தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67 ஆவது பிறந்தநாளை உலகமெங்கும் தமிழர்கள் கொண்டாடிவருகிறார்கள்.
தமிழினத் தலைவருக்கு பாவலர் அறிவுமதியின் வாழ்த்துப்பா….
காட்டையே கருவறை ஆக்கியே
புலிகளைப் பெற்றவன்
பிறந்தநாள் போற்றுவோம்
அறத்திலும் பிழைவிடா
புறத்திலும் பிசைகிடா
அண்ணன் நாள்
ஆராரோ போற்றுவோம்
வல்வெட்டித் துறையானை
வான்முட்டும் புகழானை
திசையெட்டும்
கை தட்டப்போற்றுவோம்
புகழ் முருகன் வேல் வாங்கி
நிகழ் முருகன் துவக்காக்கி
பெரும் படையை உருவாக்கி
வியப்படையச் செய்தவனை
கொற்றவையாள் பிள்ளையென
குலவையிட்டு போற்றுவோம்
அடிப்படையில் பூனைகளாய்
அடங்கிக் கிடந்த
எங்கள் ஒளவையரின்
கைகளிலே அதியன் போல்
நெல்லியினை அன்பில் தாராமல்
ஆயுதங்கள் தனைத்தானே
அள்ளி அள்ளித்தான் கொடுத்து
போர் தொடுக்க வைத்தவனின்
புகழ் சொல்லிப் போற்றுவோம்
பெற்றோரை பிள்ளைகளை
உற்ற துணைவியினை
உலகிலுள்ள தமிழர்களின் உயரத்தில் ஓரடியும் உயர்வென்று கருதாத கவனத்தை வைத்தபடி
கடுகளவும் பிழை சொல்ல
காரியங்கள் செய்யாத
களத்தலைவன்
பெயர் சொல்லி
கனிவோடு போற்றுவோம்
ஆற்றல் மிகு தலைவனுக்கு
ஆராரோ நாள் இன்று
ஏற்ற மிகு தலைவனுக்கு இனிப்பான நாள் இன்று
நினைத்தாலே புல்லரிக்கும் நெடும்புகழன் நாளின்று
விடுதலைக்கு வித்திட்டு விளைய வைப்பான் நாளின்று
படத்திலே பார்த்தாலும் திமிர் கொடுப்பான் நாளின்று
தமிழ்த் திமிர் கொடுப்பான் நாளின்று
அண்ணன் வாழ்க
அண்ணனைப்பெற்ற அன்னையும் வாழ்க
தலைவன் வாழ்க
தலைவனைப் பெற்ற
தாயும் வாழ்க
வாழ்க… வாழ்க…