காங்கிரசுக் கட்சியின் 3 நாள் சிந்தனை அமர்வுக் கூட்டம் இராஜஸ்தானின் உதய்பூரில் நேற்று நிறைவடைந்தது.
இதில் நிறைவுரையாற்றிய காங்கிரசு தலைவர் இராகுல் காந்தி கூறியதாவது…..
பாஜக, ஆர்எஸ்எஸ் போல கருத்து சுதந்திரத்தை நெரிக்கும் கட்சி அல்ல காங்கிரசு.இங்கு கட்சித் தலைமை பற்றி கட்சி உறுப்பினர்கள் அப்பட்டமாகக் கருத்துக் கூற முடியும். இதன் காரணமாக காங்கிரசு விமர்சிக்கப்பட்டு வருகிறது. கருத்து சுதந்திரம் நசுக்கப்படுவதன் விளைவுகளை நாடு இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை.
பாஜகவும், ஆர்எஸ்எசும் சர்வாதிகாரிகள், நாட்டிற்கு ஆபத்தானவர்கள். இந்த ஆட்சியில், நாட்டின் முக்கிய நிறுவனங்களின் குரல்வளை முடக்கப்பட்டுள்ளது. நீதித்துறை தவறாக வழிநடத்தப்பட்டு, தேர்தல் ஆணையத்தின் கைகள் கட்டப்பட்டுள்ளன. ஊடகங்கள் வாயடைக்கப்பட்டு உள்ளன. பெகாசஸ் போன்ற உளவு மென்பொருள் மூலம் அரசியல் எதிராளிகளை மவுனமாக்குகின்றனர்.
பஞ்சாபில் விவசாயச் சட்டங்கள் மக்களுக்கு ஏற்படுத்திய பேரழிவை நாம் பார்த்திருக்கிறோம். இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது, ஆனால் வேலையில்லாத் திண்டாட்டம் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம். மாநிலங்களும் மக்களும் உரையாட கருத்துத் தெரிவிக்க ஒன்றியம் அனுமதிக்க வேண்டும். இந்திய மக்களிடையே உரையாடலைத் தடுப்பதற்கான ஒரே மாற்று வன்முறை மட்டுமே. இதைத்தான் பாஜக பரப்புகிறது. இந்த நாட்டின் நிறுவனங்கள் செயல்படுவதை நிறுத்தும் நாளில், இந்த நாடு தன்னுடன் உரையாடலை நிறுத்தும் நாளில், நாம் கடுமையான சிக்கலில் இருப்போம். இதற்கு பாஜக அரசு காரணமாக இருக்கும்.
இதையெல்லாம் நாம் மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். மக்கள் பிரிந்து கிடப்பதையும், அது நாட்டுக்கு எந்த விதத்திலும் பயனளிக்காது என்பதையும் அவர்களுக்கு உணர்த்துவது நமது பொறுப்பு, அதை காங்கிரசால் மட்டுமே செய்ய முடியும். இதற்காக அக்டோபர் முதல் நாம் யாத்திரை மேற்கொண்டு மக்களுடன் மீண்டும் வலுவாக இணைவோம்.
காங்கிரசைப் போல, மாநிலக் கட்சிகளால் பாஜகவை எதிர்த்துப் போராட முடியாது. இது சித்தாந்தங்களின் போராட்டம். பாஜக காங்கிரசைப் பற்றி பேசும். ஆனால், மாநிலக் கட்சிகளைப் பற்றிப் பேசாது. மாநிலக் கட்சிகளுக்கு அம்மாநிலம் சார்ந்த கொள்கை மட்டுமே இருக்கிறது என்பதை அவர்கள் அறிவார்கள். எனவே, மாநிலக் கட்சிகளால் பாஜகவை வீழ்த்த முடியாது. எனவே, இது நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்றும் போராட்டம்.
முதலில் நாம் எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். மக்களுடனான காங்கிரசின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதை மறுக்க முடியாது. ஆனால், தேசத்தை முன்னோக்கி வழிநடத்திவது காங்கிரசுதான் என்பதை மக்கள் அறிவார்கள். மக்களுடனான தொடர்பை வலுப்படுத்த எந்தக் குறுக்கு வழிகளும் இல்லை. அதற்கு நாம் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். விவசாயிகள், தொழிலாளர்களுடன் நாள் கணக்கில் அல்ல மாதக் கணக்கில் செலவிடுங்கள். மீண்டும் மக்களுடனான தொடர்பை நிலைநாட்ட வேண்டும், அதை வலுப்படுத்த வேண்டும். அதற்கான உங்களுடன் இணைந்து நானும் போராடுவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.