தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் டீசல் விநியோகத்தை நிறுத்திவைத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இந்தியன் ஆயில் நிறுவனம் டீசல் விநியோகத்தைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தது. இந்நிலையில் அந்நிறுவனமும் டீசல் விநியோகத்தில் கட்டுப்பாடுகள் கொண்டுவந்துள்ளனவாம்.
ஒரு பங்க்கில் பத்தாயிரம் இலிட்டர் டீசல் ஐந்தாயிரம் இலிட்டர் பெட்ரோல் வேண்டும் என்று கேட்டால், பெட்ரோல் பத்தாயிரம் இலிட்டர் வாங்கிக் கொள்ளுங்கள் டீசல் ஐந்தாயிரம் இலிட்டர்தாம் கொடுப்போம் என்கிறார்களாம்.\
அதாவது கேட்பதில் பாதியை மட்டுமே தருவதாகச் சொல்வதால் டீசல் தட்டுப்பாடு நிலவுகிறது.
இதனால், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மட்டுமின்றி வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பீதியடைந்துள்ளனர்.
பக்கத்துநாடான இலங்கையில் ஏற்பட்டுள்ளது போல் இங்கும் நடந்துவிடுமோ? என்கிற அச்சம் எல்லோருடைய மனங்களிலும் எழுந்திருக்கிறது.
இன்னொரு பக்கம், அண்மைய விலைக்குறைப்பால் டீசல் விற்பனையில் நட்டம் ஏற்படுகிறது. அதனால் விற்பனையைக் குறைத்து நட்டத்தைக் குறைக்கும் விநோத சிந்தனையைச் செயல்படுத்துகிறார்களோ? என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது.
மூன்றாவதாக, தட்டுப்பாட்டை ஏற்படுத்தி டீசல் விலையை உயர்த்தத் திட்டமிட்டுள்ளார்களா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
மக்கள் மனங்களில் எழுந்துள்ள இக்கேள்விகளுக்கு விடை சொல்லத்தான் யாருமில்லை.