தமிழ்நாட்டில் வாழும் ஈழத்தமிழ் மாணவர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள 4 புதிய சலுகைகள்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 27) சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு…..

இலங்கைத் தமிழர்களின் பிள்ளைகளின் கல்வி மேம்பட, வாழ்வு சிறக்க பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பொறியியல் படிப்பு படிக்கத் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் மதிப்பெண் அடிப்படையில் முதல் 50 மாணவர்களுக்கு அனைத்து விடுதிக் கட்டணம், கல்விக் கட்டணம் ஆகியவற்றை அரசே ஏற்கும்.

மேலும், வேளாண், வேளாண் பொறியியல் பட்டப்படிப்பிலும், மதிப்பெண் அடிப்படையில் முதல் 50 மாணவர்களுக்கு அனைத்து விடுதிக் கட்டணம், கல்விக் கட்டணம் ஆகியவற்றை அரசே ஏற்கும்.

முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் அனைத்து முகாம் வாழ் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களின் கல்வி மற்றும் விடுதிக் கட்டணங்களை அரசே ஏற்கும். இதற்காக ஆண்டுதோறும் 1 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களில் ஆண்டு ஒன்றுக்கு தோராயமாக, 750 மாணவர்கள் அரசு மற்றும் பிற கல்லூரிகளில் கலை, அறிவியல், மற்றும் பட்டயம் உள்ளிட்ட தொழில் படிப்புகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கான கல்வி உதவித்தொகை போதுமானதாக இல்லை என அறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு பாலிடெக்னிக் படிப்புகளுக்கு ரூ.2,500, இளநிலை கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு ரூ.3,000, இளநிலை தொழில் சார்ந்த படிப்புகளுக்கு ரூ.5,000 என, கல்வி உதவித்தொகையாக ஏற்கெனவே வழங்கப்பட்டு வருகிறது.

இனி, பாலிடெக்னிக் படிப்புகளுக்கு ரூ.10,000, இளநிலை கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு ரூ.12,000, இளநிலை தொழில் சார்ந்த படிப்புகளுக்கு ரூ.20,000 என உயர்த்தி வழங்கப்படும். இதற்காக ஆண்டுதோறும் ரூ.1 கோடியே 25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Leave a Response