மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம் – மருத்துவர் இராமதாசு

வீரத்தின் விளைநிலமாகவும், வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் திகழ்ந்த மருது சகோதரர்கள் சிவகங்கை திருப்பத்தூரில் 220 ஆண்டுகளுக்கு முன் தூக்கிலிடப்பட்ட நாள் இன்று.

அதையொட்டி பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு எழுதியுள்ள பதிவில்….

தென்புலத்தில் மண்ணைக் காப்பதில் மருது சகோதரர்களுக்கு இணை எவருமில்லை. நினைவு நாளில் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்.

மருது சகோதரர்களின் வீரவரலாறு மிக நீண்டது.

மருது சகோதரர்கள் மன்னர்கள் அல்ல. ஆனால், மண்ணைக் காப்பதில் மன்னர்களை விட சிறந்தவர்கள். மன்னர்களையே காத்தவர்கள்.

அண்ணன், தம்பிகளான இவர்கள் மன்னர்களாக சிவகங்கை சீமையை ஆளவில்லை. ராமநாதபுரம் சமஸ்தானத்தை ஆண்ட மன்னர் சேதுபதியின் மகள் வேலுநாச்சியார் சிவகங்கை மன்னரான முத்துவடுக நாதருக்கு மணம் முடிக்கப்பட்டதும், மகளின் சாம்ராஜ்யத்திற்கு பாதுகாவலர்களாக சேதுபதி மன்னரால் அனுப்பப்பட்டவர்கள் தான் மருது சகோதரர்கள்.

1772 ஆம் ஆண்டு சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர் ஆங்கிலேய படைகளால் சதித்திட்டம் மூலம் கொல்லப்படுகிறார். அந்த நேரத்தில் அரசி வேலு நாச்சியாரை பாதுகாத்த மருது சகோதரர்கள், திண்டுக்கல் அருகே இருக்கும் விருப்பாட்சி என்கிற இடத்தில் மைசூர் மன்னர் ஹைதர் அலியிடம் சேர்க்கின்றனர். அதற்கு பிறகு தலைமறைவு வாழ்கை வாழ்ந்த பெரிய மருதுவும், சின்ன மருதுவும் ஆங்கிலேய ஏகாப்தியத்தை எதிர்ப்பதற்காக படை திரட்ட தொடங்குகின்றனர்.

பெரும்படையோடு 1780 ம் ஆண்டு சிவகங்கை சீமையை மீட்டு வேலுநாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்துகிறார்கள். அதன்பின்னர் வேலுநாச்சியார், தனது காலத்திற்கு பிறகு சிவகங்கை மண்ணின் அரச பிரதிநிதியாக மருது சகோதரர்களை அறிவித்தார். வேலுநாச்சியாரின் மறைவிற்கு பிறகு சிவகங்கையை திறம்பட நிர்வகிக்கத்தொடங்கினர் மருது சகோதரர்கள்.

பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் 1785 முதல் 1801 வரை நம் மண்ணை அடிமைப்படுத்தி ஆண்டுவந்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதம் தாங்கி வீறுகொண்டு போராடினார்கள். பீரங்கி போன்ற அதிநவீன ஆயுதங்களுடன் போரிட வந்த வெள்ளையர்களை வேல்கம்பும், வீச்சரிவாளும் வைத்து ஓடஓட விரட்டிய பெருமை கொண்டவர்கள் மருது சகோதரர்கள்.

வீரபாண்டிய கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்ததற்காக 1801 ம் ஆண்டு சிவகங்கை மீது ஆங்கிலேயர்கள் போர் தொடுத்தனர். சதித்திட்டங்கள் மூலம் சிவகங்கையை சுற்றி வளைத்த ஆங்கிலேயர்களிடம் இருந்து அவர்கள் தப்பிவிடுகின்றனர். மருது சகோதரர்களை பிடிக்க முடியாததால் ஆத்திரத்தில் காளையார் கோவில் கோபுரம் இடித்து தள்ளப்படும் என்று ஆங்கிலேய படைகள் அறிவித்தன. ஆசை, ஆசையாக கட்டிய கோபுரம் இடிக்கப்பட்டுவிட கூடாது என்ற காரணத்தால் இறுதியாக ஆங்கிலேய படைகளிடம் மருது சகோதரர்கள் சரணடைந்தனர். அதன்பின்னர் அவர்களை திருப்பத்தூரில் ஆங்கிலேயர்கள் துக்கிலிட்டனர்.

மருதுசகோதரர்கள் தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து பெரும் போராட்டம் வெடித்தது. இரு நாட்கள் நீடித்த அந்தப் போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். பின்னர் தூக்கில் இருந்து இறக்கப்பட்ட மருது சகோதர்களின் உடல்களில் இருந்து அவர்களின் தலைகள் மட்டும் தனியாக துண்டிக்கப்பட்டு, அவர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்த விருப்பப்படி, காளையார் கோயில் எதிரில் உள்ள சிறிய அறையில் அடக்கம் செய்யப்பட்டன. இப்போதும் அந்த இடத்தில் அவர்களை தங்களின் கடவுளாக அப்பகுதி மக்கள் வழிபடுகின்றனர்.

இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

Leave a Response