தனியாகச் சந்திக்க மறுத்த மோடி – ஓபிஎஸ் ஈபிஎஸ் அதிர்ச்சி

அதிமுகவில் தற்போது புயல் வீசி வருகிறது. எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தாங்கள்தான் உண்மையான அதிமுக என்று கூறி வருகின்றனர். இருவரும் நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் நாடி வருகின்றனர். இந்தநிலையில், இருவரும் தங்களுக்குத்தான் பாஜக ஆதரவு இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.

ஆனால், பாஜக இந்த விசயத்தில் மெளனம் காத்து வருகிறது. இரு அணியில் யாருக்கு ஆதரவு தெரிவித்தாலும், மற்றொரு அணி பலவீனம் ஆகிவிடும்.

எனவே, ஒரு அணியை மட்டும் ஆதரிக்க மோடி மறுத்து வருகிறார். இருவருமே வேண்டும் என்று கருதுகிறார். இதனால் இரு அணியினரும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

அதேநேரத்தில் இரு அணியினரும் பாஜகவை எதிர்க்கவும் பயந்துபோய் உள்ளனர். பாஜவை எதிர்த்தால் அடுத்தநாளே தனது வீட்டுக்கு வருமான வரித்துறை அல்லது அமலாக்கத்துறை சோதனை வரும் என்று அதிமுக மூத்த தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களும் அச்சத்தில் உள்ளனர்.

அதற்கு ஏற்றார்போல, எடப்பாடி பழனிச்சாமியின் நண்பர்களும், ஒப்பந்ததாரர்களுமான செய்யாத்துரை மற்றும் ஆர்.ஆர்.கன்ட்ஸ்ட்ராக்சன் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி பலகோடி ரூபாய் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர். பல கோடிக்கு சொத்து ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். வேலுமணிக்கு நெருக்கமானவரின் வீடு, அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் கலக்கம் அடைந்தனர்.

இதனால் முன்னாள் குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்த் வழியனுப்பு விழாவில் கலந்து கொண்டு மோடியை தனியாகச் சந்தித்துப் பேச எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டார்.இதற்காக தனியாகப் பேச மோடியிடம் அனுமதி கேட்டார். ஆனால் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை.

ஆனாலும் டெல்லி சென்று இராம்நாத் கோவிந்த் வழியனுப்பு விழாவில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின்போது, மோடிக்கு வணக்கம் செலுத்தினார் எடப்பாடி. பதிலுக்கு வணக்கம் செலுத்திய மோடி, எதுவும் பேசாமல் புறப்பட்டுச் சென்று விட்டார். தயாராகக் கொண்டு சென்ற ஒரு கடிதத்தை மோடியிடம் எடப்பாடி கொடுத்தபோது, அதை அமித்ஷாவிடம் கொடுங்கள் என்று கூறி கடிதத்தை வாங்க மறுத்து விட்டார். இதனால் அமித்ஷாவைச் சந்திக்க அனுமதி கேட்டார். அவரும் அனுமதி கொடுக்கவில்லை. இதனால் எடப்பாடி பழனிச்சாமி கடும் அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்தார். தனது பயணத்தை பாதியிலேயே இரத்து செய்து விட்டு சென்னை திரும்பி விட்டார்.

சென்னையில் நேற்று நடந்த செஸ் போட்டி தொடக்க விழாவுக்கு வரும் மோடியை வரவேற்க எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அனுமதி கேட்டனர். அதில், சென்னை விமானநிலையத்தில் வரவேற்க எடப்பாடிக்கும், ஐஎன்எஸ் அடையாறு கடற்படை மைதானத்தில் வரவேற்க ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் திடீரென பன்னீர்செல்வத்துக்கு அனுமதி இரத்து செய்யப்பட்டது. சென்னை விமானநிலையத்தில் எடப்பாடிக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டதால், அவர் மோடியை வரவேற்றார்.

அதேநேரத்தில் சென்னை ஆளுநர் மாளிகையில் தங்கியுள்ள மோடியைத் தனியாகச் சந்தித்துப் பேசவும், அதிமுக மோதல் குறித்து ஒரு தரப்பு மீது மற்றொரு தரப்பு புகார் செய்யவும் திட்டமிட்டு அனுமதி கேட்டனர். ஆனால் பிரதமர் மோடி இருவரையும் சந்திக்க மறுத்து விட்டார்.

அதேநேரத்தில் இரவு 8.30 மணிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், முன்னாள் மாநில தலைவர்கள் சி.பி.ராதாகிருஷ்ணன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, கேசவ விநாயகம், நைனார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தமிழக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி என 17 பேர் கொண்ட குழுவினரை மட்டும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அப்போது, , அதிமுக விவகாரம் குறித்து தற்போது எதுவும் பேச வேண்டாம் என்று கட்சியினரைக் கேட்டுக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

அதன்பின்னர், நேற்று இரவு ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடி ஓய்வெடுத்தார். இன்று காலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கலந்து கொள்கிறார். பின்னர் சென்னை விமானநிலையம் செல்கிறார். அங்கிருந்து டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

அப்போது மோடியை வழியனுப்பி வைக்க, எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. மாறாக, ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர் தனது ஆதரவாளர்களுடன் சென்று மோடியை வழியனுப்பி வைக்கிறார்.

இது அதிமுகவினரிடையே கடும் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response