ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை – பழ.நெடுமாறன் கண்டனம்

2022 – 23 ஆம் ஆண்டுக்கான இந்திய ஒன்றிய நிதிநிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

அதுகுறித்து, தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை……

ஒன்றிய அரசின் நிதியமைச்சர் அளித்த வரவு-செலவுத் திட்டத்தில் ஏமாற்றங்கள் மிகுந்துள்ளன. மாதாந்திர ஊதியம் பெறுபவர்கள், சிறு-குறு தொழில்கள், சிறு வணிகர்கள், நடுத்தர வர்க்கத்தினர் ஆகியோரின் வருமானவரி உச்சவரம்பு உயர்த்தப்படாதது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.

கொரோனா தொற்று நோய் புதிய வடிவமெடுத்து மக்களை மிரட்டிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் சுகாதாரத் துறைக்கு புள்ளி 2 அளவுக்கு மட்டுமே நிதி உயர்த்தப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

பதிவுத்துறையில் ஒரே நாடு-ஒரே பதிவு என்ற திட்டம் புகுத்தப்படுவது மாநிலங்களின் உரிமையையும், வருவாயையும் பேரளவு பாதிக்கும். பதிவுத் துறையை ஒன்றிய அரசின் கீழ் கொண்டுவருவதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக இது அமைந்திருப்பது கண்டிக்கத் தக்கது.

தலைமையமைச்சராக வாஜ்பாய் இருந்த காலத்திலிருந்து அறிவிக்கப்பட்டு வரும் கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டமும் இப்போதும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அடையாளப்பூர்வமாகக்கூட அதற்கான சிறிதளவு நிதி ஒதுக்கப்படவில்லை என்பது வெற்று அறிவிப்புத் திட்டமாகும்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரவு-செலவு திட்டமே தவிர, ஏழை, நடுத்தர மக்களுக்கான திட்டமல்ல. நாட்டின் மிகப்பெரும்பாலான மக்களுக்குப் பெரும் ஏமாற்றம் அளிக்கும் திட்டமாகும் இது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response