
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் ரூ.9 ஆயிரம் கோடி செலவில் 67.14 டிஎம்சி கொள்ளளவு கொண்ட புதிய அணையைக் கட்ட முடிவெடுத்துள்ளது.
இதனை தமிழக அரசு எதிர்த்துவருகிறது.இந்நிலையில், கர்நாடக அரசு 2018 ஆம் ஆண்டு முதற்கட்டத் திட்ட வரைவு அறிக்கையை ஒன்றிய நீர் ஆணையத்திடம் தாக்கல் செய்தது.அதனைப் பரிசீலித்த ஆணையம் விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.
அதன்படி 2019 ஆம் ஆண்டு விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்ட தகவல்கள் காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்புக்கு முரணாக இருந்ததால், அதனைத் திருத்தி வழங்குமாறு ஒன்றிய நீர் ஆணையம் உத்தரவிட்டது.
இதையடுத்து,கடந்த ஏப்ரலில் திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை ஒன்றிய நீர் ஆணையத்திடம் தாக்கல் செய்தது.அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள்,காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு முரணாக இருந்ததால் கடந்த ஜூன் 29 ஆம் தேதி கர்நாடக அரசுக்குத் திருப்பி அனுப்பியது.
இந்நிலையில் திருப்பி அனுப்பப்பட்ட அறிக்கையில் சில திருத்தங்களைச் செய்து, கர்நாடக அரசு மீண்டும் ஒன்றிய நீர் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளது.
அந்த அறிக்கையில்,
மேகதாது அணை கட்டுவதற்கு வனத்துறைக்குச் சொந்தமான 12 ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்துக்காக அந்த இடத்தில் உள்ள 8.90 இலட்ச மரங்களை வெட்ட வாய்ப்பு இருக்கிறது.புதிதாகக் கட்டப்படும் அணையில் 67.14 டிஎம்சி வரை நீரைச் சேமிக்க முடியும்.அதில் 400 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு 4.5 டிஎம்சி பெங்களூருவின் குடிநீர்த் தேவைக்குப் பயன்படுத்தப்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சர் செலுவராயசாமி கூறுகையில், “
மேகதாது அணை தொடர்பாக திருத்தப்பட்ட திட்ட வரைவு அறிக்கையை மீண்டும் சமர்ப்பித்திருக்கிறோம்.மத்திய அரசிடம் விரைவில் அனுமதி பெறப்படும்.2027 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மேகதாது திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்படும் என்று கூறியிருக்கிறார்.
இது தமிழ்நாட்டு விவசாயிகள் மற்றும் மக்களுக்கு பெரும் அதிர்ச்சி தருவதாக அமைந்திருக்கிறது.தமிழ்நாடு அரசு இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? என அனைவரும் பதட்டத்துடன் காத்திருக்கின்றனர்.


