தூத்துக்குடி படுகொலை தமிழக வரலாற்றில் கருப்பு தினம் என்று ஏர்முனை இளைஞர் அணி தலைவர் என்.எஸ்.பி.வெற்றி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்….
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தூத்துக்குடி மாவட்ட கிராம மக்களின் தொடர் போராட்டம் கடந்த 100 நாட்களாகப் வேலைகளுக்குச் செல்லாமல் பல்வேறு கிராம மக்கள் ஒருங்கிணைந்து கடுமையாக போராடிவருகின்றனர். கிராம மக்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகள்,அரசியல் கட்சிகள், பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து வந்தாலும், போராட்டத்துக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை. மாறாகப் போராட்டத்தின் 100வது நாளான நேற்று தங்களது கோரிக்கைகளை பரிசீலிக்காமல் உதாசீனபடுத்தி கொண்டிருக்கும் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை கண்மூடிதனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அப்பாவி பொதுமக்கள் 10 மேற்பட்டோர் அநியாயமாக சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.
சுற்றுச்சூழல் சீர்கேட்டாலும் தங்களது உடல் நலம் கடுமையாக பாதிக்கபட்டதாலும் மேலும் வருங்கால சந்ததியினர் வாழ்வு காப்பற்றபடவும் ஒரு தனியார் ஆலையான ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடும் பொதுமக்களின் உணர்வுகளைக் பொருட்படுத்தாமல் இருந்த மாவட்டஆட்சியரும் அதிகாரிகளும் ,மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளும், தமிழக அரசும், மத்திய அரசும் பொதுமக்கள் அமைதியான முறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்றபோது, மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகத் தமிழக அரசின் காவல்துறை தடியடி நடத்தியதும்,கண்ணீர் புகைக்குண்டு வீசியதோடு கண்முடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதும் கடுமையான கண்டனத்துக்குரியது. பொதுமக்களுக்குப் பாதிப்பு என்று தெரிந்தும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகத் தமிழக அரசும், மத்திய அரசும் செயல்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
1980களில் போராட்டம் நடத்திய விவசாயிகளை துப்பாக்கிச்சூட்டில் சுட்டுக்கொன்றதை போல ஈழத்தில் சொந்த நாட்டுமக்களை அணுகுண்டு வீசி கொன்றதை போல தங்களது உரிமையை கோரிக்கையை வலியுறுத்தி போராடும் தன் நாட்டு மக்களை சுற்றுச்சூழலுக்கு பெரும்கேடு விளைவிக்கும் ஒரு தனியார் ஸ்டெர்லைட் ஆலைக்காக சுட்டுக்கொன்றது ஏற்றுகொள்ள முடியாத பெரும்பாதக செயல்.
மக்களின் உயிரும் வாழ்வாதாரமும் தான் முக்கியமே தவிர, மக்களை பாதிக்கின்ற மக்கள் விரும்பாத எந்தவொரு திட்டமும் தேவையில்லை, ஆகவே மக்கள் விரும்பாத அந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக தமிழக அரசும் மத்திய அரசும் தடைவிதித்து நிரந்தரமாக மூட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.