தமிழக அரசில் உள்ள பொதுத்துறை மற்றும் பல்வேறு முக்கிய துறைகளில் நிர்வாகச் சீர்கேடு மற்றும் இலஞ்ச ஊழல் காரணமாக அரசுக்குப் பெரிய அளவில் இழப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர். தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்து மத்திய தணிக்கை குழு ஒவ்வொரு ஆண்டும் துறை வாரியாக ஆய்வு செய்து, அறிக்கையை அரசுக்கு அளிப்பார்கள். இந்த அறிக்கையை தமிழக முதல்வரின் ஒப்புதலுக்குப் பிறகு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும். ஆளுநர்ர் ஒப்புதலுக்குப் பிறகு சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் பார்வைக்கு வைக்கப்படும். பின்னர் இது பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்படும்.
ஒன்றியத்தில் காங்கிரசு அரசு இருந்தபோது இதுபோன்ற தணிக்கைத் துறையின் அறிக்கையை வைத்துத்தான் காங்கிரசுக்கு எதிரான பெரிய அளவில் பரப்புரைகளை பாஜக மேற்கொண்டு ஆட்சியைப் பிடித்தது.
இதனால் மத்திய தணிக்கைக் குழுவின் அறிக்கை முக்கியமானதாக கருதப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக மத்திய தணிக்கைக் குழுவின் அறிக்கைக்கு அரசு அனுமதி தராமல் இருந்தது. இதனால் 2018-19 ஆம் ஆண்டுக்கான அறிக்கை முதல்வராக இருந்த எடப்பாடியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி, இந்த அறிக்கையை பல முறை திருப்பி அனுப்பிவிட்டார்.
இதனால் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படவில்லை. பொதுமக்களின் பார்வைக்கும் வைக்கப்படவில்லை. இந்தநிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் இந்த தணிக்கைக் குழு அறிக்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.
முதல்வரும் உடனடியாக அறிக்கைக்கு அனுமதி கொடுத்தார். இந்த அறிக்கை உடனடியாக ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநரும் இந்த அறிக்கையைப் பரிசீலித்து ஒப்புதல் வழங்கினார்.
இதனால் கடந்த 24 ஆம் தேதி சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் பார்வைக்கும், பொதுமக்களின் பார்வைக்கும் தணிக்கை குழுவின் அறிக்கை வைக்கப்பட்டது.
அந்த அறிக்கையில் ரூ.34 ஆயிரம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அதில் மின்துறையில் மட்டும் ரூ.25 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
கேபிள் டிவி கழகத்தில் மட்டும் ரூ.34 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு பல்வேறு துறைகளிலும் இழப்புகள் ஏற்பட்டிருந்தது. இந்த அறிக்கை வெளியானதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்துக்கு மத்திய அரசு ஒரு பக்கம் நிதி தராமல் இழுத்தடித்து வருகிறது. அதேநேரத்தில், அதிமுக அரசின் நிர்வாகச் சீர்கேட்டாலும், முறைகேடுகளாலும் ரூ.34 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனால் இழப்புகளுக்குக் காரணமான துறையின் அமைச்சர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தநிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக இலஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் கந்தசாமியை நேற்று முன்தினம் நேரில் அழைத்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை ஒரு மணி நேரம் நீடித்துள்ளது. அப்போது, தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள ரூ.34 ஆயிரம் கோடி இழப்பு குறித்தும், ஏற்கனவே பல்வேறு முறைகேடுகளை திமுக தலைவர்களே கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும்படி இலஞ்ச ஒழிப்பு துறையில் அதிமுக ஆட்சியின்போது கொடுக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்ததால், தற்போது அவற்றை விசாரிப்பது, தவறு செய்யும் அமைச்சர்கள், அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் படி நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது, சட்டப்படியும், தவறு இழைத்தவர்கள் மீது மட்டுமே கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தகுந்த ஆதாரங்களுடன் மட்டுமே வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அரசுக்கு இழப்புகளை ஏற்படுத்தியது யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சில ஆலோசனைகளை இலஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருக்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆலோசனையைத் தொடர்ந்து ஏற்கனவே உள்ள இலஞ்ச புகார்கள், அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள், நீதிமன்றம் உத்தரவிட்ட வழக்குகளை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். இதற்கான பணிகளை இலஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் கந்தசாமி, இணை இயக்குநர் பவானீஸ்வரி ஆகியோர் எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இது முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.