கடும் எதிர்ப்புகளையும் மீறி நீட் தேர்வு இன்று நடக்கிறது – கட்டுப்பாடுகள் விவரம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகள், ஆயுர் வேதா, சித்தா, யுனானி, ஓமியோபதி உள்ளிட்ட இந்திய மருத்துவ இளநிலை படிப்புகளுக்காக நீட் நுழைவுத் தேர்வை மோடி அரசு நடத்துகிறது.

கல்வியாளர்கள் மற்றும் அரசியல்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நடத்தப்படும் இத்தேர்வை, தேசிய தேர்வு முகமை பொறுப்பெடுத்து நடத்துகிறது. ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு நுழைவுத் தேர்வு ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா 2 ஆவது அலை காரணமாக செப்டம்பர் 12 ஆம் தேதிக்கு தேர்வு தள்ளிவைக்கப்பட்டது.

இதன்படி இந்திய ஒன்றியம் முழுவதும் இன்று நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.

இந்தத் தேர்வை 16.14 இலட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். தமிழகத்தில் மட்டும் 1.20 இலட்சம் பேர் தேர்வை எழுத உள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நீட் தேர்வு மையங்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன்படி ஒன்றியம் முழுவதும் 3,858 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நீட் தேர்வு எழுத வரும் மாணவ, மாணவியர் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிகளை தேசிய தேர்வு முகமை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டு நெறிகளை அனைத்து மாணவர்களும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று தேசிய தேர்வு முகமை கேட்டுக் கொண்டுள்ளது.

இதனிடையே ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில், நீட் நுழைவுத் தேர்வை நடத்த மாநில அரசுகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே நீட் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் குறித்த நேரத்தில் நீட் நுழைவுத் தேர்வு மையத்துக்குச் செல்ல மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும்” என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேட்டுக் கொண்டுள்ளார்.

நீட் நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் வெளியாகி இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இத்தகைய வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று தேசிய தேர்வு முகமை இயக்குநர் வினீத் ஜோஷி அறிவுறுத்தியுள்ளார்.

அவர் மாநில அரசுகளுக்கு அனுப்பியு்ள்ள கடிதத்தில், “கொரோனா 2ஆவது அலையின்போது மிகப்பெரிய பாதிப்புகளை எதிர்கொண்டோம். இந்தச் சூழலில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. தேர்வை சுமுகமாக நடத்த அனைத்து மாநில அரசுகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தலைமைச் செயலாளர்கள், காவல்துறை தலைவர்களுக்கு மாநில முதல்வர்கள் உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும். அப்போதுதான் நீட் தேர்வை வெற்றிகரமாக நடத்த முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, கோவை, வேலூர், திருநெல்வேலி, திருப்பூர், சேலம், கடலூர், கரூர், நாகர்கோவில், நாமக்கல், தஞ்சாவூர், விருதுநகர், திண்டுக்கல் உட்பட ஒன்றியம் முழுவதும் 202 நகரங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் 33 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. இதையொட்டி சென்னையில் மாநகரப் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன.

மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நீட் தேர்வு நடைபெற உள்ளது. மாணவ, மாணவியர் மதியம் 1.30 மணிக்குள் தேர்வு மையத்தில் இருக்க வேண்டும். அனுமதி அட்டை, அடையாள அட்டை, மாற்றுத் திறனாளியாக இருந்தால் அதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். மின்னணுப் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. உட்பக்கம் தெளிவாகத் தெரியும் தண்ணீர் பாட்டில் கொண்டு செல்லலாம். 50 மி.லி. சானிடைசர் எடுத்துச் செல்லலாம்.

ஏற்கெனவே பின்பற்றப்படும் ஆடை கட்டுப்பாடுகள் இந்த ஆண்டும் கடுமையாகப் பின்பற்றப்படும். தேர்வு மையத்தில் மாணவர்களுக்கு புதிதாக என் 95 முகக்கவசம் வழங்கப்படும். ஏற்கெனவே அணிந்திருக்கும் முகக் கவசத்தை கழற்றிவிட்டு புதிய முகக்கவசத்தை அணிய வேண்டும்.

தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகளின் உடல் வெப்பநிலை, ஆக்சிஜன் அளவு பரிசோதிக்கப்படும். உடல் வெப்பநிலை அதிகமுடைய மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தேர்வு எழுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Response