போர்க்குணமிக்க தமிழக இளையோரின் முக்கிய சிக்கல் – மு.க.ஸ்டாலினுக்கு பெ.மணியரசன் கடிதம்

காவிரி மற்றும் ஸ்டெர்லைட் போராட்ட வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காவிரி உரிமை மற்றும் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்ட வழக்குகளையும் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சருக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் வேண்டுகோள் விடுத்துக் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது…..

“வணக்கம்! தாங்கள் 24.06.2021 அன்று சட்டப்பேரவையில், அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அடக்குமுறை நோக்கில் போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்தீர்கள். அதற்காகத் தங்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துரிமைக்கு எதிராக ஊடகத்தார் மீதும், மூன்று வேளாண் சட்டங்கள் – குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிராகவும், மீத்தேன் – நியூட்ரினோ – கூடங்குளம் அணுஉலை – சேலம் எட்டுவழிச் சாலை ஆகிய திட்டங்களுக்கு எதிராகவும் அறவழியில் போராடியோர் மீதும் போட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்று குறிப்பாகச் சுட்டிக்காட்டி உரையாற்றினீர்கள்.

அதேவேளை, கர்நாடகத்திலிருந்து காவிரி நீர் உரிமையை மீட்பதற்காக – காயும் பயிரைக் காப்பதற்காகக் காவிரி நீர் கோரி – அறப்போராட்டம் நடத்திய காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களின் உழவர்கள் மீது போட்ட வழக்குகளையும், உயிர்க்கொல்லி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அறப்போராட்டங்கள் நடத்தியோர் மீது போட்ட வழக்குகளையும் திரும்பப் பெறுமாறு தங்களைக் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் இவ்வாறு வழக்குகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கைகள் எடுத்தபோது, “சட்ட வல்லுநர்கள்” என்று கருதப்படுவோர் இந்தியத் தண்டனைச் சட்டத்தில் சில பிரிவுகள் போடப்பட்டிருந்தால் அவ்வழக்குகளைத் திரும்பப் பெற முடியாது என்று முடிவு செய்து செயல்படுத்தினர். இந்த முறை அவ்வாறான தடையூறுகள் நேராமல் பார்த்துக் கொள்ளுமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் அறவழி சனநாயக ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் போன்றவற்றையெல்லாம் தடை செய்து, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 151இன் கீழ் முன்தடுப்புக் கைது செய்து மண்டபங்களில் வைப்பார்கள். மாலையில் விடுவிப்பார்கள். ஆனால், வெளியில் சொல்லாமல் இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ், வழக்குப்பதிவு செய்து வைத்துக் கொள்வார்கள். காவல்துறையின் அந்தச் செய்தியைத் தொடர்புடையவர்களுக்குச் சொல்ல மாட்டார்கள். முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவான செய்தியே பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரியாது. பிறகு நீதிமன்றத்திற்கு வருமாறு அழைப்பாணை அனுப்புவார்கள்.

இவ்வாறு மறைவாகத் தயாரிக்கும் முதல் தகவல் அறிக்கையில் பிணை மறுப்புக்குரிய குற்றப் பிரிவுகளும் (Non – Bailable) சேர்க்கப்பட்டிருக்கும். மிகச் சர்வசாதாரணமாக 506 (1), 506 (2), 153a, மற்றும் குற்றவியல் நடைமுறைத் திருத்தச்சட்டம் 7(1)(a) பிரிவுகளைச் சேர்ப்பார்கள்.

அதுபோன்ற நடைமுறைகள் தங்கள் ஆட்சியில் இனிமேல் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பிணை மறுப்புப் பிரிவுகள் போடப்பட்டுள்ள வழக்குகளையும் திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்து, இன்னொரு மோசமான நடைமுறை அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் வழக்குகள் தொடர்பாகக் கடைபிடிக்கப்பட்டது.

மேற்கண்டவாறு அறப்போராட்டங்களில் முன்தடுப்பாகத் தளைப்படுத்தி மண்டபத்தில் வைத்திருந்து, விடுவிக்கப்பட்ட பின் காவல்துறையினர் போட்டுக் கொண்ட முதல் தகவல் அறிக்கைகளை அவர்கள் கணிப்பொறியில் ஏற்றி விடுவார்கள்.

இளையோர் கடவுச்சீட்டுக்கோ, வேறு வேலை வாய்ப்பிற்கோ விண்ணப்பிக்கும் போது, அவர்களிடம் தொடர்புடைய காவல் நிலையங்களிலிருந்து “வழக்கில்லை” என்ற சான்று கேட்கிறார்கள். ஒருநாள் அடையாள உண்ணாப் போராட்டத்திற்கோ, ஆர்ப்பாட்டத்திற்கோ போன அந்த இளையோர் பெயர் காவல் நிலையக் கணிப்பொறியில் வழக்கு நிலுவையில் உள்ளோர் பட்டியலில் இருக்கும். அவர்களுக்குக் கடவுச்சீட்டும் கிடைக்காது; வேலையும் கிடைக்காது.

காவல்துறையின் இப்படிப்பட்ட நடவடிக்கையால் எதிர்காலம் பாதிக்கப்பட்டுத் தவித்துக் கொண்டிருப்போர் ஏராளமாக உள்ளனர்.

முன்தடுப்பு நடவடிக்கையாகத் தளைப்படுத்தப்படுவோர் மீது காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிந்து வழக்குப் போடும் பழக்கத்தைத் தங்கள் ஆட்சியில் கைவிடச் செய்யுமாறும், கணிப்பொறியில் பதிவேற்றாமல் செய்யுமாறும் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்குரிய வரையறைகளை வகுத்துக் கொள்வதற்காக, காவல்துறை அதிகாரிகள், சட்ட வல்லுநர்கள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் ஆகியோர் அடங்கிய ஒரு குழுவை அமைத்து, அதன் பரிந்துரையைக் கடைபிடிக்கச் செய்யுங்கள்.

மேற்கண்டவாறு, முன்தடுப்புக் கைதுகளை வழக்காக்கிக் குவித்துக் கொள்வது காவல் நிலையங்களுக்குப் பெருஞ்சுமை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அத்தனை வழக்குகளையும் நடத்துவதற்குத் தேவையான காவல்துறையினரும் இல்லை; நீதிமன்றங்களும் இல்லை!

அருள்கூர்ந்து தாங்கள் மேற்கண்ட எமது வேண்டுகோள்களை பகுப்பாய்வு செய்து செயல்படுத்திட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு பெ.மணியரசன் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Response