நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் விலைவாசி உயர்வு, உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரிய மக்களவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூட்டத் தொடர் முழுவதும் நீக்கப்பட்டுள்ளனர். மாநிலங்களவையில் திமுகவின் 6 உறுப்பினர்கள் உட்பட 19 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த வாரம் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்றைய கூட்டத்தொடர் தொடங்கும் முன்பாக, இடைநீக்கம் செய்யப்பட்ட திமுக உறுப்பினர்கள் உட்பட 19 பேரும், காங்கிரசின் 4 மக்களவை உறுப்பினர்களும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவை விதிமுறை மீறி மையப் பகுதிக்கு வந்து முழக்கமிட்டதாக ஆம் ஆத்மி உறுப்பினர் சஞ்சய் சிங், இந்த வாரம் முழுவதும் நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனால் மாநிலங்களவையில் இடைநீக்கம் ஆன உறுப்பினர்கள் எண்ணிக்கை 20 ஆனது. தொடர் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே, மாநிலங்களவையில் இடைநீக்கம் ஆன 20 உறுப்பினர்களும் வெள்ளிக்கிழமை வரை நாடாளுமன்ற வளாகத்திலேயே தங்கி 50 மணி நேர தொடர் போராட்டத்தை நேற்று தொடங்கினர். இதே போல, மக்களவையிலும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்களால் கடும் அமளி ஏற்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், காங்கிரசுக் கட்சித் தலைவர் இராகுல்காந்தி தனது டிவிட்டர் பதிவில்,
சிலிண்டர் விலை ரூ.1053 ஆக உயர்த்தியது ஏன்? தயிர் மற்றும் தானியங்கள் மீது ஜிஎஸ்டி ஏன்? கடுகு எண்ணெய் விலை ரூ.200? வேலைவாய்ப்பு மற்றும் பணவீக்கம் குறித்து கேள்வி எழுப்பிய 57 எம்பிக்கள் கைது செய்யப்பட்டனர். 23 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்துள்ளனர். ஜனநாயகக் கோயிலில் கேள்விகளுக்கு மன்னராகிய பிரதமர் மோடி பதில் சொல்ல பயப்படுகிறார். சர்வாதிகாரிகளை எப்படி எதிர்த்துப் போராடுவது என்பது எங்களுக்கு நன்கு தெரியும்
என்று பதிவிட்டுள்ளார்.