பல்லாண்டுகளாகச் சிறையில் வாடும் இந்த 45 பேரை விடுவியுங்கள் – பழ.நெடுமாறன் கோரிக்கை

எழுவர் மற்றும் 38 முசுலீம் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்று பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களின் 113 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நீண்டகாலம் சிறையில் வாடும் 700 ஆயுள் தண்டனைக் கைதிகளை மனிதநேய அடிப்படையில் முன்விடுதலை செய்யப்படுவார்கள் என சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்த அடிப்படையில் அதற்கான அரசாணை தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

20 ஆண்டுகாலம் சிறைவாசம் முடித்தவர்கள் மட்டுமல்ல, 10 ஆண்டுகள் நிறைவு செய்தவர்களையும் விடுதலை செய்வதற்கான விதிமுறைகள் இந்த ஆணையில் வெளியிடப்பட்டுள்ளன. இதை நான் வரவேற்றுப் பாராட்டுகிறேன்.

இந்த விதிமுறைகளின் அடிப்படையில் இராசீவ் கொலை வழக்கில் நீண்டகாலமாகச் சிறையில் வாடும் 7 பேர்களையும், கோவை குண்டுவெடிப்பு வழக்கில் நீண்டகாலமாகச் சிறைவாசம் அனுபவித்துவரும் 38 முசுலீம்களையும் விடுதலை செய்வதற்கு முன்வரவேண்டும் என தமிழக அரசை வேண்டிக்கொள்கிறேன்.

கடந்த காலத்தில் அண்ணா நூற்றாண்டு விழா போன்ற முக்கிய அரசு விழாக்களின் போதுகூட இவர்கள் விடுவிக்கப்படவில்லை. மேலே கண்ட சிறைவாசிகளில் பலர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், அவர்களுக்குக் கருணை காட்டப்படவில்லை.

கீழ்வெண்மணியில் 44 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களும், மூன்று மாணவிகள் உயிரோடு கொளுத்தப்பட்ட தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களும் 10 ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறைவாசிகளை விடுதலை செய்யும்போது பாரபட்சம் காட்டக்கூடாது என உச்சநீதிமன்றம் வழிகாட்டியுள்ளது. மேலும் 14 ஆண்டுகள் சிறைவாசம் நிறைவு பெற்ற கைதிகளை விடுதலை செய்வது மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளது.

எனவே, மேற்கண்டவர்களை விடுதலை செய்வதற்கு விதிமுறைகள் ஏதேனும் தடையாக இருக்குமானால், சிறப்பு ஆணையின் மூலம் அவற்றை நீக்கி இவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய முன்வரும்படி தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை வேண்டிக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response