்க்கை வாழ்ந்து விருந்து கொடுப்பது போன்றவை விவசாயிகளின் பொருட்டே என்பது இதன் பொருளாகும். அதைப்போன்றுதான் இங்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் இந்த செஸ் போட்டி முதன் முதலில் நடைபெறுகிறது. மிகச்சிறந்த கலாசாரம் மற்றும் வீரர்கள் நிறைந்த இடம். இங்கு நீங்கள் பங்கேற்க வந்திருப்பது என்றும் நினைவில் இருக்கும். இந்தப் போட்டியில் அதிக எண்ணிக்கையிலான நாடுகள் பங்கேற்கன்றனர். அதிகப் போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். அதிக எண்ணிக்கையிலான பெண் போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். ஒலிம்பிக் தீபம் 27 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து தமிழ்நாட்டுக்கு வந்துள்ளது. சர்வதேச செஸ் போட்டி அதன் தாயகமான இந்தியாவில் நடைபெறுகிறது. தமிழ்நாடு செஸ் போட்டியின் பிறப்பிடம். இங்குள்ள பல கோயில்களின் அழகான கட்டிடக்கலைகள் அதன் கலாசாரத்தை பிரதிபலிக்கின்றன. உலகத்தின் மிகப் பழமையானது தமிழ்மொழியாகும். சதுரங்கநாதர் கோயிலில் கடவுளே அரசியுடன் சதுரங்கம் ஆடியுள்ளார்.

தமிழகத்திலிருந்து ஏராளமான செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் வந்துள்ளனர். உங்களுக்கு சென்னை, மகாபலிபுரம் உள்ளிட்ட மிகவும் அழகான பகுதிகளைப் பார்க்க வாய்ப்புக் கிடைத்துள்ளது. விளையாட்டுக்கு மட்டும்தான் வானளாவிய சக்தி உள்ளது. அதனால்தான் எல்லோரையும் ஒன்று சேர்க்கவோ, ஒருங்கிணைக்கவோ முடியும். கொரோனா காலத்தில் மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்பட்டிருந்த நாம் மீண்டு சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுள்ளோம். கொரோனாவிற்கு பிறகு பல போட்டிகளில் நாம் பங்கேற்றுள்ளோம். இளைஞர்களும், மிகச்சிறிய கிராமத்திலிருந்து வருபவர்களும் இதுபோன்ற விளையாட்டுகளில் அதிகம் பங்கேற்று பெருமையைக் கொண்டு வந்துள்ளனர்.

இந்திய விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் முன்னிலை வகித்து வருகிறார்கள். இந்தியா தற்போது ஒலிம்பிக், பாராலிம்பிக்கில் சிறந்த பங்களிப்பையும், வெற்றிகளையும் பெற்றுள்ளது. இந்தியாவில் விளையாட்டுக்கான அனைத்துக் கட்டமைப்புகளும் உள்ளன. இங்கிலாந்தில் 22 ஆவது காமன்வெல்த் போட்டி நடைபெறும் இந்த நாளில் இங்கு நாம் செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கியுள்ளோம். இந்த விளையாட்டுப் போட்டியில் தோல்வி என்பதே இல்லை. அவர்களும் அடுத்த முறை வெற்றியாளர்கள்தான். உங்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியா உங்களை எப்போதும் மன மகிழ்வுடன் வரவேற்கும். இந்தப் போட்டியை தொடங்கி வைக்கிறேன்.

இவ்வாறு பிரதமர் பேசினார்.

முன்னதாக, விழாவில் தமிழர்களின் பாரம்பரியத்தை விளக்கும் நடனங்கள், நடிகர் கமல்ஹாசனின் பின்னணிக் குரலில் காட்சிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதாவது தமிழ்மொழி, தமிழர்கள், தமிழ்நாட்டின் சிறப்பை விளக்கும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. தமிழ் மண்- முப்பரிமான வடிவில் நிகழ்ச்சி, தமிழ் மொழி, தமிழர்களின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. கடல் கடந்து தமிழ் மன்னர்கள் பெற்ற வெற்றியை விளக்கும் கலை நிகழ்ச்சி, சேர-சோழ-பாண்டியர்களின் பெருமைகளை எடுத்துரைக்கும் வகையில் கலைநிகழ்ச்சி, தமிழர்களின் தொன்மையான நாகரீகத்தை எடுத்துரைக்கும் காட்சிகள் இடம் பெற்றன. தமிழ்நாட்டின் நீண்ட, நெடிய வரலாறு, அழகிய வடிவில் எடுத்துரைக்கப்பட்டன. இதனை பிரதமர் மோடி ஆர்வமுடன் கண்டுகளித்தார்.

மேலும் என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு நடனம் நிகழ்ச்சி நடந்தது. டெல்லியில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதியை டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அந்த ஜோதி 75 மாநகரங்களைச் சுற்றி நேற்று சென்னை வந்தது. அந்த செஸ் ஜோதியை செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் ஏந்தி விழா மேடைக்கு வந்தார். அதனை அவர் முதல்வர் மு.க.ஸ்டாலிடன் ஒப்படைத்தார். பின்னர் ஜோதியை அவர் பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து அந்த ஜோதி இந்திய வீரர்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு ஏற்றப்பட்டது.

விழாவில் ஒன்றிய தகவல் ஒளிபரப்பு மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர், ஒன்றிய தகவல்-ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக சுற்றுச்சூழல்- காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்புத் தலைவர் அர்கடி துவார்கோவிச், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் சிறப்புரையாற்றினர். தொடக்க விழாவில் அமைச்சர்கள், போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், வெளிநாடு முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக போட்டியில் பங்கேற்கும் இந்தியா உள்பட 186 நாடுகளின் வீரர்கள் அனைவரும் தங்களது நாட்டுக் கொடியுடன் அணிவகுத்து வந்தனர்.

விழா முடிந்ததும் பிரதமர் மோடி சாலை மார்க்கமாக புறப்பட்டு கிண்டி ஆளுநர் மாளிகைக்குச் சென்றார்.

இன்று காலை பிரதமர் மோடி சென்னை அண்ணா பல்கலைக்கழக 44 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்குகிறார். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு காலை 11.50 மணியளவில் மோடி சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுவ் செல்கிறார்.

Leave a Response