அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் ஜிஎஸ்டி வரி உயர்வு – அடித்தட்டு நடுத்தர மக்கள் அதிர்ச்சி

சண்டிகரில் 2 நாட்கள் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிறைவடைந்தது. இந்தக் கூட்டத்தின் முடிவுகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

அவர் கூறியதாவது….

ஆன்லைன் விளையாட்டுகளுக்குக் கூடுதல் வரி விதிப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படவில்லை. கூடுதல் வரி விதிப்பது பற்றி மறுபரிசீலனை செய்து அறிக்கை அளிக்க குழுவுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஆகஸ்ட் மாதம் நடைபெறும். மாநிலங்களுக்கான இழப்பீட்டை நீட்டிப்பது குறித்து கூட்டத்தில் முடிவெடுக்கப்படவில்லை. சரக்கு போக்குவரத்துக்கான வரியைக் குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சில் முன் பல்வேறு மாநிலங்கள் வரியை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்த நிலையில், அதற்க்கு பல குழுக்கள் அமைக்கப்பட்டு, அந்த குழுக்கள் மூலமாக பரிசீலனை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில்

1. எழுதும் மை மீதான வரி 12 %-ல் இருந்து 18 %-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
2. தண்ணீர் இறைக்கப் பயன்படுத்தப்படும் மோட்டார் பம்புகள் மீதான வரி 12%-ல் இருந்து 18%-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
3. இட்லிக்கான மாவு அறைக்கும் இயந்திரத்திற்கான வரி 5%-ல் இருந்து 18 %- ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
4. அரிசி அரவை மில்களில் பயன்படுத்தப்படும் பல்வேறு இயந்திரங்களுக்கான வரி 5% இருந்து 18 %-மாக உயர்த்தப்பட்டுள்ளது.
5. எல்.ஈ.டி. பல்புகள் மீதான வரி 12% -ல் இருந்து 18 %- ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
6. சூரிய ஒளி மூலமாக தண்ணீரைச் சுடவைக்கக் கூடிய இயந்திரத்திற்கான வரி 5% இருந்து 12%-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
7. சில தோல் பொருட்களுக்கான வரி 5%-ல் இருந்து 18 %-மாக உயர்த்தப்பட்டுள்ளது.
8.வைரங்கள் மீதான வரி 0.25%-ல் இருந்து 1.5 %-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
9. ரூ 1000 – க்கும் குறைவான விடுதி அறை வாடகைக்கு 12 % ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.

ஜிஎஸ்டி கவுன்சில்லால் அமைக்கப்பட்ட குழுக்கள் அளித்த பரிந்துரையின் அடிப்படையிலே இந்த வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதில் பல்வேறு மருத்துவ உபகாரங்களுக்காகன வரியைக் குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் அமைத்த குழு வலியுறுத்தியிருந்தது. அதன் அடிப்படையில், மருத்துவ உபகாரங்களுக்கான வரி 12 %-ல் இருந்து 5%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

ஒன்பது பொருட்களுக்கான வரிஉயர்வில் எட்டுப் பொருட்கள் அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள் என்பதால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Response